7 மணி நேரம் ஆபரேஷன் நடக்கும்... தண்ணீர் குடிக்கக் கூட நேரம் இருக்காது!



சல்யூட்

 ஓர் அறுவை சிகிச்சை மருத்துவரின் அனுபவம்


இதுவரை அறுவை சிகிச்சைகள் பற்றியும், அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளியின் அனுபவம் பற்றியும் நிறைய பேசியிருப்போம். மணிக்கணக்காக அறுவை சிகிச்சைகள் நிகழ்கின்றன என்பதால் முதன்முறையாக ஒரு அறுவைசிகிச்சை நிபுணரின் அனுபவத்தை தெரிந்து கொள்ள விரும்பினோம். இதய சிகிச்சையில் 40 ஆண்டுகால அனுபவம் கொண்ட டாக்டர் பஷி இங்கே தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

மனிதன் நன்றாக வாழ இதயம் முக்கியமான உறுப்பு என்பது எல்லோரும் அறிந்ததுதான். இன்னும் சொல்லப் போனால் உடலில் மற்ற எல்லா உறுப்புகளையும் விட இதயம் மிகவும் முக்கியமானது. எல்லோருடைய வாழ்விலும் போராட்டம் இருக்கும். ஆனால், இதயப் பிரச்னை உள்ளவர்களுக்கு வாழ்வில் சில நேரங்களில் வாழ்வா? சாவா? என்ற போராட்டத்திற்கே தள்ளப்படும் சூழல் கூட உருவாகும். அப்படிப்பட்ட இதயத்தை அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரின் அனுபவங்கள் அளப்பரியது.

நான் ஒரு மருத்துவர் பரம்பரையைச் சார்ந்தவன். நான் கேரளாவில் கொச்சினில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை(MBBS) கோட்டயம் மெடிக்கல் காலேஜில் முடித்தேன். கேரளாவில் படித்தேன். உயர் படிப்பை(General surgery trainer) திருவனந்தபுரத்தில் படித்தேன்.

அதன்பிறகு வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை பயிற்சி பெற்றேன். அப்போதுதான் மூன்று ஆண்டுகள் வரை Bypass surgery செய்ய ஆஸ்திரேலியாவில் பயிற்சி எடுத்தேன். அதன் பின்னர் தமிழ்நாடு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்தேன். அதன் பிறகு 10 ஆண்டுகள் தனியார் மருத்துவமனையில் முதன்மை இதய அறுவை சிகிச்சை நிபுணராக 23 ஆண்டுகள் வரை பணிபுரிந்திருக்கிறேன்.

சராசரியாக 40 ஆண்டுகளாக இந்த துறையில் இருந்து வருகிறேன். எனக்கு இதய அறுவை சிகிச்சையின் மீது அதிக ஆர்வம் ஈடுபாடும் இருந்ததால்தான், இத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். அந்தக்காலத்தில் Close heart Surgery மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. அதோடு Cardiac Surgery மற்றும் Bypass Surgery செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படும். அது கடினமாகவும் இருக்கும். தற்போது Open Heart Surgery செயல்பாட்டில் வந்துவிட்டது. அதோடு நவீன வளர்ச்சியின் காரணமாக மிகவும் சுலபமாகவும் உள்ளது. வசதி வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.

இன்று அறுவை சிகிச்சைகளுக்கு அதிக நேரம் தேவைப்படுவது இல்லை. எனினும் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு (Heart Transformation) அதிக நேரம் தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட 6 மணி முதல் 7 மணி வரை தேவைப்படும்.அறுவை சிகிச்சைகள் அதிக நேரம் செய்யும்போது அந்த தருணத்தில் நீங்கள் எப்படி செயல்படுவீர்கள்?

Heart Transplantation அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு 6 முதல் 7 மணி வரை மிக நுணுக்கமாக செயல்பட வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் தண்ணீர் கூட எங்களால் குடிக்க முடியாத சூழல் இருக்கும். அதுபோல கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் எங்கள் உடலையும் மனதையும் நாங்கள் பணியாற்றுவதற்கு தயார்படுத்திக் கொள்வோம். இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு 3 சீனியர் மருத்துவர்களும் 2 செவிலியர்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்க தொழில்நுட்ப டெக்னீஷியன்கள் இரண்டு பேர் மொத்தம் 7 கொண்ட குழு செயல்படுவோம்.

