மன அழுத்த மருந்துகளால் நிஜமாகவே பலன் உண்டா?!விளக்கம்

மனநல சிகிச்சையில் கொடுக்கப்படும் Anti-depressants மாத்திரைகள் உண்மையில் பலனற்றவை; உளவியல்ரீதியாக மாய விளைவை ஏற்படுத்துபவை என்கிற ரீதியில் இன்றளவும் விவாதத்துக்குரிய விஷயமாகவே பேசப்பட்டு வருகிறது. அதனால்தான் இதனை Placebo Effect என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆனால், மருத்துவ பத்திரிகையான Lancet வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கை, இந்த மாத்திரைகளுக்கு சாதகமான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறது.

மன அழுத்தம் மற்றும் பிற மனநோய்களின் மருத்துவ மேலாண்மைக்கு கொடுக்கப்பட்டு வந்த Anti Depressants மாத்திரைகள், ஒரு மாய விளைவினை ஏற்படுத்துபவையாக இதுநாள் வரை நம்பப்பட்டு வந்தாலும், லான்சட் ஆய்வறிக்கையில் அவை உண்மையிலேயே மிகவும் பயனுள்ள விளைவை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

லான்சட் ஆய்வில், பொதுவான 21 மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை 522 சோதனைகளிலிருந்து பெற்ற தரவுகளை பகுப்பாய்வு செய்ததின் அடிப்படையில், பெரும்பாலான மருந்துகள், உண்மையிலேயே பெரியவர்களின் மன அழுத்த அறிகுறிகளை குறைப்பதாக சொல்லப்படுகிறது.  

உலகம் முழுவதும் உள்ள உளவியலாளர்கள் இந்த ஆய்வை வரவேற்று பேசியிருக்கிறார்கள். மனநோய்க்கான சிகிச்சையில் மருந்துகளற்ற வெறும் உளவியல் ஆலோசனை மட்டும் பயனளிக்காது. மன அழுத்தம் என்பது லேசானது, மிதமானது மற்றும் கடுமையானது என்று மூன்று வழிகளில் வகைப்படுத்தப்படுகிறது. லேசான மன அழுத்தத்துக்கு உளவியல் ஆலோசனை, அறிவாற்றல் சிகிச்சையே போதுமானது. மிதமான மற்றும் கடுமையான மன அழுத்தத்துக்கு மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள்தான் தீர்வளிப்பவை.

‘ஆலோசனைகளையும், இதர சிகிச்சைகளையும் ஏற்க முடியாமல்தான் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும் ஒரு நபர், தற்கொலை முயற்சிக்கு உந்தப்படுகிறார்’ என்ற கருத்தை வலியுறுத்துகிறார்கள். இந்திய தேசிய மன நல சுகாதார ஆய்வுமையத்தின் 2016-ம் ஆண்டு அறிக்கை, மருத்துவ மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதம்பேர் இன்றளவும் சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பதாக தெரிவிக்கிறது.

‘‘தற்கொலை முயற்சிகள் மற்றும் தீவிர மன அழுத்தத்துக்கு உளவியல் ஆலோசனைகளே போதுமானதாக பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். இது மிகவும் தவறான நம்பிக்கை. மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் நிச்சயம் தேவை.

மேலும், மனத்தளர்ச்சிக்கு கிடைக்கக்கூடிய பாதுகாப்பான சிகிச்சை முறைகளில், உலகெங்கிலும் உள்ள உளவியல் வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட இந்த மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளின் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு நிரூபிக்கிறது’’ என்று வழிமொழிகிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.எப்படியோ ஒரு குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது!

- என்.ஹரிஹரன்