வேலூர் அரசு மருத்துவமனைரவுண்ட்ஸ்

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில், முதல் சுதந்திரப் போராட்டம் தொடங்கிய இடம் வேலூர் என்கிறார்கள் வரலாற்று வல்லுநர்கள். வட நாட்டில் 1857-ம் ஆண்டில் சிப்பாய் கழகம் தொடங்குவதற்கு முன்பே 1806-ல் ஏற்பட்ட வேலூர் புரட்சிதான் மிகவும் முக்கிய தொடக்கமாக இருந்தது என்ற குறிப்புகளும் உண்டு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த வேலூர் நகரில் 33.95 ஏக்கர் வளாகத்தில் பிரம்மாண்டமான பெரிய அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. மருத்துவமனை தொடர்பான தகவல்களை மருத்துவக்கல்லூரி டீன் சாந்திமலர் நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் வேலூரில் ஆற்காடு சாலையில் 1882-ம் ஆண்டு சிறிய அளவில் அரசு மருந்தகம் ஒன்று தொடங்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குபின் அதே கட்டிடத்தில் ஒரு மருத்துவமனையும் செயல்பட தொடங்கியது. 1915-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் லார்டு பென்ட்லண்ட் வேலூரின் மையப்பகுதி புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார்.
2003-ம் ஆண்டு வேலூரில் இருந்து 8 கி.மீட்டர் தொலைவில் அடுக்கம்பாறையில் திருவண்ணாமலை செல்லும் சாலையில் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக்கல்லூரி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் தொடங்கப்பட்டது.

2005-ம் ஆண்டு 100 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளுடன் மாணவர் சேர்க்கையை தொடங்கிய மருத்துவ கல்லூரியில், இன்று முதுநிலை மருத்துவப்படிப்புக்கு 35 சீட்டுகள், துணை மருத்துவ படிப்புகள், சான்றிதழ் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. எங்கள் மருத்துவமனையில் தினசரி 2,500 பேர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். 1500-க்கும் அதிகமானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எங்கள் மருத்துவமனையின் பொது நலப்பிரிவு, சிறுநீரகவியல்துறை, குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை, நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, முடநீக்கியல்துறை, மகப்பேறு மருத்துவத்துறை, குழந்தைகள் நலத்துறை, பொது அறுவை சிகிச்சை துறை, மயக்கவியல் துறை, நுண்கதிர்வீச்சுத்துறை, நரம்பியல்துறை, தோல்நோய் மருத்துவப்பிரிவு, பால்வினை நோய் பிரிவு என பல்வேறு துறைகளாக மருத்துவமனை நிர்வாகம் பிரிக்கப்பட்டுள்ளது. 150 டாக்டர்கள், 120 மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் பணியில் உள்ளோம். அனைத்து பிரிவிலும் அவுட்சோர்சிங் முறையில் 200 பேர் என
நியமித்துள்ளோம்.

ஆர்.எம்.ஓ இன்பராஜ் நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சைகளை மேம்படுத்தவும், குற்றச்செயல்கள் நிகழாமல் தடுக்கும் விதமாகவும் அனைத்து வார்டுகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நோயாளியுடன் தங்கும் குடும்ப உறுப்பினருக்கு(Attender) ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது. ரத்த அணுக்கள் சம்பந்தப்பட்ட குறைபாடுகளை கண்டறிய அதிக நவீன Dio Hb A2/Hbf அனலைசர் கருவி இங்கு உள்ளது. அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தனது மருத்துவக்கல்வி மற்றும் சிகிச்சைக்கான சேவையில் அகில இந்திய அளவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பட்டியலில் 6-வது இடத்தை பெற்றுள்ளது.

அவசர சிகிச்சைத்துறை தலைவர் காந்த்அவசர சிகிச்சைத்துறை மாரடைப்பு சிகிச்சை, பக்கவாதம், விஷமுறிவு சிகிச்சை, தீப்புண் சிகிச்சை, விபத்து அவசர சிகிச்சை, குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு என 6 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சென்று வர தனிப்பாதை, நடந்து செல்பவர்களுக்கு தனி நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. தினசரி 200 பேர் வரை அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.
அறுவை சிகிச்சை துறை தலைவர் ராஜவேலுநவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மேற்கொள்கிறோம்.

வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய எண்ேடாஸ்கோபி மற்றும் கொலனோஸ்கோப் பரிசோதனை மேற்கொள்கிறோம். சாலை விபத்துகள் பெருகி வரும் இன்றைய காலக்கட்டத்தில், படுகாயங்களுடன் வருபவர்களுக்கு தேவையான உடனடி உயர்தர சிகிச்சை அளித்து வருகிறோம்.

பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் குமரேசன்எங்கள் துறையில் ஒரு முதன்மை மருத்துவர், 12 உதவி பேராசிரியர்கள் உள்ளனர். 4 யூனிட்கள் உள்ளன. ஒவ்வொரு யூனிட்டுக்கும் தலா 800 புறநோயாளிகள் வரை சிகிச்சைக்காக வருகின்றனர். செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரையிலான மாதங்களில் 90 முதல் 110 பேர் வரையும் காய்ச்சல் உட்பட பருவ கால நோய்களுக்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

இதுதவிர டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 18 டயாலிசிஸ் உபகரணங்களுடன் செயல்பட்டு வருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சையில் முன்னுரிமை அளிக்கிறோம். கடந்த ஆண்டு மொத்தம் 6,762 பேருக்கு
டயாலிசிஸ் சிகிச்சை அளித்துள்ளோம்.

