Medical Trends படிப்பதனால் இத்தனை பலனா?!



ரிலாக்ஸ்

கற்றலினால் ஏற்படும் நன்மைகளும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் பார்ப்போம். மூளை சுறுசுறுப்பு அடைய, கற்றல் மற்றும்  புதிய திறன்களை கற்றுக்கொள்வது அவசியமாகும். இதனால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன் மனம் புத்துணர்வு அடைகிறது. அதிகம் படிப்பதால் நிறைய புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்வதுடன் மற்றவர்களோடு விவாதிக்கவும் முடிகிறது. தன்னம்பிக்கையும் கூடுவதுடன் சவாலை எதிர்கொள்ளவும் முடிகிறது.

தொடர்ந்து படிப்பதால் Cortisol என்கிற மன அழுத்த ஹார்மோன் அளவு குறைகிறது. உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் தூக்கத்தினை மேம்படுத்தவும் வாசிப்பு உதவுகிறது. மூளை மறதி நோய் மற்றும் மூளை முதுமை போன்றவற்றுக்கு எதிராக போரிடுகிறது. அதிகம் படிப்பதால் தலைமைத்துவப் பண்பினை ஒருவர் பெறுவார்.

எந்த பிரச்னை வந்தாலும் அவற்றை மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமாக கோணத்தில் எதிர்கொள்ளும் பக்குவமும் கிடைக்கிறது. படிக்கும் வழக்கம் உடையவர்கள் புதிய திறன்களை தன்னகத்தே வளர்த்துக் கொள்கின்றனர். இதை தவிர்க்கும்போது, வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய இலக்குகளை தவறவிடுவதோடு மந்தநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

டெங்கு எச்சரிக்கை

ரத்தத்தட்டுக்கள்(Platelets) நம் உடலில் குறையும்போது டெங்கு வைரஸ் எளிதாகத் தாக்கும். ரத்தத்தை உறைய வைக்கவும், பாதுகாக்கவும் மிகப்பெரிய பங்கு ரத்த தட்டுக்களுக்கு உண்டு. டெங்கு வைரஸ் கிருமியானது ரத்தத்தட்டுக்கள் மட்டும் அல்லது தோலில் உள்ள செல்கள், சளி, இதயம், மூளை மற்றும் கண்களையும் பாதிக்கக் கூடியதாகும். ெடங்கு கொசு நம்மை தாக்காமல் இருக்க கொசு வலை பயன்படுத்த வேண்டும். நறுமணம் வீசும் சோப்போ அல்லது வாசனை திரவியங்களோ பயன்படுத்த வேண்டாம்.

ஏடிஸ் கொசுகள் என்று கூறப்படும் டெங்கு கொசுக்கள் நம்மை கடிக்காமல் அதனிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிய வேண்டியது அவசியம். ஏடிஸ் கொசுக்கள் சுத்தமான நீரிலும் தேங்கிய இருக்கும் தண்ணீரிலும் உற்பத்தியாகும். எனவே, தேங்கியிருக்கும் தண்ணீரை அவ்வப்போது அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்திருப்பதும் அவசியமாகும்.

முருங்கைக் கீரையின் சக்தி

முருங்கைக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் பல. நோய் எதிர்ப்பு சத்து மட்டும் அல்லாமல் சத்துக்குறைபாடு உள்ளவர்களுக்கு இரும்பு மற்றும் வைட்டமின் ஏ சத்தும் கூடுதலாக கிடைப்பதோடு ரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்(Antioxidants), கொடிய நஞ்சு(Arsenic toxins), அழற்சி(Anti- inflammatory) ஆகியவற்றிற்கு முருங்கைக் கீரை நன்கு பலன் தருகிறது.

பெண்களுக்கு எடை அதிகரிக்க காரணம்

Polycystic ovary syndrome (PCOS) அறிகுறிகள் தென்பட்டால் அதனால் எடை அதிகரிக்கலாம், ரத்தப்போக்கு, சருமத்தில் எண்ணெயால் ஏற்படும் முகப்பரு போன்ற பாதிப்புகளும் உண்டாகலாம். எனவே, பெண்கள் உடல் எடை அதிகரிக்கிறது என்று வெறுமனே கவலைப்படாமல் அது PCOS அறிகுறியா என்றும் மகளிர் நல மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள
வேண்டும்.

