நுரையீரலை நிலைகுலையச் செய்யும் நிமோனியா!
சளி, இடைவிடாத இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருக்கிறதா, வழக்கமான சளிப் பிரச்சினை அல்லது வைரல் பிரச்சினை என்று வீட்டிலேயே இருந்துவிடாதீர்கள். உடனடியாக நிமோனியா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறியும் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். உங்கள் எக்ஸ்-ரேயில் அறிகுறிகள் எதுவும் தெரியாமல் சாதாரணமாக இருந்தாலும், நிமோனியாவின் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? நிமோனியா பற்றி தெரிந்து கொண்டு, உடனடியாக சிகிச்சைப் பெற்று, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அவசியமான விழிப்புணர்வு இந்தியாவில் பெரியளவில் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. இதனால் நிமோனியாவைப் பற்றி தெரிந்து கொள்வதோடு, நாம் செய்ய வேண்டியது என்னென்ன என்பதையும் புரிந்து கொள்ளவேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது. அந்த நோக்கத்திற்காகவே இந்த கட்டுரை.  நிமோனியா (Pneumonia}, இன்று நாம் மருத்துவமனைகளில் அதிகம் பார்க்கும் அல்லது அடிக்கடி பிறர் சொல்ல கேட்கும் ஒரு பொதுவான தொற்று நோயாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், நிமோனியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம், இது எந்தவிதமான அறிகுறிகளும் இல்லாமல், சத்தமில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக நுரையீரலைப் பாதிப்பதுதான்.
 பொதுவாகவே நிமோனியாவைக் கண்டறியும் பரிசோதனைகளில், இது நிமோனியாதான் என்று எளிதில் கண்டறியப்பட முடியாத நோய்களில் ஒன்றாக உள்ளது. இதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் பலர் நாம் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று உணராமலே அதன் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
இந்த நிலைக்கு காரணம், நிமோனியாவைக் கண்டறியும் பரிசோதனைகள் அப்படியொன்றும் சிக்கலானது அல்ல. ஆனால், இதன் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் இருப்பதும், தங்களுக்கு இருக்கும் அறிகுறிகளுக்கான காரணம் வழக்கமான சளி தொந்தரவுதான் என்று தாங்களாகவே யூகித்துக் கொள்வதும்தான். நிமோனியா பாதிப்பு இருப்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் போது ஒரு வாரம் வீட்டில் இருந்தபடியே ஆன்டிபயாடிக் மருத்துகளை எடுத்துக்கொள்வதால் அதற்கான தீர்வை எளிதில் பெற முடியும். இல்லையென்றால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வாரக்கணக்கில் இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிவிடுவோம் என்ற யதார்த்தம் நம்மில் பலருக்கு இன்னும் புரிவதில்லை.
நிமோனியாவைப் பொறுத்தவரையில் நமக்கு இருக்கும் சவால் அதை அடையாளம் காண்பதில் இருந்து தொடங்குகிறது. இது ஒரு அதிரடியான தொற்று நோய் அல்ல. இது கொஞ்சம் கொஞ்சமாகவே அதன் பாதிப்பை வெளிப்படுத்துகிறது. இடைவிடாத இருமல். மீண்டும் மீண்டும் வரும் காய்ச்சல். படிக்கட்டுகளில் ஏறும் போது மேலும் அதிகமாகும் மூச்சுத் திணறல் போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கின்றன.
ஆனால். நம்மில் பெரும்பாலானவர்கள் இந்த அறிகுறிகளை வழக்கமாக ஏற்படும் பருவக்கால காய்ச்சல் அல்லது நீண்ட நாட்கள் வரை இருக்கும் வைரஸ் தொற்று என்று சாதாரணமாக நினைத்து கொண்டு உரிய சிகிச்சையை எடுக்காமல் விட்டுவிடுகிறோம். இதனால் நாம் மருத்துவரைப் பார்க்க செல்லும் நேரத்தில், நோய் நுரையீரலுக்குள் ஆழமாகப் பரவி அதன் பாதிப்பைத் தொடங்கியிருக்கும்.. நோயைக் கண்டறியும் செயல்முறையைப் புரிந்துகொள்ளுதல்
ஒருவர் நிமோனியா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருகிறார் என்றால், வழக்கம் போல் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டுவிட்டு மருத்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பது இல்லை. மாறாக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மருத்துவ அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள்.