எலும்பு முறிவு சிகிச்சை தலைவர் மோகன்காந்தி

 எங்கள் துறையில் ஒவ்வொரு ஆண்டும் 1,600 பேருக்கு எலும்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பிரிவில் புறநோயாளிகளாக ஆண்டுக்கு 45,000 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கால்கள் வளைந்த நிலையில் பிறந்த 700 குழந்தைகளுக்கு, எலும்பை சரி செய்வதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர முதுகு தண்டுவடம், எலும்பு புற்றுநோய், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்கிறோம்.

குழந்தைகள் நலத்துறை தலைவர் தேரணிராஜன்

எங்கள் பிரிவில் 60 படுக்கைகளும், தீவிர சிகிச்சை பிரிவில் 10 படுக்கைகளும், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் 40 படுக்கைகளும், அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டப்பிரிவில் 20 படுக்கைகளும் உள்ளன. எங்கள் பிரிவில் குறைப்பிரசவம், கருவிலேயே மூளை வளர்ச்சி, காது கேளாமை, வாய் பேச முடியாமை, பார்வை கோளாறு உட்பட பல பிரச்னைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். தமிழகத்தில் எங்கும் இல்லாத பார்வை குறைபாட்டை நிவர்த்தி செய்யும் டார்க் ரூம் லேசர் சிகிச்சை வசதி எங்கள் மருத்துவமனையில் உள்ளது.

இதயவியல் சிகிச்சை பிரிவு டாக்டர் சபாபதி

இதயவியல் சிகிச்சைப்பிரிவில் கேத் லேப் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஞ்சியோ கிராம் டெஸ்ட் செய்து மாரடைப்புக்கு சிறந்த சிகிச்சை வழங்குகிறோம். இதயவியல் துறையில் இசிஜி, எக்கோ ஸ்கேன் மற்றும் டிஎம்டி பரிசோதனைகளையும் மேற்கொள்கிறோம். இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரம் புறநோயாளிகளும், 400 முதல் 500 புதிய நோயாளிகளும் பயனடைகின்றனர்.

தீவிர இதய சிகிச்சை பிரிவில் 10 படுக்கைகளும், பொது இதய நோய் பிரிவில் 12 படுக்கை வசதிகளும் உள்ளது. இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 150 முதல் 180 உள்நோயாளிகள் பயன்பெறுகின்றனர். EECP(Enhanced External CounterPulsation) மருத்துவ வசதி மூலம் மாரடைப்பு மற்றும் இதய செயல்பாடு குறைந்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மற்றும் ஆஞ்சியோ இல்லாமலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மயக்கவியல் துறைத்தலைவர் டாக்டர் கோமதி

லேப்ரோஸ்கோபிக் உட்பட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரேடியோ தெரபி, ஆன்காலஜி தொடர்பான சிகிச்சைகளுக்கு நோயாளிகள் சென்னைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். எங்கள் மருத்துவமனையில் மனநல மருத்துவ பிரிவில் பிரபல தனியார் மருத்துவமனைகளில் இருந்தும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர் மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வருகின்றனர். கர்நாடகாவின் பெங்களூரூ, கோலார், ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் என கடந்த ஆண்டு மேல் சிகிச்சைக்காக 32,573 புறநோயாளிகளும், 223 உள்நோயாளிகளும் எங்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

கல்லூரியின் மைக்ரோ பயாலஜி துறையில் ஐ.சி.எம்.ஆர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் உதவியுடன் டெங்கு, சிக்கன்குனியா, எலிக்காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் என 8 வகையான நோய்களுக்கான கண்காணிப்பு ஆய்வகம் செயல்பட்டு வருகிறது.

தலைமை செவிலியர் ஷீலா வசந்தி

350 செவிலியர்கள் 3 ஷிஃப்ட் அடிப்டையில் இங்கு பணியில் உள்ளோம். 37 ஆண்டுகளாக செவிலியராக உள்ளேன். மருத்துவருக்கு அடுத்தபடியாக நோயாளிகளை கவனிப்பது நாங்கள்தான். சுகாதார சேவையில் குறைகளை சரி செய்து சிறப்பான மருத்துவ சேவை வழங்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். சிறப்பான மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவ்வப்போது ஆய்வு கூட்டங்கள் நடத்துகிறோம். புகார்கள் தொடர்பாக விவாதித்து உடனுக்குடன் குறைகளை நிவர்த்தி செய்கிறோம்.

கூலித்தொழிலாளி சங்கரன்(உள்நோயாளி)

நான் இந்த மருத்துவமனையில் புறநோயாளியாகவும், உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்று இருக்கிறேன். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இங்கு அனுமதிக்கப்பட்டேன். தனியார் மருத்துவமனைக்கு ஈடான கனிவான கவனிப்புடன் சிகிச்சை அளிக்கின்றனர். இது இங்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

- சுந்தர் பார்த்தசாரதி, எஸ்.தனசிங்

படங்கள் : எஸ்.வடிவேல்