பிரசவத்துக்குப் பிறகு எடை அதிகரிப்பது ஏன்?!கவர் ஸ்டோரி

தாய்மை அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தாலும், அதன் பிறகு ஏற்படும் எடை அதிகரிப்பு பெண்களை அதிகம் கவலை கொள்ளச் செய்துவிடுகிறது. பிரசவத்துக்குப் பிறகு எடை அதிகரிப்பது ஏன்? அதைத் தவிர்க்க முடியாதா? என்ன சிகிச்சைகள் இருக்கின்றன என்பது குறித்து மகப்பேறு மருத்துவர் ரொகையாவிடம் கேட்டோம்...

ஒரு பெண் கர்ப்பமடையும்போது அவளது உடலுக்குள் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கிறது. அனைத்து உறுப்புகளுக்கும் செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும், இதயம் வேகமாகத் துடிக்கும், மார்பகங்கள் பெரிதாகும், கர்ப்பப்பை விரிவடையும், வயிறு பெரிதாவதால் வயிற்றுப்பகுதி சருமத்தில் கோடுகள்(Stretch Marks) ஏற்படும்.

முகம், கழுத்து, வயிற்றுப்பகுதிகளில் கரும்புள்ளிகள் உருவாகும். வயிறு, இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கொழுப்பு சேர ஆரம்பிக்கும், பிரசவம் முடிந்து அடுத்த 6 மாதங்களில் தாயின் உடல் உறுப்புகளிலும்.

செயல்பாடுகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் இயல்பாகவே, கர்ப்பம் அடைவதற்கு முன்பு இருந்த நிலைக்குத் திரும்புவதே இயற்கை. இவ்வாறு நிகழாத பட்சத்தில் எடை அதிகரிக்கும். கர்ப்ப காலத்தில் தாய்க்கு சராசரியாக 10 முதல் 12 கிலோ வரை எடை அதிகரிக்கிறது. கர்ப்பத்துக்கு முன் அந்தப் பெண்ணின் எடை எவ்வளவு இருந்தது என்பதை பொறுத்து எடை அதிகரிப்பின் அளவு ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும்.

BMI 25-க்கு மேலே உள்ளவர்கள் எடை அதிகமானவர்கள். இவ்வாறு உடல் எடை அதிகமான பெண்கள் கர்ப்பமடையும்போது, உடல் எடையும் வரையறுக்கப்பட்ட 12 கிலோவை மீறி அதிகரிக்க நிறைய வாய்ப்புள்ளது. ஆனால், இவ்வாறு எடை அதிகமாக உள்ளவர்களுக்கு கர்ப்பகாலத்தில் அதிகரிக்கும் உடல் எடை 8 கிலோவுக்கு கீழே இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதேபோல் Low BMI எனப்படும் உடல் எடை குறைவாக உள்ள தாய்மார்களுக்கு 14 கிலோ வரை எடை கூட அறிவுறுத்தப்படுகிறது.

தேவைக்கு அதிகமான எடை அதிகரிப்பு மட்டுமே பக்க விளைவுகளை ஏற்படுத்தும். சராசரியாக அதிகரிக்கும் 12 கிலோ எடையில், தாயின் உடலில் சேரும் கொழுப்புச்சத்து சுமார் 3 முதல் 3.5 கிலோ வரை இருக்கிறது. மீதமிருக்கும் சுமார் 9 கிலோ (குழந்தையும் சேர்த்தும்) பிரசவத்தின்போது பிரசவத்துக்கு பின் வரும் நாட்களிலும் குறைந்துவிடும்.

வயிற்றுப்பகுதி 10 மாதங்களாக விரிவடைந்து, பிரசவத்துக்குப் பின் தளர்ந்து போக, அங்கு எளிதில் கொழுப்புச்சத்து சேர்ந்து பிரசவத்துக்குப் பிறகு தாய்மார்களுக்கு வயிறு பெரிதாகி தொப்பை ஏற்படுகிறது.ஒரு தாய் சரிவிகித உணவை உட்கொண்டு, குழந்தைக்கு 6 மாதத்துக்கு தாய்ப்பால் மட்டுமே புகட்டும்போது, தாயின் உடலில் இருந்து ஒரு நாளைக்கு 500 கிலோ கலோரி இழப்பு ஏற்படும். ஒரு வருடம் வரை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பிரசவத்துக்கு முன்பிருந்த எடையை குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் அடைந்துவிடுகிறார்கள்.

