நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த அபாயம்கவர் ஸ்டோரி

எச்சரிக்கும் புதிய ஆய்வு


நீரிழிவு நோயின் தலைநகராக இந்தியா மாறவிருக்கும் அபாயம் ஏற்கெனவே நமக்குத் தெரியும். இதில் தற்போது உயர் ரத்த அழுத்தமும் சேரவிருக்கிறது என்று அதிர்ச்சி கிளப்பியிருக்கிறது சமீபத்திய ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு. ‘Silent killer என்று மருத்துவ உலகால் குறிப்பிடப்படும் உயர் ரத்த அழுத்தத்தை இந்தியா உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால், அடுத்த 20 ஆண்டுகளில் மிக மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஏனெனில், நான்கு பேரில் ஒருவர் இன்று உயர் ரத்த அழுத்த அபாயத்தில் இருக்கின்றனர்’ என்று எச்சரித்திருக்கிறது JAMA International Medicine இதழில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த ஆய்வு.

குறிப்பாக, இந்திய இளைய தலைமுறையினரிடம் ரத்த அழுத்த அபாயம் அதிகரித்து வருகிறது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறது. 18 வயதிலிருந்து 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் மட்டும் 12.1 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.இதய சிகிச்சை மருத்துவர் சுந்தரிடம் இதுபற்றிப் பேசினோம்...

‘‘ஆரோக்கியத்தை முடிவு செய்வதில் ரத்த அழுத்தம்(Blood pressure) மிக முக்கிய பங்கு பெறுகிறது. இந்த ரத்த அழுத்தம் என்பது பொதுவாக மனிதன் உட்பட உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் ரத்தக் குழாயில் ரத்த ஓட்டத்தினாலும் மற்றும் ரத்தக் குழாயின் தன்மையினாலும் உண்டாகக்கூடிய ஒரு வகை அழுத்தம் ஆகும். இது ஒரு சமநிலையில் இருக்க வேண்டும். அதாவது அதிகரிக்கவோ, குறையவோ கூடாது.

சாதாரணமாக கண்டுபிடிக்க முடியாத இந்த பாதிப்பு நம் நாட்டில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்ற ஆராய்ச்சி உண்மையில் கவலைக்குரியது. இளம் வயதினரும் இதற்கு அதிகளவில் இலக்காகி வருகிறார்கள் என்பதால் உடனடியாக நாம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.’’

எதனால் இப்படி ஒரு சிக்கல் வருகிறது?

‘‘ஆதி மனிதனுக்குக் கவலைகள் இரண்டுதான். ஒன்று உணவு; மற்றொன்று விலங்குகள் மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் மனிதனின் வாழ்க்கை முறையைப் பாருங்கள். அதிகாலையில் எழுவதில் தொடங்கி, இரவு தூங்கப்போகும் வரை எல்லோரும் பலவிதமான இடையூறுகளுக்கு ஆட்பட்டுதான் வாழ்கின்றனர்.

வேலைக்குப் போகிற அவசரத்தில் சாப்பிட கூட நேரம் இல்லாமல், டிஃபன், லன்ச் எடுத்துக் கொண்டு ரயில், பஸ் கூட்ட நெரிசலில் சிக்கி அவஸ்தைப்படுதல், அரக்கப் பரக்க ஓடுதல், ஆஃபீசில் டார்கெட்டை முடிக்க வேண்டிய கட்டாயம், வேலைப்பளு, நேரத்துக்குச் சாப்பிட முடியாமல் போதல், நிதி நெருக்கடி, குடும்ப நிர்வாகம் எனப் படுக்கைக்குப் போகும் வரை டென்ஷனோடுதான் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. இதுதான் இன்றைய காலத்தில் உயர் ரத்த அழுத்த பிரச்னை அதிகமாக காண்பதற்கான காரணம்.’’

பொதுவாக ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும்?

‘‘ஆரோக்கியமான ரத்த அழுத்தம் என்பது 120/80-க்கு கீழே இருக்க வேண்டும் (மேலே உள்ள 120 என்பது சிஸ்டாலிக்(Systolic) என்றும், அதற்குக் கீழே உள்ள 80 என்பது டயஸ்டோலிக்(Diastolic)என்றும் குறிப்பிடுவோம்). இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கைமுறை மாற்றம், உணவுப்பழக்கம் போன்ற காரணங்களால் ஹைப்பர் டென்ஷன் என்கிற உயர் ரத்த அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. பெண்களிடம் குறை ரத்த அழுத்தம் அதிகம் காண்கிறோம்.’’

உணவுப்பழக்கத்துக்கும் ரத்த கொதிப்புக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

‘‘சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்ள வேண்டும். நேரம் தவறி சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் முக்கிய காரணியாக உள்ளது. அதேபோல் எந்த உணவை எப்போது, எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பது குறித்த தெளிவும் நமக்கு இருப்பதில்லை.