முதலில், எத்தனை நாட்களாக உடல்நிலை சரியில்லை? இந்த பாதிப்பு எப்போது அதிகமானது? என்னென்ன அறிகுறிகள் இருக்கின்றன? உங்கள் இருமல் எப்படி இருக்கிறது? சளி வெளியே வருகிறதா? என நோயின் முழு வரலாறு குறித்து கேட்கப்படும். இந்த கேள்விகள் நிமோனியாவா அல்லது வேறு ஏதேனும் நோயா என்பதைக் கண்டறிய உதவுகின்றன. அடுத்து, மருத்துவ பயனாளரின் உடலில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதயத்துடிப்பு கேட்கும் கருவியான ஸ்டெதஸ்கோப் கொண்டு நுரையீரலுக்குள் என்ன நடக்கிறது என்பது அறியப்படுகிறது. நிமோனியா பாதிப்பு இருந்தால், அது குறிப்பிட்ட ஒலிகளை, அதாவது மருத்துவர்கள் குறிப்பிடும் ‘கிராக்கலிங்’ (crackling) அல்லது க்ராக்கிள்ஸ் {crackles} ஒலிகளை உருவாக்குகிறது. சில நேரங்களில் மூச்சிரைப்பும் (wheezing) இருக்கலாம். மருத்துவப் பயனாளர் மூச்சின் வேகம் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஒருவர் சாதாரணமாக இருக்கும்போது நிமிடத்திற்கு 30 முறை சுவாசித்தால், அது ஒரு எச்சரிக்கை அறிகுறி என்று நினைவில் கொள்ளவேண்டும். பல்ஸ் ஆக்ஸிமீட்டர் எனப்படும் சாதனம் நம் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிய உதவுகிறது.
இதை நம்முடைய விரல் நுனியில் க்ளிப் போன்று மாட்டிக் கொள்வதன் மூலம் ஆக்ஸிஜன் அளவு என்ன, நுரையீரல்கள் ஆக்ஸிஜனை எவ்வளவு நன்றாகப் பரிமாறிக்கொள்கின்றன என்பதை தெரிந்து கொள்ளமுடியும். பெரியவர்களுக்கு 94%-க்குக் கீழே உள்ள அளவுகள் இருந்தால், அந்நிலை தொற்று நுரையீரலின் செயல்பாட்டைப் பாதிக்கிறது என்பதைக் குறிக்கிறது. மார்பு எக்ஸ்ரே: மருத்துவ பரிசோதனைகளுக்கான தங்கத் தரத்திலான பரிசோதனை (The Gold Standard)
மார்பு பகுதியில் எடுக்கப்படும் எக்ஸ்-ரே நிமோனியாவை உறுதிப்படுத்துவதற்கான மிகவும் நம்பகமான சோதனையாக இருந்து வருகிறது. ஒரு கதிரியக்க நிபுணரால் (Radiologist), எக்ஸ்-ரேயில் நிமோனியாவுக்கென இருக்கும் ஒரு தனித்துவமான தோற்றத்தை வைத்து கண்டறிந்துவிட முடியும். பொதுவாக நம்முடைய நுரையீரல் காற்றால் நிரப்பப்பட்டு கருமையாகத் தெரியும்.
ஒரு ஆரோக்கியமான நுரையீரலுக்கு மாறாக, நிமோனியா உள்ள இடங்களில் வெண்மையான திட்டுகள் அல்லது நிழல்கள் தனித்துத் தெரியும். பாக்டீரியாவால் உண்டாகும் நிமோனியாவில், இந்தத் திட்டுகள் அடர்த்தியாகவும், ஒரு பகுதியில் மட்டும் பரவியிருக்கும். அதேநேரம், வைரஸால் உண்டாகும் நிமோனியாவில், அதன் வடிவம் வேறுபடுகிறது, இது போன்ற திட்டுகள் அதிகளவில் பரவியிருப்பதோடு, இரண்டு நுரையீரல்களிலும் ஆங்காங்கே அதிகம் காணப்படும்.
