டயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பிடயட் டைரி

சர்க்கரை நோயாளிகளுக்கான சில பிரத்யேகமான உணவுகள் இவை. வீட்டிலேயே எளிதில் செய்து அடிக்கடி சுவைக்கலாம். சுவைக்கும் உத்தரவாதம். ஆரோக்கியமும் பாழாகாது!

ராகி சூப்

தேவையான பொருட்கள்

ராகி மாவு - 3 டீஸ்பூன், சிறிய கேரட் - 1/2 துண்டு, பீன்ஸ் - 2, காலிஃப்ளவர் - 4 துண்டு பூக்கள், பட்டாணி - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை

பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சூடானதும் சிறு துண்டுகளாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணிைய சேர்த்து வேக விடவும். ராகி மாவை சிறிது தண்ணீரில் நன்றாக கரைத்து காய்கறி கலவையில் கொட்டி கிளறவும். பின்பு மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். சூப் கொதித்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பலன்கள்

ராகி

இதில் நார்ச்சத்து உள்ளது. ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்கும். இதில் Glycemic Index குறைவாக உள்ளது. இதில் இரும்புச்சத்து, கால்சியம் சத்து மற்றும் புரதச்சத்து உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. ராகியை அளவுக்கு மேல் உண்டால் சிறுநீரக
கற்கள் உண்டாகும்.

கேரட்

வைட்டமின் ஏ சத்து கொண்டது. கண் பார்வைக்கு மிகவும் நல்லது. ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை கொண்டது. இது புற்றுநோய் வராமல் காக்கும்.

பீன்ஸ்

நார்ச்சத்து குணம் உள்ளது.
சர்க்கரையைக் குறைக்க உதவும்.

காலிஃப்ளவர்

குடல் பிரச்னையைத் தீர்க்கும். புற்றுநோய் வராமல் காக்கும்.

பட்டாணி

நார்ச்சத்து மற்றும் புரதசத்து நிறைந்தது. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இதய நோய் வராமல் காக்கும்.

மிளகுத்தூள்

செரிமானத்தை அதிகரிக்கும்.
நுரையீரல் பிரச்னையை தீர்க்கும்.

ஓட்ஸ் ஆம்லெட்

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 3 டீஸ்பூன், முட்டை வெள்ளைக்கரு - 2, நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், தக்காளி - தலா 25 கிராம், பச்சைமிளகாய் - 1, உப்பு - தேவைக்கு, மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - சிறிது.

செய்முறை

பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கரு, ஓட்ஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்துகொள்ளவும். தோசைக்கல்லை சூடு செய்து சிறிது எண்ணெய் விட்டு முட்டை ஓட்ஸ் கலவையை ஊற்றி, அதில் குடைமிளகாய், வெங்காயம்,
தக்காளி, பச்சைமிளகாயை சேர்த்து மூடி போட்டு 1-2 நிமிடம் வேகவிடவும். பின்பு திருப்பி போட்டு வேகவிட்டு
பொன்னிறமாக வந்ததும் இறக்கவும்.

பலன்கள்

ஓட்ஸ்

நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்க உதவும். புரதச்சத்து நிறைந்தது. வைட்டமின், கனிமங்கள் கொண்டது. ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உள்ளது. ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கவும் எடையைக் குறைக்கவும் உதவும்.

முட்டை வெள்ளைக்கரு

இதில் கொழுப்பு குறைவாகவும், புரதசத்து அதிகமும் உள்ளது. கலோரிகள் மிகவும் குறைவு. இதய நோய் வராமல் காக்கும்.

குடை மிளகாய்

ஆன்டி ஆக்ஸிடன்ட் குணம் கொண்டது. அதனால் புற்றுநோய் வராமல் காக்கும். குறைந்த ரத்த அழுத்தத்தை சரி செய்யும். வைட்டமின் சி சத்து கொண்டது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வெங்காயம்

ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை சரி செய்யும். செரிமான மண்டலம் சீராகும். அலர்ஜியை குணப்படுத்தும்.

தக்காளி

வைட்டமின் சி குணம் உள்ளது. சிறுநீரக பிரச்னையை சரி செய்யும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கும்.

ஸ்டஃப்டு பாகற்காய்

தேவையான பொருட்கள்

பாகற்காய் - 75 கிராம், வெங்காயம் - 25 கிராம், பொடித்த வேர்க்கடலை - 30 கிராம், மிளகாய்த்தூள், தனியா தூள் - தலா 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு.

செய்முறை

பாகற்காயை நடுவில் நறுக்கி உள்ளிருக்கும் கொட்டையை எடுத்து விடவும். கடாயை சூடாக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், வேர்க்கடலை பொடி, வெந்தயப்பொடி, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி இறக்கவும். இந்த கலவையை பாகற்காயின் நடுவில் வைத்து, நான்ஸ்டிக் தவாவை சூடு செய்து சிறிது எண்ணெய் ஊற்றி பாகற்காயை வைத்து சாலோ ஃப்ரை செய்து வெந்ததும்
எடுக்கவும்.

பலன்கள்

பாகற்காய்ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை மற்றும் கொழுப்பைக் குறைக்கும். மலச்சிக்கலை சரி செய்யும். சிறுநீரகக் கற்களை சரி செய்யும். பீட்டா கரோட்டின் உள்ளது. கண் பார்வைக்கு நல்லது.

வேர்க்கடலை

நல்ல கொழுப்பு உள்ளது. புரதச்சத்து உள்ளது. இதய நோயில் இருந்து காக்கும். வைட்டமின் E சத்து உள்ளது. புற்றுநோய் வராமல் காக்கும்.

வெந்தயம்

நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை மற்றும் எடையை குறைக்க உதவும். பசியைக் குறைக்கும்.

வீட் வெஜ் மோமோஸ்

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1 கப், பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ், குடைமிளகாய் - தலா 25 கிராம், வெங்காயம் - 1, இஞ்சி - 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள், சீரகத்தூள் - தலா 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், தனியா தூள், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

கோதுமை மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, குடைமிளகாய், முட்டைக்கோஸ், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். பிசைந்த மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து சிறிது திரட்டி நடுவே காய்கறி கலவையை வைத்து மூடி கொழுக்கட்டை போல் செய்து இட்லி பாத்திரத்தில் இட்லி தட்டில் மோமோஸை வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

பலன்கள்

கோதுமை  

நார்ச் சத்து அதிகமுள்ளது. சர்க்கரையை குறைக்க உதவும். வைட்டமின், கனிமங்கள் உள்ளன. நம் குடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். செரிமான கோளாறைத் தீர்க்கும். பசியை அடக்கும். புற்றுநோய் வராமல் காக்கும்.

முட்டைக்கோஸ்

கண் பார்வையை அதிகரிக்கும். அயோடின் சத்து உள்ளது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

இஞ்சி

செரிமானத்துக்கு உதவும். தசையை சரி செய்யும். கெட்ட கொழுப்பை குறைக்கும்.

சீரகம்

தூக்கமின்மையை சரி செய்யும். செரிமானத்துக்கு உதவும்.

- கட்டுரை, செய்முறை மற்றும் படங்கள் : டயட்டீஷியன் கோவர்தினி