மூட்டுவலியிலிருந்து தப்பிக்க...

வரும் முன் காக்க வேண்டும் என்று நம் முன்னோர்களின் பொன்மொழிக்கு ஏற்ப அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளையும், பால் பொருட்கள், பருவக்கால பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை தேவையான அளவு  உண்பதால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதோடு மூட்டும் வலுப்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாற்காலியில் அதிக நேரம் அமர்ந்து இருப்பவர்களுக்கு  முழங்கால் வலி ஏற்படும். இவர்கள் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நாற்காலியில் அமர்ந்தபடி சிறிய உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் தொடையின் நரம்பு சுருண்டிருந்தால் தசையில் சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும்.

பற்கள் நலனில் அலட்சியம்

இந்தியாவில் மூன்றில் 2 குழந்தைகள் பல் சொத்தை போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவதாகவும், 10 பேரில் 9 ெபரியவர்கள் வாய் தொடர்புடைய ஏதேனும் ஒரு நோயால் அவதிப்படுகின்றனர் என்றும் ஒரு பிரபல பற்பசை கம்பெனிக்காக நடத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. ஈறு வீக்கம், வாய் துர்நாற்றம், ரத்தக்கசிவு, பற்களில் துவாரங்கள் போன்ற பிரச்னைகள் பரவலாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. பற்களின் நலம் பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவு இல்லாததே இந்த குறைபாடுகளுக்கு காரணம்’ எனவும் அந்த ஆய்வறிக்கை கூறியிருக்கிறது.

ரத்த வங்கியை கண்டுபிடித்தவர்கள்

ரத்த வங்கிகளை அமைத்து மக்களிடம் இருந்து ரத்ததானம் பெறும் வழக்கத்தை துவங்கி வைத்தவர்கள் ரஷ்யர்கள். குளிரூட்டும் பெட்டியில் ரத்தத்தை பாதுகாத்தால் செல்களை அழியாமல் காக்கலாம் என 1932-ம் ஆண்டு கண்டுபிடித்தனர்.

தைராய்டை தடுக்கும் உடற்பயிற்சி

நம் முன்னோர்களின் பணி உடல்சார்ந்த உழைப்பாக இருந்தது. அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். தற்சமயம் நம்முடைய வேலையின் தன்மை உடல்ரீதியான இயக்கங்கள் குறைந்ததாக இருப்பதால் உடற்பயிற்சி என்பது அவசியமானது. உடற்பயிற்சி செய்வதால் சீரான தூக்கம் கிடைப்பதோடு தைராக்சின் ஹார்மோனும் முழுமைபெற்ற நிலையில் சுரந்து தைராய்டு பிரச்சினையிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

செல்ஃபி எடுப்பவர்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்கள்

செல்ஃபி மோகம் பலரையும் பாடாய்ப்டுத்தி வருகிறது. இந்த செல்ஃபி பற்றிய உளவியல் ஆய்வு ஒன்று சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. நாட்டிங்காம் திரென்ட் பல்கலைக்கழகம்(Nottingham Trent University) நடத்திய ஆய்வில், தன்னம்பிக்கை குறைந்தவர்களே மிக அதிகமாக செல்ஃபி எடுக்கிறார்கள். குறிப்பாக, ஒரு நாளைக்கு 6 முறைக்கு மேல் தன்னைத்தானே படம் எடுப்பவர்கள், அந்த செல்ஃபிக்களை மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்காக சமூக வலைதளங்கள் மூலம் பகிர்கிறவர்கள் இதில் சிகிச்சை எடுக்க வேண்டிய நிலையில் உள்ள ஆபத்தானவர்கள் என்கிறது அந்த ஆய்வு.

நீர்ச்சத்தைத் தக்க வைக்க...

