முதியோர் பல்கலைக்கழகம்



வணக்கம் சீனியர்

சீனாவில் தற்போது முதியவர்களுக்கான பல்கலைக்கழகங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட முதியவர்களுக்கான பள்ளிகள் மட்டுமே 70 ஆயிரத்துக்கும் மேல் கொண்டிருக்கும். இவற்றில் அறிமுகப்படுத்தப்படும் வகுப்புகள், ஆன்லைனில் வெளியான அடுத்த நொடியிலேயே பதிவு செய்யத் தொடங்கிவிடுகின்றனர். அப்படி என்ன இதில் சிறப்பு? பள்ளிகளில் அப்படி என்னதான் சொல்லிக் கொடுக்கிறார்கள்?

மொழி பாடங்கள், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் வர்த்தகம், ஓவியம், நடனம், இசைக் கலைகளும், ஷ்யூய் ஜியாவோ, டாய் சி, குங்க்ஃபூ, வூஷீ போன்ற தற்காப்பு கலைகள், முதியவர்களுக்கு தேவையான இயக்கப் பயிற்சிகள் மற்றும் ஓய்வுகால வாழ்க்கைக்கு உதவக்கூடிய விஷயங்களையும் கற்றுக் கொடுக்கிறார்கள்.

இந்த வயதில் வாழ்வதால் யாருக்கு என்ன பயன்?

மற்றவருக்கு சுமையாக இருக்கிறோமே என்று வாழ்க்கையின் விரக்தி நிலையில் இருந்தவர்கள் கூட இந்த முதியோர் கல்விமுறையால் தங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், முன்பைவிட மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். மேலும் இந்த பள்ளிகளில் சேர்ந்ததிலிருந்து உயிர் வாழ வேண்டும் என்ற விருப்பம் வலுவடைந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

தங்களது தனிமையை எதிர்த்துப் போராடவும், நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் மற்றும் தங்கள் முதுமையைத் தள்ளிப்போடவும் இங்கு கற்றுக் கொடுக்கப்படும் பாடங்கள் மிகவும் பயனுள்ளவையாய் இருப்பதாகவும் சொல்கின்றனர் இங்கு பயிலும் முதியவர்கள்.

வயதாகிவிட்டால் உன்னால் எதுவும் செய்ய முடியாது, வெளியே போய் எங்காவது விழுந்து கிடக்காதீங்க என்று சொல்வது வழக்கம். இதனால் வீட்டுக்கு உள்ளேயே அடைத்து வைப்பது அல்லது முதியோர் இல்லங்களில் படுக்கையில் முடக்குவது போல் இல்லாமல், அவர்களுக்கான பள்ளிகள் உருவாகி வருவது நல்ல விஷயம்தான்.

இந்தியாவுக்கு இதுபோன்ற பள்ளிகள் வரலாம். வராமலும் போகலாம். ஆனால், இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் உண்டு. முதுமையை சுமையாக நினைக்காமல் புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். அதற்கு வீட்டில் உள்ளவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதுவே முதியவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுடன் அல்ஸைமர் போன்ற நோய்களை அண்ட விடாமல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்!

- உஷா நாராயணன்