ஆனால் இந்த மார்பு எக்ஸ்-ரே பரிசோதனையிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஆரம்ப நிலையில் இருக்கும் நிமோனியா பாதிப்பு எக்ஸ்-ரேயில் தெரியாமல் போக வாய்ப்பிருக்கிறது.. சில மருத்துவ பயனாளர்கள் நிமோனியா பாதிப்பினால் உண்டாகும் தெளிவான மருத்துவ அறிகுறிகளுடன் வருவார்கள்.
அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள், மூச்சுவிடுவதில் சிரமப்படுகிறார்கள், அவர்களின் உடலில் ஆக்ஸிஜன் குறைவாக உள்ளது போன்ற அறிகுறிகள் இருந்தாலும், அவை எதையும் வெளிப்படுத்தாத வகையில் எக்ஸ்-ரே சாதாரணமாகத் தெரியலாம். இத்தகைய சூழலில்தான் ரத்த பரிசோதனைகள் முக்கியமானவையாக மாறுகின்றன. எக்ஸ்-ரேயையும் தாண்டி ரத்த பரிசோதனை ஏன் முக்கியம்
ஒரு முழுமையான ரத்த அளவு எண்ணிக்கையை கண்டறியும் ரத்தப் பரிசோதனை (Complete Blood Count) நமக்கு தொற்று இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய உதவுகிறது. நம்முடைய உடல் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் போது வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை (WBC count) அதிகரிக்கிறது.
ப்ளட் கல்ச்சர் என்னும் ரத்தப் பரிசோதனைகள் (Blood Cultures) மிகவும் துல்லியமாக கண்டறிய உதவுகின்றன. இந்த பரிசோதனையில் நிமோனியாவை ஏற்படுத்தும் உண்மையான பாக்டீரியாவை ஆய்வகத்தில் வளர்ப்பதன் மூலம், சரியான நோய் எதிர்ப்பு மருந்தை மருத்துவர்கள் தேர்வு செய்ய உதவுகிறது.
இந்தியாவில், நிமோனியாவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வடிவங்களில் ஏற்படும் மாற்றங்களை நாம் பார்க்க முடிகிறது. மைக்கோபிளாஸ்மா நிமோனியா (Mycoplasma pneumoniae) அதிகரித்து வருகிறது, குறிப்பாகக் குழந்தைகளிடையே. ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா (Streptococcus pneumoniae) மற்றும் கிளெப்செல்லா நிமோனியா (Klebsiella pneumoniae) ஆகியவை அடிக்கடி பாதிக்கும் காரணிகளாக இருந்து வருகின்றன.
இதனால் எந்த நுண்ணுயிரி காரணமாக நோய் வந்துள்ளது என்பதை கண்டறிவது மிக மிக முக்கியம். இதற்கு காரணம், வெவ்வேறு பாக்டீரியாக்கள் வெவ்வேறு நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படுகின்றன. அதைப் பொறுத்து மருத்துவர்கள் உரிய மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர். நோயாளிகள் இருமும் போது வெளியேறும் கபம் அல்லது சளி மாதிரிகள் (Sputum samples) பாதிப்பு எதனால் உண்டாகி இருக்கிறது என்பதை கண்டறிவதற்கான மற்றொரு துப்பை அளிக்கின்றன. இதை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தொற்றுக்கு காரணமான குறிப்பிட்ட நோய்க்கிருமி குறித்த தகவலைப் பெறமுடிகிறது.
நடைமுறையில் உள்ள சவால்
இன்றைக்குள்ள நடைமுறையில், இந்தியாவில் நிமோனியா நோயைக் கண்டறிவதில் சில தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கிராமப்புறங்களில் பெரும்பாலும் கதிரியக்க நிபுணர்கள் இல்லை. எக்ஸ்-ரே இயந்திரம் உள்ள ஒரு மருத்துவமனையை அல்லது பரிசோதனை ஆய்வகத்தை அடைய மருத்துவ பயனாளர்கள் தங்களது ஊரிலிருந்து பல மணிநேரம் பயணிக்க வேண்டியிருக்கலாம்.
