நோயை வெல்ல மன உறுதி தேவை!



நாட்டு நடப்பு

கடுமையான வயிற்றுவலி காரணமாக பெண் தற்கொலை, விபத்தில் காலை இழந்ததால் வாலிபர் தற்கொலை போன்ற செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். நோயின் காரணமாக தற்கொலை முடிவை எடுக்கும் அளவுக்கு சிலர் ஏன் செல்கிறார்கள்?! தீரா நோய்களுக்கு தற்கொலை தீர்வாகுமா?! மனநல மருத்துவர் சேகர் ராஜகோபாலிடம் கேட்டோம்...

‘‘மரணத்திலிருந்து தப்பிய பலர் என்னிடம் ஆலோசனைக்கு வருவார்கள். அந்த அனுபவங்களில் சிலவற்றை சொல்ல முடியும். அதுபோல் ஒரு நாள், 58 வயதான ஒரு பெண், தன்னுடைய குடும்பத்தோடு வந்திருந்தார். அந்த பெண்மணி தரையை நோக்கியபடி சோகமாக அமர்ந்திருந்தார். இந்த இறுக்கமான மௌனத்தை கலைக்க நினைத்த நான், ‘என்ன விஷயம்? சொல்லுங்கள்’ என்றேன். மிகுந்த வருத்தத்துடன் அந்த பெண்ணின் மகள் பேச ஆரம்பித்தார்.

‘டாக்டர், என் அம்மாவுக்கு சோரியாசிஸ் என்ற தோல் நோய் கடந்த 20 வருடங்களாக உள்ளது. எத்தனையோ சிகிச்சை முறைகளை கடைபிடித்தும் குணமாகவில்லை. மனமுடைந்து மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். நாங்கள் மருத்துவமனையில் அனுமதித்து, ஒரு வாரம் கழித்து டிஸ்சார்ஜ் ஆன உடன் உங்களிடம் மனநல ஆலோசனை பெற கூட்டி வந்துள்ளேன்’ என்றார்.

ஒரு வகையில் அவர்கள் மனநல மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும் என்று முடிவெடுத்தது பாராட்டுக்குரியதே. நிறைய தற்கொலைகளை தடுத்து நிறுத்துவது நிச்சயம் சாத்தியமே. அந்த பெண்மணிக்கு மனநல சிகிச்சை(Psycho Therapy) மற்றும் மருந்துகள் மூலம் மனநல சிகிச்சையும்(Psychopharmacotherapy) கொடுத்தபின், தற்போது அவர் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு நலமுடன் இருக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பே உலக சுகாதார நிறுவனம் வரும் 2020-ம் ஆண்டில் இதய நோய்களுக்கு அடுத்தபடியாக மனச்சோர்வு நோய் (Depressive Disorder) மனித வாழ்வில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அறிவித்திருந்தது. மருத்துவமனைகளில் உடல் சார்ந்த நோய்களின் பாதிப்புகளினால் தீவிரமான மன அழுத்தத்துக்குள்ளாகி, தற்கொலை செய்துகொள்ளும் முடிவினை மேற்கொள்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
ஒரு மனநல மருத்துவராக இதுபோன்ற பல சம்பவங்களை நான் எதிர்கொள்கிறேன். அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே இதுபோன்ற தற்கொலைகளை நூற்றுக்கு நூறு நடக்காமல் தவிர்க்க முடியும் என்பதே ஒரு நல்ல செய்தி.

ஒவ்வொரு மாதவிடாயின்போதும் அடிவயிற்றில் பொறுக்க முடியாத அளவு வலி உண்டாவதன் காரணத்தினால்கூட தற்கொலை முயற்சியில் இறங்கிய பெண்கள் உண்டு. அதிலும் புற்றுநோய் அல்லது எய்ட்ஸ் நோய் என்று மருத்துவர் முதன் முறையாக அறிவிக்கும்போது, ஒவ்வொரு நோயாளியின் மனமும் நிச்சயம் புயலில் அகப்பட்ட படகுபோல அலைக்கழிக்கப்படும்.

சர்வதேச அளவில் மனநோய்களை பகுத்தறிய ICD 10(International Statistical Classification of Diseases and related Health Problems) எனப்படும் புத்தகம் உலக சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்பட்டு மருத்துவர்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதில் உடல் நோய்களின் காரணத்தினால் ஏற்படும் மனச்சோர்வு என்று ஒரு தனி அத்தியாயமே உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் பார்த்தால், நிறைய மாணவர்களின் தற்கொலை செய்திகளையும் பார்க்க முடிகிறது. தேர்ச்சி பெறாத மாணவர்களும் சரி, குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும் சரி தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் செயலில் ஈடுபடுகிறார்கள். கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுக்கிறார்கள். ஆனால், அத்தனை பேருமா தற்கொலையில் ஈடுபடுகிறார்கள். இல்லையே... அப்போது மனச்சோர்விற்கு குறைந்த மதிப்பெண்கள்தான்
காரணமா? இல்லவே இல்லை.

