மருத்துவர்கள் தாக்கப்படுவது ஏன்?!



க்ரைம் டைரி

கடந்த மாதம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் இது. பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியின் உறவினர்கள் இருவர், பிரசவ அறைக்குள் காலணிகளோடு நுழைய முற்பட்டிருக்கிறார்கள். அவர்களை முதுநிலை மருத்துவ மாணவி தடுத்திருக்கிறார். அதே காலணியால் அடித்தும், மற்றொரு பெண்மணி முகத்தில் குத்தியும் மருத்துவ மாணவியை கடித்தும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களும், மருத்துவ உதவியாளர்களும் நோயாளியின் உறவினர்கள் மீது 2008-ம் ஆண்டு கொண்டு வந்த தமிழ்நாடு மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட செய்தியும் ஊடகங்களில் வந்தது.

மருத்துவர்களை நோயாளிகள் தாக்கும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் பலபகுதிகளிலும் அடிக்கடி
நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. நோயாளிகள் இப்படி நடந்துகொள்வது நியாயம்தானா? மருத்துவர்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம்? இந்த பிரச்னைக்குத் தீர்வு என்ன?

‘‘மருத்துவமனை மற்றும் மருத்துவர்களை பாதுகாப்பதற்காக 2008-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு சட்டம் இயற்றியது. இச்சட்டத்தின் கீழ் கைதானவர்களுக்கு ஜாமீன் இல்லாத தண்டனை வழங்கப்படும். ஆனால், இதுவரை ஒருவர்கூட இதில் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
ஒரு நோயாளிக்கு சிகிச்சை தொடங்குவதற்கு முன் அவருக்கு எதனால் அந்த நோய் வந்திருக்கிறது, நோயின் தன்மை, அந்த நோய்க்கான சிகிச்சை வாய்ப்புகள், சிகிச்சைகளால் ஏற்படும் பக்க விளைவுகள் போன்றவற்றை நோயாளியிடத்தில் வெளிப்படையாகப் பேசி தெளிவுபடுத்த வேண்டியது மருத்துவரின் கடமை. ஆனால், இதை நடைமுறையில் எல்லா மருத்துவர்களும் பின்பற்றுகிறார்களா என்றால் அதுவும் விவாதத்துக்குரியதுதான்.

பெரும்பாலான மருத்துவர்கள் நோயாளிகளுக்கு உரிய விளக்கம் கொடுப்பதில்லை. ஆங்கில மருத்துவத்தில் எல்லா மருந்துகளுக்குமே பக்க விளைவுகள் உண்டு. சட்டப்படி ஒரு மருந்தின் சாதக, பாதகங்களை நோயாளிக்கு மருத்துவர் சொல்ல வேண்டும். சில மாத்திரைகளால் அலர்ஜி உண்டாகி, ஒரு சில நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் வரக்கூடும். இதைப்பற்றி மருத்துவர் முன்னரே, நோயாளிக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படி விளக்கம் கொடுக்கப்படவில்லை என்றால் மருத்துவர் தவறான மருந்து கொடுத்துவிட்டார் என மருத்துவரின் மீது கோபப்படும் நிகழ்வுகள் நடக்கக்கூடும்.

மருத்துவரைத் தாக்கும் சம்பவங்கள் பெரும்பாலும் மருத்துவர்கள், நோயாளியின் உறவினர்களிடம் உண்மையை மறைப்பதாலேயே நடைபெறுகின்றன. சில நேரங்களில் நோயாளியின் அபாய கட்டத்தையும், இறப்பையுமே கூட மருத்துவர்கள் தெரிவிப்பதில்லை. பழியை நோயாளிகள் மீது போட்டு, அவர்கள் மீது திருப்பிவிட பார்க்கிறார்கள்.

அடுத்து நோயாளிகள் தவறான சிகிச்சை மற்றும் தவறான நோயறிதலால் ஏற்படும் பிரச்னைக்கு மருத்துவர் மட்டுமே பொறுப்பாகிறார் என்பதையும், மருந்தின் பக்கவிளைவுகளால் நோயாளிக்கு ஏற்படும் பிரச்னைக்கு மருத்துவர் பொறுப்பாகமாட்டார் என்பதையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நோயாளிகள் தெரிந்து கொள்ள வேண்டும். உறவினர்கள், நோயாளியின் அனைத்து விவரங்களையும் எதையும் மறைக்காமல், ஒன்றுவிடாமல் நோயின் வரலாற்றை மருத்துவரிடம் சொல்ல வேண்டும். அப்போதுதான் மருத்துவருக்கு இதுவரை என்ன நடந்தது? இனி தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க முடியும்.

நோயாளிக்கு எந்தெந்த மருந்துகள் அலர்ஜியை ஏற்படுத்தக் கூடியவை என்பதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். இது தங்களுக்கு பாதகமாக இருக்கும் என்று மருத்துவரிடம் மறைத்து விடுகிறார்கள். தற்போது மருத்துவர்களின் மீதான நம்பிக்கையை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். இதனால் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மீதுதான் நோயாளிகளின் தாக்குதல் அதிகமாக நடக்கின்றன. அதுவும் பயிற்சி மாணவர்கள், இளநிலை மருத்துவர்களே இந்த தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, மற்றும் சிகிச்சைக்கான போதிய உபகரணங்களோ, வசதிகளோ இல்லை என்ற காரணங்களால் மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஏழை மக்கள்தான் அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். அரசாங்க மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இல்லாதபோது, மக்கள் சார்பாக இந்த மருத்துவர்கள் அந்தக் குறைகளை சரி செய்ய முயற்சி எடுத்திருந்தால் மக்கள் மருத்துவர்களை நம்பியிருப்பார்கள். ஆனால், இவர்கள் செய்வதென்னவோ தங்களின் ஊதிய உயர்வு, ஆள் பற்றாக்குறை போன்றவற்றுக்காக போராடுவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

2008-ம் ஆண்டு மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் சட்டப்படி நோயாளிக்கு, நோய் அறியும் உரிமை இருப்பதால், மருத்துவர்கள் உண்மையை எடுத்துக் கூறுவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு நோயின் வரலாற்றை மருத்துவரிடம் மறைக்காமல் எடுத்துக் கூறுவதும் முக்கியம். மருத்துவர், நோயாளிக்கு இடையே தகவல் பரிமாற்றத்தில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும்.

இருதரப்பினரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். அரசாங்கமும் மருத்துவர்களை, நோயாளிக்கு எதிரானவர்களாக காட்டுவதை நிறுத்த வேண்டும். இவையெல்லாம் நடந்தால், தொடர்ந்து மருத்துவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் குறையலாம். நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மேல் நம்பிக்கையும் வளரும்!

- உஷா நாராயணன்