40 வயது பரிதாபங்கள்
செவ்விது செவ்விது பெண்மை!
40 வயதில் நாய் படாத பாடு என்பார்கள். இந்த கால கட்டத்தில், you-tube ட்ரெண்டிற்கு ஏற்ப 40 வயது பரிதாபங்கள் பார்ப்போம்.
 ஒரு பரிதாபங்கள் பதிவில் அவர்கள் நகைச்சுவையாக ஒரு தம்பதியினரை காண்பிப்பார்கள். பெண் பார்க்கும் போது அந்த பெண் மாப்பிள்ளையிடம் நான் திருமணத்திற்கு பின்பு வேலைக்கு செல்வேன் என்ற நிர்பந்தம் விதிக்கும். அதற்கு அந்த மாப்பிள்ளையும் ஒப்புக் கொள்வார். ஆனால் திருமணத்திற்கு பின்பு அதை கேட்கும் பொழுது அவர் காலம் கடத்துவர். சில மாதங்களில் அந்த பெண் கர்ப்பமாகி விடுவார்.
 அதனால் குழந்தை பள்ளிக்கு செல்லும் வரை வேலைக்கு செல்ல இயலாது. காலம் ஓடி விடும். பின்பு மீண்டும் வேலைக்கு செல்லலாம் என்று கேட்கும்போது இரண்டாவது முறை கர்ப்பமாகி விடுவாள். பின்பு சுமார் 40 வயதில், பிள்ளைகள் தான் வளர்ந்து விட்டார்களே, நீ வேலைக்கு செல்ல ஆசைப்பட்டாயே என்று கேட்டு வரும் கணவரை கறிச்சு கொட்டுவாள் மனைவி. நான் ஆசை படும் பொழுது ஏதாவது காரணம் சொல்லி மழுப்பி விட்டு, இப்பொழுது எனக்கு படித்தவையெல்லாம் மறந்த பின்னர் வேலைக்கு போக சொல்கிறார் என்று.
இதை நகைச்சுவையாக சொன்னாலும் இது தான் 40 வயது பெண்ணின் பரிதாப நிலை. படித்த அனைத்தும் மறந்த பிறகு, வீட்டின் பொருளாதார சுமையை குறைக்க வேலைக்கு எப்படி செல்வது என்று யோசிக்கும் நிலை.
சமூக அந்தஸ்து, இந்த வயதில் பெண்கள் அதிகம் எதிர்கொள்ளும் அடுத்த பரிதாபம். என்னடி மாலா, உன் புருஷன் வேலைக்கே போறது இல்லையாமே.... ஆமா உன் பொண்ணு என்ன பண்றா? படிச்சு முடிச்சுட்டாளா?
கல்யாணம் பண்ணிட்டிங்களா? இல்ல காதல் கத்தரிக்காய்னு ஏதும் பண்ணிட்டு இருக்காளா? உனக்கு ஒன்னு தெரியுமாடி மாலா, நம்ம மீனாட்சி பையன் படிச்சுட்டு வெளி நாடு போயி 1 லட்சம் சம்பாதிக்குறானாம்.
இப்படி அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாது. இந்த வயது பெண்களில் பலரின் சுய மதிப்பீடு (self-worth) குறைகிறது. இது சில நேரங்களில் ஏன் என் வாழ்க்கை மட்டும் இப்படி இருக்கிறது? என்று பல கேள்விகளை உருவாக்கி, அது அவர்களை மனஅழுத்தம் வரை கொண்டு செல்கிறது. 40 முதல் 45 வயதிற்குள் இருக்கும் பெண்கள் கேலி கிண்டல்கள் மற்றும் அவமானங்களுக்கு ஆள் ஆகிறார்கள். இந்த பரிதாபத்தில் அதை அந்த பெண்களுக்கு செய்வதே அவர்களின் குடும்ப உறுப்பினர்களே முக்கியமாக கணவன் மற்றும் குழந்தைகளாக தான் இருப்பார்கள். ஏங்க இந்த மாசம் இன்னும் வீட்டுக்கு current pill கட்டளையா ? உனக்கு என்ன நீயா காசு தர. நான் தானே கட்ட போறேன் உன் வேலை என்னவோ அத மட்டும் நீ பாரு.
