இயற்கையுடன் இணைந்திருங்கள்!Centre Spread Special

என்னதான் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மனிதன் தன்னை ஒன்றுபடுத்திக் கொண்டாலும், அவன் என்றுமே இயற்கை அன்னையின் குழந்தைதான். பஞ்சபூதங்களினால் ஆனவன்தான் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள் இதனையே அடிப்படை தத்துவமாகக் கொண்டு சிகிச்சை அளிக்கின்றன. நவீன மருத்துவமும் இயற்கையைப் புறக்கணிப்பதில்லை என்பதை
கவனிக்க வேண்டும்.

இத்தனை மகத்துவம் கொண்ட இயற்கையிடம் இருந்து மனிதன் விலக ஆரம்பித்தபோதுதான் நோய்கள் அவனைத் தாக்க ஆரம்பித்தது. இதனை மேலும் வலிமையாக உறுதிப்படுத்துகிறது ஒரு சமீபத்திய ஆய்வு.

ஒரு நாளில் 20 நிமிடங்களாவது இயற்கையுடன் இணைந்திருக்கும் மனிதர்களிடம் மன அழுத்த ஹார்மோன் குறைவதுடன், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தமும் சீராகிறது என்பதையே ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த ஆய்வுக்காக 36 நகரங்களைச் சேர்ந்த நகரவாசிகளின் வாழ்க்கை முறை ஆய்வு செய்யப்பட்டது. கட்டடங்கள், ஏசி அறைகள், கணிப்பொறி, மொபைல் என நவீன வாழ்க்கையைத் தாண்டி நாள் ஒன்றுக்கு 20 நிமிடம் வரை செலவழிப்பவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

அந்த குறிப்பிட்ட நேரத்தில் புத்தகம் வாசிப்பதற்கோ, பேசுவதற்கோ, இண்டர்நெட் பயன்பாட்டுக்கோ அனுமதி இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளப்பட்டது. நடைபயிற்சி மேற்கொள்ளவும், அமைதியாக ஓர் இடத்தில் அமரவும் அனுமதி தரப்பட்டது.

வாரத்தில் சராசரியாக 3 நாட்களில், சராசரியாக 30 முதல் 60 நிமிடம் வரை என்று வரையறுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு உள்ளானவர்களின் உமிழ்நீரின் மாதிரியை சோதனைக்காக எடுத்துக் கொண்டனர். அதில் மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்ட்டிசோல் ஹார்மோன் விகிதத்தில் பெரும் மாறுதல் தெரிந்தது. முக்கியமாக, நாள் ஒன்றில் 30 நிமிடம் இயற்கையுடன் இணைந்திருப்பவர்களின் மன அழுத்த ஹார்மோன் குறைந்து, இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருந்தது.

‘நோய் தீர்க்கும் மாத்திரையை ஆங்கிலத்தில் Pills என்று அழைக்கிறோம். இயற்கையே நமக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வல்லமையுடன் இருப்பதால் அதனை Nature pills என்று வர்ணிக்கலாம்’ என்று சிலாகிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். Frontiers in psychology இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

- ஜி.ஸ்ரீவித்யா