மன அழுத்தத்துக்கு விதிவிலக்குகள் யாரும் இல்லை. பிரபல இந்தி திரைப்பட நடிகை தீபிகா படுகோனே, உலகத்திலேயே மிகப்பிரபலமான மற்றும் ஆளுமை மிக்க 100 நபர்களில் ஒருவராக கருதப்படுபவர். இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் திரைப்பட நடிகையும் கூட. அப்படியிருக்க அவருக்கும் மனச்சோர்வு ஏன் வர வேண்டும்? யோசிக்க வேண்டிய விஷயம். ஆமாம்... எல்லோருக்கும் மன அழுத்தம் வரத்தான் செய்யும். இதில் எந்த பாகுபாடும் கிடையாது.

‘எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்’ என்று சொல்வார்கள். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், மனிதனுடைய மூளையில் டோபமைன், செரடோனின், குளுடமேட் போன்ற பெயர்களில், எண்ணற்ற வேதிப் பொருட்கள் (Neuro Chemicals) உள்ளன. மூளையில் இவற்றின் சுரப்பு சமநிலையில் இருக்கும்போது, நம் எண்ணங்கள் நேர்மறையாக இருக்கும். மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும். பகுத்திறந்து ஆராயும் திறன், நினைவாற்றல், சமுதாயத்தில் நடந்துகொள்ள வேண்டிய விதம், இவை அனைத்தையுமே இந்த நியூரோ கெமிக்கல்கள்தான் தீர்மானிக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால் பொம்மலாட்டத்தில் எப்படி ஒரு கலைஞனின் கைவிரல் நுனிகளில் பொம்மைகளை ஆட்டுவிக்கிறானோ அதைப்போலத்தான் நாம் மூளையில் இருக்கும் வேதிப்பொருட்களால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாக நாம் இருக்கிறோம்.

நம்முடைய எதிர்மறை எண்ணங்களுக்கும், மன அழுத்தத்திற்கும், தற்கொலை எண்ணம் தூண்டப்படுவதற்கும் இந்த நியூரோ கெமிக்கல்களின் சுரப்பு குறைவதே காரணம். தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன பல பேர்களின் உடலில் முதுகுத்தண்டு வழியாக ஊசியை செலுத்தி மூளையில் இருக்கும் தண்ணீர் போன்ற திரவத்தை(Cerebro Spinal Fluid) சேகரித்து நுண்ணோக்கி பரிசோதனை செய்து பார்க்கும்போது, அதில் செரடோனின் எனும் வேதிப்பொருள் குறைவாக இருப்பதை ஆராய்ச்சிகளின் முடிவில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதிலிருந்து, செரடோனின் குறைவாக உள்ள நபர்களிடம் மன அழுத்தமும், தற்கொலை எண்ணங்களும் மேலோங்கி இருப்பது தெளிவாக உணர முடியும்.

தற்கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியவர்களுக்கு அதற்குப்பின் அந்த எண்ணங்கள் வராமலிருக்க, மனநல மருத்துவரின் ஆலோசனை கண்டிப்பாக தேவைப்படுகிறது. இவர்களுக்கு ஆலோசனையோடு, மருத்துவ சிகிச்சையும் கொடுக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் மனநல மருத்துவரிடம் செல்வதையே சங்கடமாக உணர்கிறார்கள். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எத்தனை தீவிரமான நோயாக இருந்தாலும் அதனை மன உறுதியோடு எதிர்கொள்ளும் நம்பிக்கையை உருவாக்கி, வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையும், மன உறுதியும் இருந்தாலே எத்தனை தீவிரமான நோயையும் எதிர்கொண்டு வென்றுவிடலாம். இவை எல்லாவற்றிக்கும் மேல் குடும்ப உறுப்பினர்கள், நோயாளிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். ‘உங்களுக்கு வந்த நோயை நல்ல மருத்துவர் ஒருவரிடம் காண்பித்து கண்டிப்பாக சரி செய்துவிடலாம் என்று நம்பிக்கை அளித்து ஆதரவு தர வேண்டும்.

இரண்டு கால்களுமே இல்லாத எத்தனையோ பேர் பல சாதனைகளை செய்யவில்லையா? உங்களாலும் சாதிக்க முடியும். இந்தத் தேர்வில் தோல்வி அடைந்தால் என்ன? அல்லது மதிப்பெண் குறைந்தால் என்ன? அடுத்த தேர்வில் நன்றாக எழுதிக்கொள்ளலாம்; உயிர் போனால் வராது’ போன்ற உற்சாகம் தரும் வார்த்தைகளைக் கூற வேண்டும்.

மன அழுத்தத்தில் இருப்பவர்களை குடும்ப உறுப்பினர்கள் கூர்ந்து கவனித்தால், அவர்களது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை தெரிந்து கொண்டு விடலாம். எங்கேயாவது ஒரு இடத்தில் நான் இருப்பதற்கு போவதே மேல்... என்ற எதிர்மறையான வார்த்தைகளைச் சொல்லாமல் இருக்க மாட்டார்கள். இவர்களை மிக கவனத்தோடு பார்த்துக் கொள்ள தவறக்கூடாது. மனநலமே வாழ்வின் நலம்!''

- உஷா நாராயணன்