தேவை இல்லாத விஷயங்களில் எல்லாம் நீ தலை இடாதே என்று சொல்வார் கணவர். பாப்பா எனக்கு கொஞ்சம் you-tube வச்சு தரியா. நா அதுல ஏதாவது புதுசா பார்த்து சமைச்சு தரேன் என்று சொல்லும் அம்மாவிடம் அம்மா நீ இப்படி எல்லாம் பார்த்துட்டு திரும்ப அந்த சாம்பார் தான் வைக்க போற. அதுக்கு எதுக்கு போன் என்று கேட்கும் மகள். தம்பி இப்போ online-லேயே காசு போடலாமா. எனக்கு என்கூட வேலை பார்குறவங்க சொன்னாங்க.
ஆனா அது எப்படினு எனக்கு தெரில. கொஞ்சம் சொல்லி தரியா, என்று கேட்கும் போது, ஆமா, நா இப்போ சொல்லி குடுத்துட்டா மட்டும் உனக்கு புரிந்துடுமா என்று கேட்கும் மகன்.இதுவே 40 முதல் 45 வயதிற்குள் இருக்கும் பெண்களின் பரிதாப நிலை. இவ்வாறு கணவன் மகன் மகள் என்று அனைவரும் தன்னை குறைத்து பேசும் போது தான் யாருக்காக வாழ்கிறேன்? என் வாழ்க்கையின் நோக்கம் என்ன? எனக்காக யார் இருக்கிறார்கள்? என்று பல கேள்விகள் அவர்களுக்குள் எழுப்பும்.
அதனால் அவர்களுக்கு இந்த வாழ்க்கை மிகவும் வெறுமை ஆகலாம். இது போன்ற பரிதாபங்களை சமாளிக்க அந்த பெண்கள் முதலில் அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். பாக்கியலட்சுமி நாடகத்தில் வரும் பாக்யா போல முதல் half-ல் கணவன், மாமனார், மாமியார் மற்றும் குழந்தைகள் என்று வாழ்ந்தாலும் இரண்டாவது half-ல் அதாவது இந்த 40 வயதிற்கு மேல் உங்களுக்காக வாழ ஆரம்பியுங்கள்.
உங்களை சுற்றி இருப்பவர்களையும் உங்கள் குடும்பத்தினையும் மட்டுமே சார்ந்து இருக்காது. உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வது உங்களை குறைத்து மதிப்பிடுபவர்கள் முன் நீங்கள் யோசிக்கும் ஆள் நாள் இல்லை என்று நிரூபித்து காட்ட வேண்டும்.
இந்த வயதில் நீங்கள் உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். உங்கள் உடல் நலனில் கவனம் செலுத்தவும் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யவும் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத விசயங்களை கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்காக புதிய நண்பர்கள் வட்டத்தை உருவாக்குங்கள்.
அவர்களிடம் உரையாடுங்கள் உங்கள் தனிமையை போக்கிக் கொள்ளுங்கள். 40-45 வயது பெண்கள் உடைந்து போவது அவர்களின் பலவீனம் அல்ல. அவர்கள் இதுவரை தாங்கியும், தள்ளியும், சுமந்தும் வந்த வலிமையின் சான்று. அவர்களுக்கு தேவையானது ஒரு சொல், ஒரு ஆதரவு, ஒரு இடம். இது அவர்களின் வாழ்க்கை… அவர்கள் அதை மீண்டும் எழுத முடியும். 40 வயது என்பது முடிவு இல்லை… அது ஒரு புதிய துவக்கம்.
மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி
|