கழுத்து மற்றும் தோள்பட்டை வலிகள்எலும்பே நலம்தானா?!

தசைகள், நரம்புகள், ரத்தக் குழாய்கள், எலும்புகள், தசைநார்கள் என எல்லாம் இணைந்த பகுதிகள் உங்கள் கழுத்தும், தோள்பட்டைகளும். இவற்றில் எதில் பிரச்னை வந்தாலும் கழுத்திலோ, தோள்பட்டையிலோ வலி ஏற்படலாம். சில வலிகள் சாதாரணமானவையாகவும், சில அவசர சிகிச்சையாகக் கருதப்பட்டு சிகிச்சையளிக்கப்பட வேண்டியவையாகவும் இருக்கக்கூடும்.கழுத்து மற்றும் தோள்பட்டை வலிகளுக்கான காரணங்களையும், அவற்றைத் தவிர்க்கும் முறைகளையும் பற்றிப் பார்ப்போம்.

கழுத்து வலிக்கான அடிப்படை காரணங்கள்

*எலும்புகளிலும், மூட்டு இணைப்புகளிலும் தென்படுகிற அசாதாரண நிலைகள்.
*விபத்து
*தவறான நிலைகளில் நிற்பது, நடப்பது, உட்காருவது மற்றும் படுப்பது
*உடல்சிதைவு நோய்கள்
*கட்டிகள்
*தசைப் பிசகு

தோள்பட்டை வலிக்கான காரணங்கள்

தோள்பட்டையானது பந்து கிண்ண மூட்டு வடிவத்தைக் கொண்டது. இதைச் சுற்றியுள்ள மென்மையான சவ்வுப் பகுதி, ஏதேனும் காயங்கள் ஏற்படும்போது இறுகிப்போகும். மூட்டின் இயக்கம் பாதிக்கப்படும். தோள்பட்டையின் அமைப்பானது இத்தகைய திடீர் அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ளும் வகையில்தான் இருக்கும் என்றாலும் சில நேரங்களில் அப்படியில்லாமலும் போகக்கூடும். அதனால் கடுமையான வலி ஏற்படும்.

தோள்பட்டை வலிக்கான பிற காரணங்கள்

* அதிக உடலுழைப்பின் காரணமாக ஏற்படுகிற தசைப்பிசகு
* தசைநாண் அழற்சி
* தோள்மூட்டு இணைப்பின் நிலையற்ற தன்மை
* இடப்பெயர்வு
* கழுத்து அல்லது மேல் கை எலும்பு முறிவு
* ஃப்ரோஸன்     ஷோல்டர் எனப்படுகிற பிரச்னை
* ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்புகள் பாதிப்படைந்து, இயங்க முடியாத நிலையான ரேடிகுலோபதி பிரச்னை

என்ன பரிசோதனைகள் தேவை?

* எக்ஸ் ரே

*இதன் மூலம் பாதிப்புள்ள பகுதியில் இரண்டு எலும்புகளுக்கு இடையிலுள்ள இடைவெளி, கீல்வாதத்துக்கான வாய்ப்புகள், கட்டிகள், மூட்டு நழுவுதல் பிரச்னை, எலும்பு முறிவு மற்றும் முதுகெலும்புகளில் உள்ள பாதிப்புகள் போன்றவற்றைக் கண்டறியலாம்.

*எம்.ஆர்.ஐ.

*நரம்பு தொடர்பான பிரச்னைகளை இந்தப் பரிசோதனையின் மூலம் துல்லியமாக அறியலாம். தவிர தசைநாண்கள் மற்றும் தசை நார்கள் தொடர்பான பிரச்னைகளையும் அறியலாம்.

*Myelography அல்லது சி.டி.ஸ்கேன்

*எம்.ஆர்.ஐக்கு மாற்றாக சில நேரங்களில் இவை பரிந்துரைக்கப்படலாம்.

*எலக்ட்ரோமையோகிராபி மற்றும் நர்வ் கன்டக் ஷன் வெலாசிட்டி

*கழுத்து, தோள்பட்டை மற்றும் கைகளில் ஏற்படும் வலிகளுக்கும், மரத்துப் போவதற்கும், கூச்ச உணர்வுக்கும் இந்தப் பரிசோதனைகளை சில
நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

சிகிச்சைகள்

ஆரம்பக்கட்ட வலிகளுக்கு வலி நிவாரணிகள் பரிந்துரைக்கப்படும். வலியின் தீவிரத்தைப் பொறுத்து தசைகளைத் தளர்த்தும் மருந்துகளும், தூக்கம் தரும் மருந்துகளும் தேவைக்கேற்ப பரிந்துரைக்கப்படும்.

கூடவே, ஐஸ் ஒத்தடங்கள் செய்யச் சொல்வார்கள் மருத்துவர்கள்.வலி அடுத்த கட்டத்துக்குப் போகும்போது கார்டிகோ ஸ்டீராய்டு ஊசிகள் தேவைப்படலாம். பிசியோதெரபி பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இவற்றுக்கெல்லாம் சரியாகாத வலிகளுக்கு எளிமையான அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம்.

வீட்டு சிகிச்சைகள்

ஓய்வு

பாதிக்கப்பட்ட பகுதியை அதிகம் பயன்படுத்தாத வகையில் அந்தப் பகுதிக்கு அதிக ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம்.

ஐஸ் ஒத்தடம்

ஐஸ் கட்டிகளை பிளாஸ்டிக் கவரில் கட்டி, அதன் மீது ஒரு காட்டன் துணியைச் சுற்றி வலியுள்ள பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறைகள் இப்படி செய்வது ஓரளவுக்கு வலியைக் குறைக்கும். ஐஸ் கட்டிகளை நேரடியாக வலியுள்ள சருமப் பகுதியில் வைக்கக்கூடாது.உயர்ந்த நிலைவலியிருக்கும் பகுதியை இதயத்துக்கு மேலாக உயர்த்தி வைத்திருப்பது வீக்கத்தைக் குறைக்கும். வலியையும் குறைக்கும். தலையணை உபயோகித்தும் இதைச் செய்யலாம்.

ஆயின்மென்ட்

மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகளை வலியுள்ள இடத்தில் தடவி ஓய்வெடுக்கலாம். வெந்நீர் ஒத்தடம் கொடுப்பதைத் தவிர்க்கவும். வலியுள்ள பகுதியில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது சிலரது வழக்கம். அது தவறு.

(விசாரிப்போம்!)

எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி