உங்களை நீங்களே காதலியுங்கள்!Centre Spread Special

வாழ்க்கையில் வெற்றி பெற முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களா? உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திருமண வாழ்க்கையில் தினந்தோறும் போராட்டத்தைச் சந்திக்கிறீர்களா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் உங்கள் பதில் 'ஆம்' என்றால் உங்களை நீங்களே வெறுப்பவராகத்தான் இருப்பீர்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

தொழில் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை இந்த மூன்றிலும் வெற்றி தரும் ரகசிய மந்திரம் ‘தன்னை நேசித்தலில்’ அடங்கியிருக்கிறது என்பதை உளவியலாளர்கள் பல ஆய்வுகளின் மூலம் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

உங்களை நீங்கள் விரும்பாவிட்டால் மற்றவர்கள் எப்படி உங்களை விரும்புவார்கள் என்கிற ஆராய்ச்சியாளர்கள், சுய அன்பு செலுத்துவதை சுயநலமாகவோ, திமிர்த்தனமாகவோ புரிந்துகொள்ள வேண்டாம் என்றும் முன் எச்சரிக்கையோடு சுட்டிக் காட்டுகிறார்கள்.

நம்முடைய நல்ல செயல்களுக்காக நம்மை நாமே பாராட்டிக்கொள்வதும், நம்முடைய நல்ல குணங்களை நினைத்து நாமே பெருமிதம் கொள்வதும், நடந்த நல்ல நிகழ்வுகளை எண்ணி மகிழ்வதும் தன்னை நேசிப்பதில் அடங்கும். நம்மை நேசிப்பது மற்றவர்
களிடத்திலும் நேசம் கொள்ள வைக்கும். சரி... எப்படி நம்மை நாமே நேசிப்பது?

‘‘இந்த வேலையை நம்மால் செய்ய முடியும் என்று உங்கள் மீது நம்பிக்கை வைத்து, துணிந்து செயல்பட்டால் நல்ல முடிவுகளை எட்ட முடியும். உங்களிலிருந்து  தொடங்கும் நம்பிக்கை, மற்றவர்களும் உங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்.வாழ்வில் நடக்கும் வெற்றி, தோல்வி என எல்லா நிகழ்வுகளையும் ஒரே மாதிரி ஏற்று அனுபவிக்கத் தொடங்குவதன் மூலமும் மனம் பக்குவம் அடையும். தவறு செய்யும்போது உங்களை நீங்களே திட்டிக்கொள்ளாதீர்கள். தவறு செய்வது இயல்பானதுதான்; அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று உங்கள் மீது நீங்களே இரக்கம் காட்டுங்கள்.

இன்னொரு வாய்ப்பளியுங்கள். முக்கியமாக, நான் எதற்கும் லாயக்கில்லை என்று முடிவு செய்யாமல், தன்னைத்தானே மதிக்கத் தொடங்குங்கள். உங்கள் தனிப்பட்ட தோற்றத்துக்கும், நேரத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவமே பிறரையும் உங்கள் மீது மதிப்பு கொள்ள வைக்கும்’’ என்று அறிவுறுத்துகிறார்கள் உளவியலாளர்கள்.

ஓஷோ குறிப்பிடும் இந்த அறிவுரையையும் எப்போதும் மனதில் கொள்ளுங்கள்... ‘உன்னை முழுமையாக ஏற்றுக் கொள். உன்னை நேசி. உன்னைப் போன்ற ஒருவர் இந்த உலகத்தில் எங்கேயும் இல்லை. நீ ஒருவர்தான். உன்னுடைய தனித்துவத்துக்கு மதிப்பளி. ஒப்பிடுதலை விட்டுவிடு. மற்றவர்களிடம் அன்போடு இருப்பது என்பது அவர்களின் தனித்துவத்தை மதிப்பது ஆகும்!’

- இந்துமதி