எனினும் 20% தாய்மார்கள் 2 கிலோ முதல் 4.5 கிலோ வரை எடை அதிகரித்தே காணப்படுகிறார்கள். மேலும் கர்ப்பத்திற்கு முன்பு எடை அதிகமாக இருந்த தாய்மார்கள் பிரசவத்திற்கும் பிறகும் எடை அதிகரிக்கவே செய்கிறார்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக பிரசவத்துக்குப் பிறகு உடல் சோர்வு, மனச்சோர்வு, குழந்தையை கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்புகளால் ஏற்படும் அழுத்தம் ஆகியவற்றால் தாயின் உடலில் அதிகரிக்கும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களாலும் உடல் எடை அதிகரிக்கிறது. பாலூட்டுவதால் தாய்மார்கள் இயல்பை விட அதிகளவு உணவு உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனாலும், முழு நேரம் ஓய்வில் இருப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது. பல சமயம் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகும் அதிக அளவு கலோரிகளை தொடர்ந்து உட்கொள்ளுவதாலும் அதிக உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை பின்பற்றுவதாலும் உடல் எடை அதிகரிப்பு தொடர்கிறது.

இதேபோல் பிரசவத்துக்குப் பிறகு தொப்பை அதிகரிப்பதாக ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால், உடல் எடை முழுவதுமே அதிகரிக்கிறது என்பதே உண்மை. இப்போது பரவலாக கர்ப்ப காலத்தின்போது உடற்பயிற்சிகள், யோகா ஆகியவை செய்யப்படுகின்றன. அதேபோல பிரசவத்துக்குப் பிறகும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு சிக்கலும் இல்லாத சுகப்பிரசவமாக இருந்தால், பிரசவத்துக்குப் பின் வரும் நாட்களில் மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதாவது நடைப்பயிற்சி, வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளை இறுகச் செய்யும் பயிற்சிகள் ஆகியவற்றை செய்யலாம்.

இத்தகைய உடற்பயிற்சிகள் தாய்மார்களின் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள தசை நார்களை இறுகச் செய்து பின்னாளில் கர்ப்பப்பை இறக்கம், தானாக சிறுநீர் வெளியேறுவது(Urinary Incontinence) போன்றவை ஏற்படாமலும் தவிர்க்கும்.பிரசவத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தாலோ அல்லது சிசேரியன் அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ 6 முதல் 8 வாரங்கள் கழித்து உடற்பயிற்சிகளை செய்யலாம். எந்தவொரு உடற்பயிற்சியை செய்வதற்கு முன்பும் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

தாய்ப்பால் கொடுக்கும் நாட்களில் 2,500 கிலோ கலோரிகள் அளவிலான உணவு உட்கொண்டால் உடல் எடை இழப்பு ஏற்படாமல் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்ட முடியும். இதுவே தாய்மார்கள் 2,000- 2,300 கிலோ கலோரி உணவுகளை உட்கொண்டு வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மிதமான உடற்பயிற்சிகள் செய்யும்போது தாய்ப்பால் சுரப்பதில் தடை இல்லாமல் உடல் எடையும் குறைய வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு தாங்கள் உட்கொள்ளும் கலோரிகளின் அளவுகளை மேலும் குறைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்யும் போது உடலின் எடை வேகமாக குறைகிறது. மேலும் உடலில் உள்ள கலோரிகளை குறைக்க ஏரோபிக் பயிற்சிகள் எனப்படும் ஜாகிங், ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங், டான்ஸிங் ஆகியவற்றைச் செய்யலாம்.

பிரசவத்துக்குப் பிறகு அதிகரிக்கும் எடையானது குறையாமல் இருப்பதாலும், அதிக அளவு உடல் உழைப்பு இல்லாததாலும் பிற்காலத்தில் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பது, சுவாசக் கோளாறுகள், மூட்டு தேய்மானம், பித்தப்பையில் கற்கள், நெஞ்சுவலி, பக்கவாதம் உள்ளிட்ட பல வகையான உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் உட்கொள்ளும் உணவுகளே 80% நமது உடல் எடையை தீர்மானிக்கின்றன. எனவே, உடல் எடையைக் குறைக்க முற்படும்போது முதலில் என்ன உட்கொள்கிறோம், எவ்வளவு உட்கொள்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள் கொழுப்புச்சத்து குறைந்த மீன் மற்றும் கடல் உணவுகள், கோழிக்கறி, பருப்புகள், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவை எடுத்துக் கொள்ளத் தகுந்தவை. கொழுப்புச்சத்து நிறைந்த பொரித்த உணவுகள், ஜங்க்ஃபுட் எனப்படும் பீட்சா, பர்கர், உப்புச்சத்து நிறைந்த பட்கெட் உணவுகள், இனிப்பு, பிஸ்கெட், மைதா பொருட்கள் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

