குளிர்கால ஆஸ்துமாவை சமாளிக்கும் வழிகள்!



பொதுவாக மழைக்காலம் தொடங்கிவிட்டாலே ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு காற்றில் உள்ள ஈரப்பதத்தால் குளிர்காலத்தில் சுவாசிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டு, ஆஸ்துமா தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஆஸ்துமா தாக்குதல் என்பது என்ன, அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும், அவற்றை எப்படி தடுக்கலாம், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் செய்ய வேண்டிய தற்காப்பு வழிமுறைகள் என்ன, செய்ய கூடாதவை  என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்  நுரையீரல் நிபுணர் மருத்துவர் நவின் வெண்ணிலவன்.

ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை:

ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் அதற்கான மருந்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.அவர்கள் இன்ஹேலரை சரியான நுட்பத்தில் பயன்படுத்த வேண்டும்.அவர்கள் வருடாந்திர இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது ஆஸ்துமா பிரச்னைக்கு பாதுகாப்பாக இருக்கும்.

குளிர்காலத்தில் வெளி இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும். குளிர்காலத்தில் காலை நேரத்தில் மூடுபனி அதிகமாக இருக்கும். எனவே, அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வது, ஜாகிங் செல்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். குளிர் காலத்தில் பூஞ்சை காளான்கள் இருப்பதற்கு வாய்ப்பு அதிகமுள்ளதால் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்.

வீட்டு உறுப்பினர்களுக்கோ அல்லது அலுவலகத்திலோ அருகில் அமர்ந்திருக்கும் நபருக்கு சளி, இருமல் இருந்தால் அவர்களிடமிருந்து சற்று விலகி இருக்க வேண்டும். ஆஸ்துமாவைத் தூண்டும் வகையிலான வாசனை திரவியங்கள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். சுற்றுசூழல் மாசு, தூசி போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். 

வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்த்து வந்தால் அவற்றின் முடிகள் தரையில் விழுவது போன்ற விஷயங்களைத் தவிர்க்கவும்.ஆஸ்துமா உள்ளவர்கள், மூச்சுவிடுவதில் ஏதேனும் மோசமான அறிகுறிகள் இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

சுவாச கோளாறு பிரச்னை உள்ளவர்கள் செய்ய வேண்டியவை

சுவாச கோளாறு பிரச்னை உள்ளவர்கள் கட்டாயமாக புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். 

அருகில் யாராவது புகைபிடித்துக் கொண்டிருந்தால் அவர்களின் அருகில் நிற்காமல் சற்று விலகி நிற்பது மிக மிக அவசியமாகும். 

தினசரி சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். 

சுவாச கோளாறு உள்ளவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  ஆரோக்கியமான உணவுமுறையையே பின்பற்ற வேண்டும். 

சுற்று சூழல் காற்று மாசுபாட்டிற்கு ஆளாகாமல் இருக்கவும்.

உங்கள் உட்புற அறைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் ரசாயனங்கள் மற்றும் புகை போன்ற தொழில்களில் பணிபுரிபவராக இருந்தால், அவ்வப்போது நுரையீரல் செயல்பாடு சோதனை போன்ற வருடாந்திர சுகாதார பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

கை சுகாதாரம் மற்றும் இருமல் நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். குறிப்பாக பொது இடங்களுக்குச் சென்ற பிறகு உங்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். 

அதுபோன்று பொது இடங்களில் உள்ள பொருட்களைத் தொட்ட பிறகு உங்கள் கையை உங்கள் முகத்தில் தேவையில்லாமல் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனையின்படி இன்ஃப்ளூயன்ஸா மற்றும் நிமோனியாவிற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பிராணாயாமா மற்றும் யோகாசனங்கள் போன்ற மூச்சுப் பயிற்சிகளை தினமும் செய்யுங்கள்.

ஒருவருக்கு சளி அல்லது இருமல் இருக்கும்போது அந்த நபரிடமிருந்து விலகி இருங்கள் அல்லது முகக் கவசம் அணிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு சளி இருந்தால், மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க, இருமல் அல்லது தும்மும்போது உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ள வேண்டும். இதனால், உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு தொற்று  ஏற்படும் வாய்ப்பு குறையும். 

ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடியுங்கள், தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே தடுப்பூசி போட வேண்டும்.

தொற்றுநோயைத் தவிர்க்க வீட்டில் போதுமான காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

நுரையீரல் நோயைத் தவிர்க்க பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், வறுத்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள், சர்க்கரை பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

- ஸ்ரீதேவி