சந்தேகங்களும் விளக்கங்களும்



EYE CARE

உலகத்தை தரிசிக்க உதவும் கண்கள் நம் உடலின் மிக முக்கியமான ஓர் அங்கம். அதிநவீன கருவி போல நம் கண்கள் இயங்கும் விதத்தை ஆராய்ந்தால் அது புரிந்துகொள்ள முடியாத அதிசயமாகவும் இருக்கும். இத்தனை முக்கியத்துவம் கொண்ட கண்களைப் பற்றி பரவலாக எழும் 5 முக்கிய சந்தேகங்களையும், அவற்றுக்கான மருத்துவ விளக்கங்களையும் பார்ப்போம்...

* கண்களில் வீக்கம், அரிப்பு மற்றும் சிவந்து இருத்தல் ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?
இது Conjunctivitis எனப்படும் அலர்ஜி பிரச்னையாக இருக்கலாம். ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஏதோ ஒன்று கண்களை உறுத்துவதால் இப்படி ஏற்படலாம். அலர்ஜிக்கு எதிராக போராடக்கூடிய Histamine என்ற பொருளை கண்கள் தயாரிக்கும். அதன் விளைவாக இமைகளும், உள் பக்கம் உள்ள மெல்லிய திரை போன்ற மெம்பரேன் பகுதியும் சிவந்து, வீங்கி அரிப்பை ஏற்படுத்தலாம்.

எரிச்சலையும் கண்ணீரையும் வரவழைக்கலாம். அடிக்கடி இந்தப் பிரச்னை வருபவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது எது என்பது ஓரளவு தெரிந்திருக்கும். அந்த சூழலிலிருந்து விலகி இருப்பதே இந்த பிரச்சனைக்கான முதல் தீர்வு. கண்களில் அரிப்பெடுக்கும்போது தேய்க்கக்கூடாது. கண் மருத்துவரின் ஆலோசனையுடன் அலர்ஜியை விரட்டும் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம் அல்லது வேறு ஏதேனும் மருந்துகள் தேவையா என்பதையும் மருத்துவரிடம் கேட்டு
முடிவு செய்யலாம்.

* பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பே குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்ய வேண்டுமா?
குழந்தைகளுக்கு பிறந்த உடன் ஒரு முறையும், இரண்டு வயதில் மற்றும் ஐந்து வயதில் ஒரு முறையும் கண் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். குறிப்பாக குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கண் பரிசோதனை மிக மிக முக்கியம். குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு Retinopathy of prematurity என்ற பிரச்னை பெரிய அளவில் பாதிக்கிறது.

குறைமாதப் பிரசவம் என்று தெரிந்தால் குழந்தை பிறந்தவுடனேயே பச்சிளம் குழந்தைகளுக்கான கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். கவனிக்காமல் விட்டால் அது குழந்தையின் பார்வைத் திறனை முழுமையாக பாதிக்கலாம். குறைமாதப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு விழித்திரை பரிசோதனையும் மிக மிக முக்கியம்.

* அடிக்கடி களைப்படையும் கண்களுக்கு சிகிச்சை என்ன?
டிவி பார்ப்பது, புத்தகம் வாசிப்பது போன்று கண்களுக்கு அதிக வேலை கொடுக்கும்போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஓய்வு கொடுக்க வேண்டும். திரையிலிருந்தும், புத்தகத்திலிருந்தும் கண்களை விலக்கி, தொலைவிலுள்ள பசுமையான காட்சிகளைப் பார்க்கலாம். கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். செய்யாவிட்டால் கண்களில் உள்ள நீர் வறண்டு போகும். குளிர்ந்த நீரில் சுத்தமான காட்டன் துணியை முக்கி கண்களை மூடி அவற்றின் மேல் 2 நிமிடங்களுக்கு வைத்து ஓய்வெடுக்கலாம்.

* உயர் ரத்த அழுத்தம் கண்களை பாதிக்குமா?
ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்து அது கவனிக்கப்படாவிட்டால் விழித்திரையைச் சுற்றியுள்ள  ரத்த நாளங்களை பாதிக்கும். பல காலமாக உயர் ரத்த அழுத்தம் கவனிக்கப்படாமல் இருக்கும்போது Hypertensive retinopathy என்ற பாதிப்பை ஏற்படுத்தும். தலைவலி, தெளிவற்ற பார்வை, ஒரு பொருளைப் பார்ப்பதில் கண்களுக்கு அதிக அழுத்தமும் சிரமமும் கொடுக்கவேண்டிய கட்டாயம் போன்றவை இதன் அறிகுறிகள்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே முதல் சிகிச்சை. உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தை சரி பார்ப்பதோடு, கண்களையும் பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம்!

* கண்கள் சிவந்து இருப்பது ஏன்?
கண்களின் வெள்ளைப் பகுதியிலுள்ள நாளங்கள் வீங்குவதால் எப்படி சிவந்து போகலாம். கண்கள் வறண்டு போகும். அளவுக்கு அதிகமாக வெயிலில் அலைவது, தூசு மற்றும் மாசு கண்களில் நுழைவது போன்றவற்றாலும் இப்படி ஏற்படலாம். இதன் தொடர்ச்சியாக கண்ணீர் வடிதல், வலி மற்றும் பார்வைக் கோளாறு போன்றவையும் ஏற்படலாம்.

சிலருக்கு ஒவ்வாமையின் காரணமாக சளி பிடிக்கும்போது கண்கள் சிவக்கலாம். தவிர விழித்திரையில் கீறல், அளவுக்கதிக கான்டாக்ட் லென்ஸ் உபயோகம் போன்ற காரணங்களாலும் கண்கள் சிவந்து போகலாம். கண்கள் சிவந்து போவது என்பது பெரும்பாலும் சாதாரணமாகவே சரியாகி விடக்கூடியதுதான். சிவந்து இருப்பதோடு வலியோ, வீக்கமோ, கண்ணீர் வடிதலோ, அரிப்போ இருந்தால் அலட்சியம் கூடாது. உடனடியாக கண் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம். ஓய்வின்றி கண்களுக்கு அயர்ச்சியைக் கொடுக்கும் வேலைகளைத் தவிர்ப்பது நல்லது.

 - ராஜி