Dietary approach to stop hypertension(DASH) என்ற ஆராய்ச்சி தகவலின்படி உணவில் உப்பை குறைத்து அதிகமாக பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்ப்பது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். இப்போது பரவலாக காணப்படும் மேலை நாட்டு உணவு முறை, ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரமும் உயர் ரத்த அழுத்தத்துக்கு மிக முக்கியமான காரணம்.

துரித உணவு கலாசாரத்தை உருவாக்கிய மேலைநாடுகளிலேயே அவர்களின் தவறை உணர்ந்து, இப்போது Slow food என்ற உணவுப்பழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கி இருக்கிறார்கள். உணவை பொறுமையாக நிதானமாக சாப்பிடும் முறைதான் Slow food. இதைத்தான் நாம் முன்பு செய்துகொண்டிருந்தோம். மீண்டும் அதுபோல் நிதானமாக சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.’’

தமிழகத்தில் ரத்தக் கொதிப்பின் தாக்கம் எந்த அளவு உள்ளது?

‘‘இங்கு ரத்த அழுத்தத் தாக்கம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக, இளம் வயது நோயாளிகள் என வகைப்படுத்தப்படும் 40 வயதுக்குக் கீழே உயர் ரத்த அழுத்த நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். இதற்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள 25 வயது முதல் 64 வயதுக்குட்பட்ட சுமார் 10,500 நபர்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் முடிவில், 21% பேருக்கு இந்நோயின் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கிராமப்பகுதிகளில் 27% -வும், நகரப்பகுதிகளில் 33% -வும் உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இதன்மூலம், இன்றைய வாழ்க்கை சூழல் ஒரு முக்கிய காரணம் என முடிவுக்கு வரலாம்.’’

ஒருவருக்கு ரத்த அழுத்தம் குறைவாக உள்ளது அல்லது அதிகமாக உள்ளது என்பதை எவ்வாறு தெரிந்துகொள்ளலாம்?

‘‘பொதுவாக பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை ரத்த அழுத்தம் மாறுபடும். குழந்தைகளுக்கு 60 என்ற அளவில் ஆரம்பித்து. குழந்தை வளரவளர இதன் அளவு அதிகரிக்கும். வளர்ந்த பருவத்தில் சராசரியாக 120 இருக்கும். ரத்தக் கொதிப்பு அளவீடுகளை Joint National Commitee(JNC) என்ற உலக அமைப்புதான் முடிவு செய்கிறது. ஆரோக்கியமான ரத்த அழுத்தம் என்பதில் Diastolic B.P 80-க்கு கீழேயும், Systolic BP 120-க்கு கீழேயும் இருக்கும். 120-முதல் 129-வரை உள்ள BP-ஐ Elevated bp என்போம். இதற்கு வாழ்வியல் முறையையும் உணவுப்பழக்கத்தையும் மாற்றினாலே போதும்.’’

ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதை என்னென்ன அறிகுறிகள் வழியாக தெரிந்து கொள்ளலாம்?

‘‘பொதுவாக ஆரம்ப நிலையில் அநேகம் பேருக்கு ஹைப்பர் டென்ஷன் இருப்பதற்கான அறிகுறி வெளியே தெரியாது. அதனால் மருத்துவ உலகில் இதை மறைந்து இருக்கும் அறிகுறி(Asymptomatic) என குறிப்பிடுவோம்.

அதனால்தான் Hypertension-க்கு silent killer என்ற பெயரும் உண்டு. இரண்டாவதாக, விடியற்காலை நேரத்தில், தலையின் பின்புறம்(பிடரி) வலி காணப்படும். இதனை Occipital Headache என அழைப்போம். ரத்த அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க களைப்பு, படியேறும்போது மூச்சு இரைத்தல், வாந்தி, மயக்கம் நெஞ்சு வலி, படபடப்பு ஆகியன ஏற்படும். மேற்கண்ட அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை அவசியம்.’’

அறிகுறிகள் உறுதி செய்யப்பட்ட பின்னர், ரத்த அழுத்தத்தைக் கண்டறிய என்னென்ன பரிசோதனைகளை எவ்வாறு செய்ய வேண்டும்?

‘‘ரத்த அழுத்தத்தைத் துல்லியமாகக் கண்டுபிடிப்பது மருத்துவத்தில் மிகவும் நுட்பமான ஒரு  வேலை. ஒருவருக்கு ரத்தக்கொதிப்பு அளவைப் பரிசோதிக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிகரெட் பிடித்தாரா, காஃபி அல்லது டீ சாப்பிட்டாரா என்பதையெல்லாம் உறுதி செய்வது அவசியம். ஏனென்றால், சிகரெட்டில் உள்ள நிக்கோடின் ரத்தத்தைக் கெட்டியாக மாற்றும். அதில் உள்ள கார்பன் மோனாக்ஸைடு ரத்தக் குழாய்களைச் சுருக்கும். காஃபி, டீயில் இருக்கும் கஃபைன் என்ற வேதிப்பொருள் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும்.