இது போன்ற காரணங்களால் நோய் பற்றி கண்டறிவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில், அவர்கள் நோயறியும் பரிசோதனையை மேற்கொள்ளும் நேரத்தில், நோயின் பாதிப்பு அதிகரித்து இருக்கும். பெருநகரங்களில் உள்ள அனுபவம் வாய்ந்த கதிரியக்க நிபுணர்களுக்கு, தினமும் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ பயனாளர்களுக்கன பரிசோதனை செய்து, அதன் முடிவுகளை கண்டறிய வேண்டிய பணி பெரும் சுமையாகி இருக்கின்றன.
சில நேரங்களில் அவர்கள் தினமும் நூற்றுக்கணக்கான எக்ஸ்-ரே படங்களைப் பார்த்து பகுப்பாய்வு செய்ய வேண்டியிருப்பதால், ஒரு சில மருத்துவ பயனாளர்களின் பாதிப்பை சரிவர கவனிக்காமல தவறவிடக்கூடிய அபாயமும் அதிகமிருக்கிறது. சரியான நேரத்தில் நோயைக் கண்டறிவது மிக முக்கியமானது
ஒருவர் நோயுற்ற இரண்டாவது நாளிலேயே, அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், அவர் சீக்கிரமாகவே நோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியும், இதனால் அவர் ஒரு வாரத்தில் வீட்டில் இருந்தபடியே குணமடையும் வாய்ப்புகள் இருக்கிறது.
அதே நபருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது ஏழாவது நாளில் கண்டறியப்பட்டால், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். காரணம் அவருக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை மற்றும் சில சமயங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) தேவைப்படலாம்.
இந்த வித்தியாசம் வெறும் வாழ்க்கைத் தரம் சார்ந்தது மட்டுமல்ல. அது இறப்பு விகிதத்திலும் மாற்றத்தை உருவாக்க வல்லது. தாமதமாக நோய் பாதிப்பைக் கண்டறிவது நிமோனியாவை செப்சிஸ் (sepsis), தீவிர சுவாசக் கோளாறு சிண்ட்ரோம் (ARDS) அல்லது உறுப்பு செயலிழப்பு (organ failure) வரை பாதிப்பு ஏற்படுத்த செய்கிறது. முக்கிய சாராம்சம்
நிமோனியா பாதிப்பைக் கண்டறிவது அவ்வளவு சிக்கலானது அல்ல. ஆனால் பாதிப்பின் அறிகுறிகளை துல்லியமாக அடையாளம் கண்டு, உடனடியாக மருத்துவ உதவியைப் பெற வேண்டும். அதற்குப் பிறகு பொருத்தமான பரிசோதனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
மருத்துவ பயனாளருக்கு தொடர்ந்து இருக்கும் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் போது முன்கூட்டியே வந்தால், நோய் குறித்து எளிதில் கண்டறிந்துவிடமுடியும்.
அதனால் பிரச்சினை நோயைக் கண்டறிய உதவும் மார்பு எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனைகள் மற்றும் ஆக்ஸிஜன் அளவைக் கண்டறியும் சாதனம் ஆகியவற்றில் இல்லை. ஆனால் ஒருவர் எவ்வளவு துரிதமாக மருத்துவ சிகிச்சையைப் பெறுகிறார் என்பதில்தான் உள்ளது.
தீர்வு ரொம்ப எளிமையான ஒன்றுதான்
மூன்று நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் இருமலைப் புறக்கணிக்காதீர்கள். மூச்சுத் திணறல் இருந்தால் அதை அசட்டையாக கருதாதீர்கள். அறிகுறிகள் மோசமடையும் வரை காத்திருக்க வேண்டாம்.. ஆரம்பகாலத்திலேயே நோயைக் கண்டறிவது, நிமோனியாவை உறுதிப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல் நோயின் முழுப் போக்கையே மாற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ரேடியாலஜி மருத்துவர் பிரசன்ன விக்னேஷ்
|