சாம்பியன்கள் ஒரே நாளில் உருவாவதில்லை!



Celebrity Fitness

சர்வதேச விளையாட்டரங்கில் இந்தியாவை தலைநிமிர வைக்கும் வீரர்களில் முக்கியமானவர் பி.வி.சிந்து. 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் பேட்மின்டன் ஒற்றையர் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமைக்குரியவர்.

சிந்துவைப்பற்றி தெரியாதவர்களே இன்று இருக்க முடியாது என்கிற அளவுக்கு சர்வதேச அளவில் புகழையும் அன்பையும் அபரிமிதமாகப் பெற்றவர். களத்தில் இவரது அசாதாரண வேகமும், சாதுர்யமான பதிலடிகளும் எதிராளியைத் திணறடிப்பவை. ரசிகர்களுக்கு விருந்து படைப்பவை.

ஆனால், இவை எல்லாமே ஒரே நாளில் சாத்தியமாகி விடவில்லை. இதற்குப் பின்னணியில் அவரது அபார உழைப்பும், ஃபிட்னஸ் கான்ஷியஸும், கடினமான உணவுமுறைகளும் அடங்கியிருக்கின்றன.2001-ல் பேட்மின்டன் வீரர் கோபிசந்தின் வெற்றியின்பால் ஈர்க்கப்பட்ட சிறுமி சிந்து, தன்னுடைய 8 வயதிலேயே பேட்மின்டன் பயிற்சியை அவரிடமே கற்க ஆரம்பித்துவிட்டார். கோபிசந்திடம் பேட்மின்டன் பயிற்சியைத் தொடரும் அதேவேளையில், தன்னுடைய ஃபிட்னஸுக்காக கிரண் சாலகுன்ட்லா என்னும் இயன்முறைப்பயிற்சியாளர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சித் திட்டத்தையும் தவறாமல் பின்பற்றுகிறார்.

அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ளும் ரத்த அமைப்பு, உடல் எடை, இதயத்துடிப்பு, உடல்வலிமை மற்றும் தாங்கும் சக்தி ஆகிய உடல் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே தன்னுடைய உடற்பயிற்சித் திட்டங்களில் கவனம் செலுத்துகிறார். இந்த பரிசோதனைகளின் முடிவுக்கேற்ப உடற்பயிற்சி திட்டங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை சிந்துவுக்குப் பரிந்துரைக்கிறார் கிரண் சல்லாகுன்ட்லே.

‘‘சிந்து மிகவும் உயரமாக இருப்பதால் அவரது உடலை பராமரிப்பதில் சமநிலையும், ஸ்திரத்தன்மையும் முக்கியம். மேலும், எப்போதும் அவரது கால்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உடற்பயிற்சி திட்டத்தை பின்தொடர்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

அதனால் அவரது கால்களை வலிமைப்படுத்துவதில் ஓட்டப்பயிற்சிக்குத்தான் முதலிடம். இதற்காக Power Run, Tempo run, Ladder Run என விதவிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார். சில நேரங்களில் 10 கி.மீட்டர் வரை ஓட்டப்பயிற்சி செய்கிறார்’’ என்று சிந்துவின் ஸ்பெஷல் பயிற்சியைப் பற்றி விவரிக்கிறார்.

பேட்மின்டன் பயிற்சியாளரான கோபிசந்தோ ஜங்க் ஃபுட், இனிப்பு, உயர் கலோரி உணவுகள் போன்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் எந்த உணவுகளும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சிந்துவுக்கு தடை விதித்துள்ளார். ஏனெனில், விளையாட்டு வீரர்களுக்குக் காயம் ஏதேனும் ஏற்பட்டால் அதிலிருந்து விரைவில் குணமடைவதற்கு இனிப்பு தடையாக இருக்கும். சிந்துவின் தினசரி உணவுகளை தீவிரமான கண்காணிப்பில் இவர்
வைத்திருக்கிறார்.

‘‘மற்றவர்களின் சாதாரண பசியை விட மிகவும் அளவு குறைவாக இருப்பதால் சிந்துவை பொருத்தவரை எனக்கு இது ஒரு சவாலாகவே இருக்கிறது. இதற்காக அவர் ஒவ்வொரு உணவுடனும் துணை ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், புரதம் நிறைந்த ஊட்டச்சத்து பானம் விளையாட்டுக்கு நடுவே அருந்துவதும் முக்கியம்’’ என்கிறார்.

காலை 4 மணிக்கு அன்றைய நாளைத் தொடங்கும் சிந்துவுக்கு தினமும் காலை மட்டுமே 3 திட்டமிடப்பட்ட பயிற்சிக் கட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அதிகாலை 4 மணியிலிருந்து 7 மணி வரையிலும், இரண்டாம் கட்டம் 8 மணியிலிருந்து 10 மணி வரையிலும், மூன்றாம் கட்டமாக 11 மணியிலிருந்து 12 மணி வரையிலும் பயிற்சிகள் செய்ய வேண்டும்.

அடுத்தது மாலை ஜிம் மற்றும் டென்னிஸ் பயிற்சிக்கட்டங்கள் அல்லது ஜிம் உடற்பயிற்சிகள் மற்றும் ஓட்டப்பயிற்சிகள் 3 மணி நேரம் செய்ய வேண்டும். இவற்றை வாரத்தில் 6 நாட்களும் எந்தவித இடைவெளியும் இல்லாமல் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இதைக்கேட்டாலே கிறுகிறுக்கும். ஆனால், இன்னும் அவரது பயிற்சித் திட்டம் முடியவில்லை. மேற்சொன்ன பயிற்சிகளோடு தினமும் 100 புஷ்-அப்ஸ், 200 சிட்-அப்ஸ், அடிவயிற்றுக்கான பயிற்சிகள் மற்றும் வாரத்துக்கு மூன்று முறை வலுப்பயிற்சிகள்.

இதுதவிர பவர் யோகா, மூச்சுப்பயிற்சி, பிராணாயாமம், மற்றும் நீச்சல் பயிற்சி போன்றவையும் தினசரி வேலை பட்டியலில் இடம்பெறுகின்றன.
இதெல்லாம் ஏதோ ஒரு நாள் செய்யும் வேலை என்று நினைத்துவிடாதீர்கள்.

சாம்பியன் சிந்து, ஒவ்வொரு நாளும் தவறாமல் செய்து கொண்டிருக்கும் பயிற்சிகள் மற்றும் உணவு அட்டவணைகள்.நிஜமாகவே தலை சுற்றுகிறதா… ஆமாம்… சாம்பியன்கள் ஒரே நாளில் உருவாவதில்லை. ஒவ்வொரு நாளும் உருவாகிறார்கள்!

- இந்துமதி