அறுவை சிகிச்சை செய்கிற ஏழு பேரும் அறுவை சிகிச்சை நேரத்தில் அறுவை சிகிச்சை தாண்டி வேறு எதன் மீதும் எங்களுக்கு கவனம் திரும்பாது. அதற்கேற்ப எங்களை முன் கூட்டியே தயார்படுத்திக் கொள்வோம். நோயாளிகளை காப்பாற்றுவதில் எங்களுக்கு உள்ள பொறுப்பை அறிந்தே செயல்படுவோம்.

வெற்றிகரமாக இந்த சிகிச்சையை செய்து முடிப்பதிலேயே எங்கள் கவனம் இருக்கும். மறுபுறம் நோயாளியின் குடும்பத்தினர் மிகுந்த கண்ணீருடனே காத்திருப்பார்கள். அதனால் வேலையையும் தாண்டி அந்த கண்ணீர் மிகவும் பொறுப்பைத் தருவதால் எங்களால் முடிந்த வரை எங்களின் சிரமங்களை மறந்து அவரை மீட்கவே முயற்சிப்போம்.  

அறுவை சிகிச்சையின் வெற்றி தோல்வியின்போது உங்களின் மனநிலை எப்படி இருக்கும்?

நவீன அறிவியல் வளர்ச்சியின் காரணமாக 98 சதவீதம் வரை நாங்கள் நோயாளிகளைக் காப்பாற்றிக் கொண்டு தான் இருக்கிறோம். ஒரு அறுவை சிகிச்சை வெற்றி பெற்றால் நோயாளியை விடவும் எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் அதே சமயம் எஞ்சிய 3 சதவீத நோயாளிகள் இறக்க நேர்ந்தால் எங்களுக்கு மிக வருத்தமாக இருக்கும் அறுவை சிகிச்சை, தோல்விகள் நோயாளிகளை விடவும் மிகவும் வருத்தமாகவும், ஏமாற்றமாகவும் எங்களுக்கு இருக்கும். எனினும் அடுத்த நோயாளிகளுக்கு சிகிச்சை சரியாக செய்து முடிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு தயாராகுவோம்.உங்களால் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளில் மறக்க முடியாதது...

ஒவ்வொரு அறுவை சிகிச்சைகளுமே புது அனுபவத்தையும், சந்தோஷத்தையும் பெற்றுத்தருகிறது. அதனால் ஒவ்வொன்றுமே மறக்க முடியாத சிகிச்சைகள்தான். அறுவை சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து இன்று நன்றாக வாழ்கிற நோயாளி எங்களை சந்திக்கும்போது அவருடைய நன்றி கலந்த அன்பை எங்களிடம் வெளிப்படுத்தும்போது பெருமையாக இருக்கும். இந்த வேலைக்கு வந்ததன் நோக்கம் நிறைவேறியதாக உணர்வோம்.உங்கள் வேலையை குடும்பத்தினர் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?

பொதுவாக எல்லா மருத்துவர்களுக்குமே மருத்துவமனைதான் முதல் குடும்பம். என்னைப் பொறுத்தவரையில் மருத்துவம் என்பது எனக்கு வேலையும் தாண்டி எனது பேரார்வமும் கூட, என்பதால் எனது குடும்பத்தினர் அனைவருமே ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணரின் பொறுப்பை உணர்ந்து எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு தருகிறார்கள்.

மருத்துவத்துறையில் பணிபுரிபவர்கள் கட்டாயமாக முழு சேவை மனப்பான்மை உடனும் தியாக மனப்பான்மையுடனும் செயல்பட வேண்டும். விடுமுறை நாட்களையும், இரவு நேரங்களையும் கூட எங்களுக்கென்று செலவிட முடியாது. ஆனாலும் நான் எனது தொழிலை மிகவும் நேசிப்பதால் இந்த சிரமங்களை கருத்தில் கொள்வதில்லை.

மிகவும் சவாலான அறுவை சிகிச்சைகளையும் சொல்லுங்கள்?

