மழையும் வெயிலும் மாறி வரும் பருவநிலை!
அகமெனும் அட்சயப்பாத்திரம்!
Bipolar disorder எனும் மன நோய்!
நம்மூரில் ஒரு பழமொழி கேட்டிருப்போம். "உரலுக்கு ஒரு பக்கம் என்றால் மத்தளத்திற்கு இரு பக்கமும் இடி”. அதேபோல் மனித மனநிலையில் அதீதப் பரவசக் கிளர்ச்சி நிலை (Euphoric) , மிகுந்த துன்பத்தில் துவண்டிருக்கும் நிலை (Depression) என இரண்டு துருவங்களின் முனைக்கும் மாறிமாறி அலைவுறும் மனக் கோளாறு ‘ Bipolar’ எனப்படுகிறது.
 இருமுனையப் பிறழ்வு அல்லது இருதுருவக் கோளாறு என்றும் இது அழைக்கப்படுகிறது. இதர ஆளுமைக் கோளாறுகளுடன் (Personality disorders) சேர்த்து அடிக்கடி குழப்பிக் கொள்ளக் கூடியதுமாகும். ஆனால் இது மிக ஆபத்தான மனநோயல்ல.
‘ Mood disorders’ எனப்படும் தற்காலிக நிலைமாற்றச் சிக்கல்கள் பிரிவின் கீழேதான் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆளுமைக் கோளாறுகள் நீண்ட கால பாதிப்புகளைத் தரக்கூடிய நடத்தை வரைமுறைகளைக் (Behaviour patterns ) கொண்டிருக்கும். அதோடு தனக்கும் பிறருக்கும் அன்றாட வாழ்வில் பெரும் பாதிப்புகளைத் தருவதாகவும் இருக்கும்.  நமக்கெல்லாம் Bipolar என்றவுடன் 3 திரைப்படம் நினைவுக்கு வரும். உணர்வுகளில் அதீத ஏற்ற இறக்கங்களைக் கொண்டு அதீத சக்தியுடன் செயல்படுவது அதன்பின் தீவிரமான மனக்கவலையில் சோர்ந்து கிடப்பது என்ற இரு நிலைகளுக்கும் மாறி கடைசியில் சுய அழிவைத் தேடிக்கொள்ளும் நிலையை அந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் கதாபாத்திரம் வெளிப்படுத்தி இருக்கும். 2006 - ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள உளவியல் திரைப்படம் ‘வடக்குநாதன்’. அதில் நடிகர் மோகன்லால் இருமுனைக் கோளாறு உள்ளவராக நடித்திருப்பார்.
 நாம் எளிதாகப் புரிந்து கொள்ளவே இப்படியான பல திரைப்படங்களின் குறிப்புகளை அவ்வப்போது இங்கே குறிப்பிடுகிறோம். அத்தோடு அறிவியல் ரீதியான உண்மைகளையும், மனநோய்களின் தன்மைகளையும், அறிகுறிகளையும் அறிந்து கொள்வது அவசியம். மேலும், இத்தகு மனநலக் கோளாறுகள் நமக்கோ, பிறருக்கோ ஏற்பட்டால் பதட்டமின்றி கையாளும் முறைகளை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கமாக இருந்து வருகின்றது.
முதலில் ‘Manic depressive illness\” என்று மருத்துவ உலகில் குறிப்பிடக்கூடிய Bipolar இதர மனநலக் கோளாறுகளிலிருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பார்ப்போம். Bipolar சிக்கல் Maniac, Depression என வேறுபட்ட தொடர்வரிசைகளைக் (Episodes) கொண்டிருக்கும். உளவியலின் ஆரம்பகட்ட மதிப்பீடுகளிலும், பரிசோதனைகளில் சிலநேரம் ‘Borderline personality disorder’ - ஐ ‘Bipolar disorder’ என்று தவறாகக் கணித்து விடுவார்கள்.
ஆனால், Borderline personality disorder - இல் உணர்வுகளின் மாற்றங்களுக்கான இடைவெளி கூடுதலாக இருக்கும். அத்தோடு உடனே மனநிலையை மாற்றி உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, வேறு நிலைக்கு தன்னால் வர இயலாத நிலையும் இருக்கும். அவர்களுக்கு அதிகமான கோபமும் இருக்கும்.
