குளிர்காலத்துக்கு ஏற்ற பீட்ரூட்!
குளிர்காலம் என்றாலே சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கான காலம் என்று சொல்லும் அளவுக்கு குளிர்காற்று வீசும். இந்த காலகட்டத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ள அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
 அந்தவகையில் இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற ஒரு காய் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுப்பதுடன், சரும பராமரிப்பு, ரத்த அழுத்த கட்டுப்பாடு, அதிக ஆற்றல் திறன் என பல நல்ல விஷயங்களை கொடுக்கிறது என்றால் மிகையில்லை. அது என்ன காய்கறி தெரியுமா?
அந்த அசத்தல் காய்கறி, பீட்ரூட்தான். பல்வேறு ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இது நம் உடலுக்கு ஆற்றலையும், உஷ்ணத்தையும் கொடுக்கும். அதனால், குளிர்காலத்துக்கான சிறந்த காய்கறியாக இது கருதப்படுகிறது.2019 ஆம் ஆண்டு Nutrition & Metabolism நடத்திய ஆய்வொன்றில், பீட்ரூட்டில் நைட்ரேட்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. இது இதய நலனை பாதுகாப்பதோடு, உடலில் ஆக்ஸிஜன் விநியோகம் சீராக இருப்பதை மேம்படுத்தி ஸ்டாமினாவை மேம்படுத்துகிறது.
பீட்ரூட்டில் வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் உடல் சோர்வடைவது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்றவை தடுக்கப்படுகிறது.பீட்ரூட் நம் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால், ரத்த அழுத்தப் பிரச்னைகளும் கட்டுக்குள் இருக்கும். அதுமட்டுமன்றி பீட்ரூட்டிலுள்ள நைட்ரேட், உடலில் நைட்ரிக் ஆசிடாக மாறி ரத்த நாளங்களின் பணிகளை எளிமையாக்குகிறது.
அதேபோல பீட்ரூட்டிலுள்ள வைட்டமின் சி, ஃபோலேட், இரும்புச்சத்து போன்றவை. குளிர்காலத்தில் வரும் தும்மல், சளி, இருமல் போன்றவற்றிலிருந்தும் நம் உடலை காக்கும். குறிப்பாக வைட்டமின் சி, கொலேஜனை தயாரிப்பதால் சரும வறட்சி தடுக்கப்படும். ஸ்கின் கேர் செய்வோர், பீட்ரூட் பல்ப் பகுதியை முகத்தில் வைத்தும் நலனை பெறலாம்.
பீட்ரூட் செரிமானத்தை மேம்படுத்துவதால், குடல் இயக்கம் மேம்படுகிறது. இதனால் மலச்சிக்கல் தடுக்கப்படும். குறிப்பாக பீட்ரூட்டில் உள்ள Betaine, உப்புசம் பிரச்னைகள் வராமல் தடுக்கும். கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, உடலின் நச்சுக்கள் வெளியேற பீட்ரூட் வழிசெய்யும். எனவே இந்த குளிர்காலத்தில், பீட்ரூட்டை நமது உணவு பட்டியலில் மறக்காமல் சேர்த்து பயனடைவோம்!
- ரிஷி
|