Aortic aneurysm plastic surgery, Bypass surgery, Value replacement surgery, Heart hole surgery என இதயம் சம்பந்தமான அனைத்து அறுவை சிகிச்சைகளும் செய்வேன். ஆனால் Aortic aneurysm plastic surgery மிகவும் சவாலாக இருக்கும். அதாவது ரத்தக் குழாயில் ஒரு கீறல் போல் ஏற்படுவது Defecting aneurysm ஆகும். இதனால் ரத்தக்குழாய் வெடிக்கவும் நேரிடும். அவ்வாறு வெடித்தால் மூன்று மணி நேரத்திற்குள் அந்த நோயாளி இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதற்கு Open heart surgery செய்ய வேண்டியிருக்கும். இது மிகவும் சவாலானது. மூளைக்குச் செல்லும் ரத்தத்தை நிறுத்தி உடலை 15 டிகிரி முதல் 16 டிகிரி குளிர்ச்சி (Breeze) நிலையில் வைத்து உடலை முழுவதுமாக செயலிழக்கச் செய்து (Suspended Animation) குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் செய்யவேண்டும்.

இல்லையேல் மூளை பிரச்னைகூட வந்துவிடும். அதனால் இந்த அறுவை சிகிச்சை மிகவும் சவாலானது. ஆனால், இந்த அறுவை சிகிச்சை இந்தியாவிலேயே நாங்கள்தான் அதிகமாக செய்திருக்கிறோம். கிட்டத்தட்ட 16 ஆயிரம் நோயாளிகள் வரை இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறோம். காப்பாற்றியும் இருக்கிறோம்.

இந்த அறுவை சிகிச்சையின்போது மூன்று Senior doctors, இரண்டு செவிலியர்கள், ஒரு மயக்க மருந்து வல்லுநர், ஒரு Perfusionist, என ஏழு பேர் கொண்ட குழு செயல்பட்டு அறுவை சிகிச்சையை செய்து முடிப்போம்.தற்போது நவீன அறிவியல் வளர்ச்சியால் உருவான அறுவை சிகிச்சைகள் பற்றி சொல்லுங்கள்?

Minimally invasive surgery எனப்படும் குறைவாக பரவும் அறுவை சிகிச்சை மற்றும் key hole surgery நடப்பில் உள்ளது. மிகவும் நவீன மருத்துவத்தில் என்றால் Robotic surgery, Robot மூலம் Surgery செய்வது  இன்னும் நம் நாட்டின் செயல்பாட்டில் வரவில்லை. ஆனால், வெளிநாடுகளில் உள்ளது. இந்த அறுவை சிகிச்சை முறைப்படி Robot மூலம் அதாவது Robot Controlling மூலம் அறுவைச் சிகிச்சை செய்வது.

இது மற்ற முறைகளை விட மிக விரைவில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளியின் உடலை குணப்படுத்தி விடும். அதனால் அவர்களின் ஓய்வு காலம் முடிந்து மீண்டும் வேலைக்கு உடனே செல்லலாம். இம்முறை அறுவை சிகிச்சையை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

நீங்கள் உங்கள் பணியை அரசு மருத்துவமனையில் செய்யாதது ஏன்?

அரசு மருத்துவமனையில் எங்களின் பயிற்சி மற்றும் அறிவை பயன்படுத்தும் அளவிற்கு உலகத்தரத்திலான சிகிச்சை வசதிகள் இல்லாததால் எங்களால் அங்கு பணியாற்ற முடியவில்லை.

இன்று நோய்கள் வித்தியாசமாக நம்மை தாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு சிகிச்சை செய்யும் அளவிற்கு அரசு மருத்துவமனையில் வசதியில்லை என்பது வருத்தமளிக்கிறது. தற்போது அரசு, வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருமானால் நாங்கள் அரசு மருத்துவமனையிலும் கூட இதுபோன்ற அறுவை சிகிச்சையை பணம் வசதியற்ற ஏழை மக்களுக்கு செய்ய தயாராக இருக்கிறோம்.

- ராஜேஸ்வரி அய்யப்பன்

படங்கள்: கிஷோர் ராஜ்