பல்வேறு மனநோய்களுக்கும், கோளாறுகளுக்கும் அடிப்படைக் காரணியாக விளங்கும் மன அழுத்தம் (Depression) இங்கேயும் முதல் நிலைக் காரணியாக இருக்கிறது. எனவே, Bipolar தன்மையை வேறுபடுத்தி அறிந்து கொள்ள பரவசம், உணர்வு ஏற்றம், நீட்சி பெற்ற உணர்வு நிலை (Euphoric, Elevated, Expansive mood ) எனும் படிநிலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
‘தலை கால் புரியாமல் ஆடுகிறான்’, ‘கண் மண் தெரியவில்லை’, ‘கால்கள் தரையில் இல்லை’, ‘வானில் மிதக்கிறேன்’ என்றெல்லாம் உணர்ச்சி மிகுதியில் சொல்வோம் இல்லையா அந்த உணர்நிலைகள் எல்லாமே Bipolar - இன் அடிப்படை குணமே. அளவோடு இருக்கும்போது இந்த மனநிலையானது, நல்ல செயலூக்கத்தினையும், மகிழ்ச்சியின் நிறைவையும் தரக்கூடியதே.
ஆகவே, துறுதுறு என பல வேலைகளை மேற்கொண்டு செய்வதும் நிகழும். உடனேயே அதற்கு நேர்மாறாக எந்தச் செயலையும் செய்ய முடியாமல் மிகக் கவலையும் வெறுப்பும் கொண்டு தனிமையாக நிற்பதும் நிகழும் .
சிலருக்கு இந்த இரண்டும் மாறி மாறி அடிக்கடி வரும். சிலருக்கு இந்த வரிசைத் தொடர் நிலை மாற்ற இடைவெளி (Episode intervals) 7 நாள்கள் முதல் இரண்டு வாரம் வரை நீடிக்கலாம்.வேறு சிலருக்கு நான்கிற்கும் மேற்பட்ட உணர்வு மாற்றங்கள்கூட நேரலாம். இதனை ‘Rapid cyling’ என்று சொல்வார்கள். ஒரே நாளில் எண்ணற்ற உணர்வு நிலை மாற்றங்கள் சிலருக்கு நேரும். இது ‘Ultradian cycling’ என்று குறிப்பிடப்படுகிறது. சர்வதேச உளவியல் ஆராய்ச்சியாளர்களில் ஒரு சாரார் இது ஒரு பெரிய குறையல்ல மனித வாழ்க்கைக்குத் தேவைப்படுவதே என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள், திடீரென்று சோர்ந்து போவதும், அப்படியே கவலையில் நின்று போய்விடாமல் ‘இதுவும் கடந்து போகும்’ என தானே உணர்வினை மாற்றி எழுந்து கொள்வது நல்லதுதானே என்கிறார்கள். இதுவும் உண்மைதானே.எது இயல்பு, எது தீவிரம் என அறிந்து கொள்ள Bipolar குறித்த வரலாற்று உண்மைகளையும் பார்ப்போம்.
பண்டைய காலத்தில் இயற்பியலாளர் Hypocrates ‘Melancholic’ என்று இதனைக் குறிப்பிட்டார். பிறகு வந்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரும், மனநல மருத்துவருமான Jules Baillarger ‘Dual form insanity’ என்று இதனைக் குறிப்பிட்டார். Bipolar குறித்த அவரது ஆய்வுகளும், மூளையின் Frontal cortex பாகத்தின் ஆறு அடுக்குகளின் கண்டுபிடிப்பும் உளவியல் மற்றும் நரம்பியல் துறைக்கு அடித்தளமான மைல் கற்கள் என்றே சொல்ல வேண்டும்.