பரிசோதனை செய்யும்போது BP monitor-ஐ இதயத்துக்கு நேரான சரியான அளவில் வைத்துப் பரிசோதிக்க வேண்டும், BP measurement வலது மற்றும் இடது கையில் செய்வது பயன் தரும். ஏனெனில், ஒரு சிலருக்கு ஒரு கரத்தில் ரத்த நாள அடைப்பு இருக்கும். அப்போது மற்றொரு கரத்தில்தான் ரத்த அழுத்த அளவு சரியாக தெரியும். எனவே 2 கைகளையும் பரிசோதிக்கும்போது வித்தியாசம் 10-க்கு கீழே இருக்க வேண்டும்.

ரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கு முன் ஒரு 10 நிமிடங்களாவது ஆசுவாசப்படுத்தி கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தத்தில் பல வகைகள் உள்ளன. Primary hypertension (எந்தவித மருத்துவ காரணங்கள் இன்றி வருவது), Secondary hypertension (மற்ற உடல் உறுப்பு பிரச்னை காரணமாக ஏற்படுதல்), White Coat Hyper Tension (மருத்துவர் BP அளவிடும்போது மட்டும் வருவது, மற்றைய நேரங்களில் நார்மலாக இருப்பது), Masked Hyper Tension (டாக்டர் BP அளவிடும்போது நார்மலாக இருப்பது மற்றைய நேரங்களில் அதிகமாக இருப்பது) என பல வகைகள் உள்ளன.

ஆகவே இரண்டு, மூன்று முறை பரிசோதிக்க வேண்டும். உட்கார்ந்த நிலை, படுத்த நிலை என மாறுபட்ட நிலைகளிலும் BP-ஐ பரிசோதிக்க வேண்டும். 40 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் சிறுநீரகத்தின் செயல்திறன், அதற்குச் செல்லும் ரத்த ஓட்டம் சரியாக உள்ளதா என சோதனை செய்ய வேண்டும். யூரியா, கிரியாட்டினின் சோடியம், பொட்டாசியம் சரியான அளவில் காணப்படுகிறதா என்பதையும் உறுதி செய்வது அவசியம்.’’  

ரத்தக் கொதிப்பின் அளவீடுகளை JNC முடிவு செய்வது போல, இந்நோய்க்கான சிகிச்சைகளை அந்த அமைப்புதான் முடிவு செய்யுமா?

‘‘உயர் ரத்த அழுத்தத்துக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்பதை JNC guidelinesஅறிவுறுத்துகிறது. ஒருவருக்கு ரத்த அழுத்தம் நார்மலான அளவைத் தாண்டி விட்டது என்பதற்காக, உடனே சிகிச்சையைத் தொடங்கக் கூடாது. முதலில் எதனால் ரத்தக் கொதிப்பு அதிகமானது, பதற்றமான வாழ்க்கை காரணமா, மற்ற உறுப்புக்கள் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதையெல்லாம் முதலில் தெரிந்துகொண்ட பிறகுதான் சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

என்ன மாதிரியான சிகிச்சையை, எப்பொழுது ஆரம்பிக்க வேண்டும், எவ்வளவு காலம் சிகிச்சை தேவைப்படும் போன்றவற்றை JNC வரையறுத்த விதிகள் அடிப்படையிலும் மற்றும் அதன் அறிவுரைகள் இங்குள்ளவர்களுக்கு பொருந்தும் வகையிலும் (Individualizing) மேற்கொள்ள வேண்டும்.’’

உயர் ரத்த அழுத்தம் ஒருவருடைய உடலில் என்னென்ன பாதிப்புக்களை ஏற்படுத்தும்?

‘‘ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கும் பட்சத்தில், அவருடைய எல்லா உறுப்புகளும் பாதிப்பு அடையும். குறிப்பாக, மூளை, கண், இதயம், சிறுநீரகம் ஆகியவை கெடும். இதனை, Target Organ Donation எனக் குறிப்பிடுவோம். மூளை பாதிப்பால் பக்கவாதம் வரவும்
வாய்ப்பு உள்ளது.’’

உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் எவற்றைத் தவறாமல் செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது?

‘‘வாழ்க்கை முறையை மாற்றுவதே முதல் சிகிச்சை. உணவில் உப்பின் அளவைக் குறைத்து, காய்கறிகள், பழங்களை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சிகள் செய்வது அவசியம்.

யோகா மற்றும் தியானம் செய்வதும் பயன் தரும். மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். சீரான இடைவெளியில் ரத்த அழுத்த பரிசோதனை செய்வதும் அவசியம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து, மாத்திரைகளை எந்த காரணத்துக்காகவும் நிறுத்தக் கூடாது. மன அழுத்தத்துக்கு ஆட்படாமல் நடந்து கொள்ள வேண்டும்.’’

- விஜயகுமார்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்