உப்பு நிறைந்த சோடியம் சம்பந்தப்பட்ட உணவு வகைகளை உட்கொள்கிறோமா என்று நம்மையே சோதனை செய்ய வேண்டும். மாவுச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. நீர்ச்சத்து உள்ள பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். தாகம் எடுக்கும்போது தவறாது தண்ணீர் பருக வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது அவசியம். இதனால் அளவுக்கு அதிகமாக உள்ள சோடியம் உடலில் இருந்து வெளியேறும். இதற்கு வெள்ளரிக்காய், திராட்சைப்பழம், செலரி, பீச் பழம் ஆகியவை உண்பது அவசியம்.

64 சதவீத இந்தியர்கள் உடற்பயிற்சியே செய்வதில்லை

இன்றைய உடலியக்கமற்ற வாழ்க்கைமுறையால் வரக்கூடிய உடல்பருமன், நீரிழிவு நோய்களைப்பற்றியும், ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையும் தரக்கூடிய உடற்பயிற்சியின் அவசியத்தைப்பற்றியும் இந்தியர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தாலும், நடைமுறையில் அதை பின்பற்றுவதில்லை என்கிற மின்டல் மார்க்கட் இன்டலிஜன்ஸ் ஏஜன்சியின் ஆய்வறிக்கை, இதற்கு அவர்களுக்கு போதிய உந்துதல் அல்லது நேரமின்மை காரணமாகச்
சொல்லப்படுகிறது.

இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவெனில், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையே தங்களின் முக்கிய லட்சியம் என்று சொல்லும் 46 சதவீதத்தினரில், 37 சதவீதத்தினர் மட்டுமே உடற்பயிற்சி செய்கிறார்கள். இவர்களும் வாக்கிங், ஜாக்கிங் போன்ற அடிப்படைப் பயிற்சிகள் மட்டுமே செய்வதாகவும், கடுமையான பயிற்சிகளான வெயிட் லிப்டிங், புஷ்-அப்ஸ் போன்றவற்றை செய்வதில்லை என்றும் மின்டல் ஆய்வு சொல்கிறது.

காற்று மாசு மனநலனையும் பாதிக்கும்

‘காற்று மாசுபாட்டின் அதிக வெளிப்பாடு, குழந்தைகளில் மூளை வளர்ச்சியை பாதிப்பதோடு வளர் இளம் பருவத்தில் உள்ளவர்களில் தற்போதுள்ள மனநல நிலைமைகளை மோசமாக்குகிறது. உடலியல்ரீதியான விளைவுகளை விட, மனரீதியாக அதிக சேதமடைவதாக, வால்ட்ர்ஸ் க்ளூவரால் என்பவர் லிப்பின்காட் போர்ட்ஃபோலியோ பத்திரிகையில் அளித்த அறிக்கை கூறுகிறது. அவர் அளித்த தரவுகளின்படி சராசரியாக PM2.5 டீவியேஷனுக்கு மேல் அதிகரிக்கும் 1 புள்ளி கூட 6.67 சதவீத மனநோய் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

குளிர்காலத்தில் வலி அதிகரிக்கலாம்

ஈரப்பதமான காற்று வீசும் நாட்கள் மூட்டுவலி, தசைகூட்டுவலி, ஒற்றைத் தலைவலி மற்றும் நரம்பியல் வலி போன்ற நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேலும் வலியை மோசமாக்கும் என்று NPJ டிஜிட்டல் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மழைக்காலத்திலும், வெயில் காலத்திலும் இவர்களுக்கு வலி குறைந்து காணப்பட்டாலும், குளிர்காலத்தில் அதிக வலியால் அவதிப்படுவதாக இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில்....

இரவு நேரத்தில் புரோலாக்டின்(Prolactin), காபா(Gaba), அடினோசின்(Adenosine) போன்ற ஹார்மோன்கள் போதுமான அளவு சுரக்க வேண்டும். அப்போதுதான் நல்ல தூக்கம் கிடைக்கும். காபி, டீயில் உள்ள வேதிப்பொருட்கள் அடினோசின் உற்பத்தியை குறைப்பதால் தூக்கமின்மை ஏற்படுகிறது.