19 -ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஜெர்மனிய மனநல மருத்துவர் Emil Kraepelin அவர்கள் ‘Manic depressive insanity’ என்று இக்கோளாறினைக் குறிப்பிட்டார். மேலும் அவர் மரபியல் காரணங்களால்தான் Bipolar disorder 80% ஏற்படுகிறது என்றார். 1960 - களில் ஸ்வீட்சர்லாந்தைச் சேர்ந்த Zurich உளவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சித்துறைத் தலைவரும், மனநல மருத்துவருமான Jules Angst அவர்கள், Unipolar, Bipolar இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் காட்டி மேலும் பல தெளிவுகளை உருவாக்கினார்.
ஒரு சிலருக்கு இரு விதமான மனநிலை மாற்றங்களும், வேறு சிலருக்கு யூனிபோலார் எனப்படும் ஓரேயொரு மாறுபட்ட உணர்தன்மைக் கோளாறும் இருப்பது நிரூபிக்கப்பட்டது. ஆனால் Unipolar கோளாறு மிகவும் அரிதாகவே காணப்படுகிறது என்பதும் தெளிவானது.
அதன்பிறகு, Bipolar குறித்த விழிப்புணர்வு உலகெங்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் மரபியல் காரணிகள் மட்டுமின்றி, ‘ Biochemichal’ பற்றாக்குறை காரணமாகவும், நியூரோடிரான்ஸ்மீட்டர்ஸ் எனப்படும் நரம்பியல் கடத்திகளின் அளவு மாறுபாடு, Serotonin சுரப்பி விகித மாற்றம் போன்ற காரணங்களாலும் Bipolar ஏற்படக்கூடும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மனச்சோர்வும் கவலை நிறைந்த வாழ்க்கையும் முக்கியமான காரணிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு எல்லாவற்றுக்கும் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கும் நபர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
‘Melancholia’ எனும் தாழ்நிலை உணர்வுகளின் தாக்கம், மற்றும் ‘Mania’ எனப்படும் உச்சநிலை (Hyper) உணர்வுகளின் தீவிரம் இரண்டிற்கும் அடிக்கடிப் பயணிக்கும் பொழுது நிச்சயம் வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும் என்று வெவ்வேறு கோணங்களில் உளவியல் நிபுணர்களால் விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு உலகெங்கும் நிகழ்ந்த ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து 1980ல் அமெரிக்கன் சைக்கியாடிக் அசோசியேஷன் DSM - 4 தொகுப்பில் Bipolar disorder என்ற பெயரில் பட்டியலில் இணைக்கப்பட்டாலும், இது தனிப்பெரும் ஆளுமைக் கோளாறு இல்லை என்பதை அடிக்கடி நாம் நினைவூட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இன்றைய நவீன யுகத்தில் இளம் வயதினரும், மத்திம வயதினரும் உளவியல் சிக்கல்கள் குறித்து நிறைய இணையவழியே படிக்கிறோம். பேசுகிறோம். அதீத விழிப்புணர்வுச் சிந்தனை (Over vigilence thinking) கொண்டு எல்லாவற்றிற்கும் ஒரு ஆங்கில உளவியல் பெயரைக் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.
இது எனக்கு இருக்கிறதே, அதுவாக இருக்குமோ, யாருக்கு என்ன மனோவியாதி என்று அச்சப்பட்டு கொண்டே இருப்பதே ஒரு மனோவியாதியாகிவிட்டது இல்லையா? அதுவே நம் மனத்தை அச்சமும் கவலையும் ஆக்ரமிப்பு செய்ய காரணமாகிவிடும் என உணர வேண்டும்.
இனிமேல் சற்று நிதானம் கொள்வோம். எதற்கெடுத்தாலும் உளவியல் பயிற்சி , மனநோய் சிகிச்சை என்றெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என Diagnosis வெறி கொண்டு இருக்கக் கூடாது என்று மாற்றி யோசிக்க வேண்டிய காலமிது.
சிலவற்றை மனித மனங்களின் இயல்பே இது என ஏற்று தன்னம்பிக்கையோடு வாழப் பழகிக் கொள்வது நலம். நடைமுறையில் Bipolar கோளாறினைக் கையாளும் விதங்கள் மற்றும் எளிய சிகிச்சை முறைகளைப் பற்றி அடுத்த இதழில் காண்போம்.
மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்
|