அதிகமான உடல் எடையோ, தொப்பையோ ஒரே நாளில் ஏற்படுவதல்ல. எனவே, அதை மருந்து மாத்திரையால் சில நாட்களில் கரைத்து விட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இவ்வகையான மாத்திரைகளை உட்கொள்வோருக்கு அதிக ரத்த அழுத்தம், பசியின்மை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு, தூக்கமின்மை, படபடப்பு, தலைசுற்றல், ஜீரணக் கோளாறு, இதயக் கோளாறு போன்றவை வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். எனவே, எடை, தொப்பையைக் குறைக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்ள நினைப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

கர்ப்பிணி பெண்களில் சிலருக்கு கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய இயலாது. குறிப்பாக நஞ்சுப்பை (Placenta previa) கர்ப்பப்பையின் வாய் பகுதியில் இருந்தால் உடற்பயிற்சி செய்யும்போது ரத்தப்போக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு (Placenta previa) நடைப்பயிற்சி கூட சாத்தியப்படாமல் இருப்பதால் உடல் எடை அதிகமாகும்.

சிலர் அவர் எடையில் இருந்து கூட 20 கிலோ எடை அதிகமாகக் கூட வாய்ப்புள்ளது. எனவே, அவர்களுக்கு உணவு கட்டுப்பாடுமுறை கற்று தரப்படுகிறது. பிரசவத்திற்கு பிறகு இவர்களும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு இருந்தால் உடல் எடையைக் குறைக்கலாம்!

சமீரா ரெட்டியை பாதித்த Placenta pervia

கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது பொதுவானது என்றாலும், பிரபல ஹிந்தி நடிகையான சமீரா ரெட்டி இதில் வேறுவிதமான பாதிப்புக்குள்ளானார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய பாதிப்பு குறித்து பலரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக Palcenta pervia பற்றியும் பொதுமக்களுக்கு விளக்கியிருக்கிறார்.

‘‘நான் திருமணமாகி இரண்டு மாதங்களில் கர்ப்பமாகிவிட்டேன். பிரசவம் முடிந்த பிறகு மீண்டும் நடிக்க வருவது என்று திட்டமிட்டேன். ஆனால். எல்லாம் நேர் எதிராகிவிட்டது. கர்ப்ப காலம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. நான் முதல் முறை கர்ப்பமாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்னையால்(Placenta previa) 4 முதல் 5 மாதங்கள் படுக்கையில் இருந்தேன். அதனால் வெயிட் போட ஆரம்பித்துவிட்டது. படங்கள், விருது விழாக்கள் என்று இருந்த எனக்கு படுத்த படுக்கையாக இருந்தது கஷ்டமாக இருந்தது.

பிரசவம் ஆன பிறகு வெயிட் போட்டு 102 கிலோ ஆகிவிட்டேன். 32 கிலோ கூடுதல் வெயிட் போட்ட பிறகு எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. நான் வெளியே சென்றபோது என்னை பார்த்தவர்கள், ‘சமீரா ரெட்டியா இது... என்னாச்சு’ என்று கேட்டனர்.

ரொம்ப எடை அதிகரித்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்தேன். தற்போது நான் மீண்டும் கர்ப்பமாக உள்ளேன். இந்த பிரசவத்தின்போதும் எடை அதிகரிக்கும் என்பது தெரியும். ஆனால், அதை கடந்து வந்துவிடுவேன். இல்லாவிட்டாலும் கவலை இல்லை. என் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். எனக்கு எடை அதிகரித்தாலும் ஆரோக்கியமாக இருந்தாலே போதும். எப்பொழுதுமே கிளாமராக இருக்க முடியாது’ என்று கூறியிருக்கிறார் சமீரா ரெட்டி.

- விஜயகுமார்