வெளியிட பொழுதுபோக்குகள் ஆயுளை அதிகரிக்கும்!
வணக்கம் சீனியர்
அருங்காட்சியகங்கள், சினிமா தியேட்டர், கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள் அல்லது கலைக் கண்காட்சிகளுக்கு வழக்கமாக செல்லும் வயதானவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக ஒரு லண்டன் ஆய்வு சொல்கிறது.
முதியவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த, அவர்களை சமூக கலை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் திட்டங்களில் கவனம் செலுத்துவது முக்கியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். லண்டனில் பி.எம்.ஜே(PMJ) என்கிற மருத்துவ இதழில் வெளியான இந்த ஆய்வறிக்கையில், முதியவர்கள் கலைகளில் ஈடுபடுவதன் மூலம் மனச்சோர்வு, முதுமை, நாள்பட்ட வலி மற்றும் பலவீனம் உள்ளிட்ட உடல் மற்றும் மன நல பிரச்னைகளிலிருந்து விடுபட்ட ஆரோக்கியம் மேம்படுகிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக தற்போது இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆய்வாளர்கள், கலை ஈடுபாடு மற்றும் இறப்பு ஆகியவற்றின் வெவ்வேறு அதிர்வெண்களுக்கு இடையிலான தொடர்பை ஆராயும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி அவர்கள் மேற்கொண்ட English Longitudinal Study-ல், இங்கிலாந்து மக்களில் 50 மற்றும் அதற்கு மேற்பட்ட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்கு கொண்ட தரவுகளின் அடிப்படையில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
2004-2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட முதியவர்களின் தியேட்டர், கச்சேரிகள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கண்காட்சிகள் உள்ளிட்ட கலை நடவடிக்கைகளின் அதிர்வெண்கள் அடிப்படையில் அளவிடப்பட்டது. பின்னர் பங்கேற்பாளர்கள் சராசரியாக 12 ஆண்டுகள் வரை பின்தொடரப்பட்டு அந்த காலகட்டத்தில் இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை(National Health Service NHS)-ஆல், பதிவு செய்யப்பட்ட இறப்பு தரவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் பின்தொடரப்பட்டு மேற்கொண்ட ஆய்வில் பொருளாதார, சுகாதாரம் மற்றும் சமூக காரணிகளை கணக்கில் எடுத்துக் கொண்டதில் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கலை நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களின் உயிரிழக்கும் அபாயம், எப்போதும் ஈடுபடாதவர்களைக் காட்டிலும் 14% குறைவாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- என்.ஹரிஹரன்
|