இலவச நிமோனியா தடுப்பூசிசபாஷ்

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இதய நோய், நுரையீரல் நோய்த்தொற்று உள்ள குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் பாதிக்கும் நுரையீரல் அழற்சி நோய்களில் நிமோனியாவும் ஒன்று. அதிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இது அதிகம் தாக்குகிறது. உரிய நேரத்தில் கவனிக்காவிட்டால் உயிரிழப்பையும் ஏற்படுத்திவிடக் கூடியது என்பதால் அதிக கவனம் செலுத்த வேண்டிய ஆபத்தான விஷயமாகவும் நிமோனியா இருக்கிறது.

நிமோனியாவுக்கான தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம், வரும் முன்னரே காத்துக் கொள்ள முடியும். ஆனால், நிமோனியா தடுப்பூசியான Pneumococcal Vaccination போட்டுக் கொள்ள ரூபாய் 4 ஆயிரம் வரை செலவாகும். ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தட்டம்மை, போலியோ, ரோட்டா வைரஸ் உள்ளிட்ட 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் தடுப்பூசிகள் மட்டும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுவதில்லை.

இந்நிலையில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இதய நோய், நுரையீரல் நோய் தொற்று உள்ள குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக சோதனை அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட குழந்தைகள், நுரையீரலில் உள்ள நோய்க்காக சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் அவர்களுக்கு நிமோனியா காய்ச்சல் வர அதிக வாய்ப்புள்ளது. அந்த குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் நிமோனியா தடுப்பூசி போட வேண்டும் என்றால் தனியார் மருத்துவமனைகளையே மக்கள் நாட வேண்டிய நிலை இனி தவிர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள்.  இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் நடைமுறைக்கு வரட்டும்!

 - க.இளஞ்சேரன்