புத்தக வாசிப்பு தரும் பெரிய நன்மை!ஆராய்ச்சி

வாசிக்கும் பழக்கமே மறந்து போய்விட்ட இன்றைய இளசுகள், மொபைல் ஸ்கிரீனில் போகிற போக்கில் தகவல்களை தெரிந்து கொள்வதையே பெரிதும் விரும்புகின்றனர். அதுவும் டெக்ஸ்ட் மெஸேஜ்களாக இல்லாமல், விஷூவலாக இருந்தால் மட்டுமே பார்க்கும் வழக்கம் இருக்கிறது.

இவ்வளவு ஏன்? பள்ளிகளிலேயே டிஜிட்டல் திரைகளில் படங்களைக் காட்டித்தான் பாடம் எடுக்கிறார்கள். எதிர்காலத்தில் புத்தகம், நோட்டுக்குப் பதில், டேப்ளட், லேப்டாப்களைத்தான் எல்.கே.ஜி குழந்தைகளும் பள்ளிக்கு எடுத்துச் செல்லப் போகிறார்கள். ஆனால், இப்படி டிஜிட்டல் திரையில் படிக்கும் தகவல்கள் அவர்கள் மனதில் நிற்கிறதா என்பது சந்தேகமே.

இதைப்பற்றி அமெரிக்காவின் ஓரிகன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கம்ப்யூட்டர்திரை மூலம் கற்பவர்களைவிட புத்தகங்களை வாசித்து கற்றுக்கொள்பவர்கள் தாங்கள் படித்தவற்றின் கருத்துக்களை ஆழமாகப் புரிந்து கொள்பவர்களாகவும், அவற்றை நெடுநாள் நினைவில் வைத்துக் கொள்பவர்களாகவும் இருப்பதாக கண்டறிந்துள்ளது.

‘காகிதத்தில் அச்சு எழுத்துக்களாக படிக்கும்போது கருத்துக்களை எங்கு, ஏன், எப்போது என சுருக்கமாகவும் அதே நேரத்தில் திடமாகவும் நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறது’ என்கின்றனர் ஆய்வாளர்கள்.45 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இருபிரிவாக பிரித்து, ஒரு செய்தித்தாளை ஆன்லைனில் ஒருபிரிவினரும், அதையே அச்சுப்பிரதியில் மற்றொரு பிரிவினரும் படிக்க வைக்கப்பட்டனர்.

பின்னர், தாங்கள் படித்ததைப்பற்றி சொல்லும்போது, ஆன்லைனில் படித்தவர்களைவிட அச்சுப்பதிவுகளைப் படித்தவர்கள் அதில் உள்ள கதைகள், தலைப்புகள் மற்றும் முக்கியத் தகவல்களை நினைவில் வைத்திருந்தனர். ஏனெனில், ஆன்லைனில் விளம்பரங்கள், அதோடு தொடர்புடைய லிங்குகள், இ-மெயில்கள் என எக்கச்சக்க குறுக்கீடுகள் இருந்ததால் அந்த மாணவர்களின் கவனம் திசை திரும்பியது.

‘உடனடித் தகவல்களுக்கு வேண்டுமானால் ஆன்லைனில் படித்து தெரிந்து கொள்ளலாம். ஒரு விஷயத்தைப்பற்றி ஆழமாக கற்றுக்கொள்ளவும்,
கற்றுக்கொண்டதை நீண்டகாலம் நினைவில் வைத்துக் கொள்ளவும் புத்தக வாசிப்பே உதவும்’ என்பதே இந்த ஆய்வின் இறுதி முடிவு.

- என்.ஹரிஹரன்