வெயிலால் வரும் வில்லங்கம்Heat Stroke

கோடை காலத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டிய பல பிரச்னைகளில் ஹீட் ஸ்ட்ரோக் என்கிற வெப்பத்தாக்க நோயும் ஒன்று. இந்த ஹீட் ஸ்ட்ரோக் எப்போது வருகிறது? எப்படி தவிர்ப்பது? வந்தால் சிகிச்சை என்னவென்பதைப் பற்றி மருத்துவ நிபுணர்கள் பல ஆலோசனைகளை ஒவ்வோர் ஆண்டும் கோடை காலத்தில் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அவற்றை நினைவில் வைத்துக் கொண்டு பின்பற்றுவது ஹீட்
ஸ்ட்ரோக்கில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உதவும்.

உடல் தன் இயல்பான வெப்பநிலையைப் பராமரிக்க முடியாமல் வெப்பம் உயர்ந்துகொண்டே வரும்போது வெப்பத் தாக்கம் நோய் (Heat stroke) உண்டாகிறது. இதை Sun stroke என்றும் அழைக்கிறோம். இது ஓர் ஆபத்தான வெப்பம் தொடர்பான நோய். இந்நோய் ஏற்பட்டிருக்கும் நிலையில் 10 முதல் 15 நிமிடங்களில் உடல் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி ஃபாரன்ஹீட்) அல்லது அதைத் தாண்டிச் செல்லும். இதற்கு உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால் மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வெப்பத் தாக்க நோய் ஏற்படும் விதத்தின் அடிப்படையில் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. வெப்பச் சூழலில் பொதுவாக கடுமையான உடற்
பயிற்சி செய்யும் இளைஞர்களுக்கு ஏற்படும் வெப்ப பாதிப்பை Exertional heat stroke (EHS) என்று சொல்கிறோம். உடலில் அதிக அசைவற்ற முதியோரையும், இளம் குழந்தைகளையும் தாக்குகிற நிலையை Non exertional heat stroke (NEHS) என்று சொல்கிறோம்.

வெப்பத் தாக்க நோயின் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள்சூடான மற்றும் சிவப்பான உலர்ந்த தோல், பலவீனமான நாடி, வேகமான மூச்சு, குமட்டல், அசாதாரண குறை ரத்த அழுத்தம், மயக்கம் போன்ற அறிகுறிகளை உடையது ஹீட் ஸ்ட்ரோக். உடல் வெப்ப அளவைக் கணக்கிடுதல், வெப்பத் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள அறிகுறிகளை மதிப்பிடுதல் போன்ற பிற பரிசோதனைகள் மூலமாகவும் இந்த நோயைக் கண்டறியலாம்.

இந்த நோயால் வலி, வெறி உணர்வு, உணர்வின்மை, குழப்பம், ஆழ்மயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. உடல் வெப்பப் பராமரிப்புக் குறைவினால் நரம்பியல் செயலிழப்பு உண்டாகிறது. இந்த நோய் கடுமையான நீண்டகால பிரச்னைகளை ஏற்படுத்துவதோடு, உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

நோய் ஏற்படுவதற்கான ஆபத்துக் காரணிகள் தூக்கக் குறைவு, உடல் பருமன், மோசமான உடல் நிலையியல், தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற மாறுதலின்மை, பால்வினை நோய், சிறுநீர்ப்பிரிப்பு சிகிச்சை, நீர்ச்சத்து இழப்பு, காய்ச்சல் நோய்கள், மதுப்பழக்கம், வியர்வை வெளியாவதைப் பாதிக்கும் தோல்நோய்கள், மிகையான பாதுகாப்புக் கவசங்கள், இயல்பான வெப்பப் பராமரிப்புக்குரிய பதில்வினைகளைப் பாதிக்கும் மருந்துகள், வெப்பத் தாக்கத்தால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருத்தல் போன்ற பிரச்னைகளை உடையவர்களுக்கு இந்நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது.

குழந்தைகள், வயதானவர்கள், நீடித்த நோயாளிகள், வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள், நடைபாதை மற்றும் குடிசைவாழ் மக்கள், தெருவோர வணிகர்கள் போன்ற சாமான்யர்கள் பலரும் வெப்பம் தொடர்பான நோய்கள் தாக்கும் ஆபத்து அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள். குளிர் பிரதேசத்தில் இருந்து வெப்பமான ஒரு தட்பவெப்ப நிலைக்கு வந்தவர்களுக்கும் வெப்ப நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.

இதுபோன்ற நபர்கள் தங்கள் உடலானது வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கு சீரான பின்னரே திறந்தவெளிப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். வெப்ப அலையின் போது உடல் படிப்படியாக வெப்பமான தட்பவெப்ப நிலையைத் தழுவிக் கொள்ளுமாறு செய்ய வேண்டும். அதிக அளவில் நீர் அருந்த வேண்டும். தண்ணீர் பாட்டில்கள், குடை, தொப்பி, தலை மூடி, கைத் துண்டு, கை விசிறி போன்றவற்றை உடன் வைத்துக்கொள்வது அவசர காலங்களில் உதவியாக இருக்கும்.

வெப்ப மண்டலப் பகுதியில் வெப்பம் தொடர்பான பிரச்னைகள் பரவலாக உள்ளது. மித வெப்பப் பகுதிகளிலும் உலக வெப்பமயமாதல் காரணமாக தற்போது இப்பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. சவுதி அரேபியாவில் அதிகளவில் வெப்பத் தாக்க நோய்கள் பதிவாகின்றன. இந்தியாவில் வட மற்றும் மேற்குப் பகுதிகளில் அடிக்கடி இப்பிரச்னைகள் அதிகம் உண்டாகிறது. 2015-ல் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களில் சராசரி அதிகபட்ச வெப்பநிலையைவிட 6 லிருந்து 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்தது.

இதனால் எழுந்த வெப்ப அலையால் 2,422 மனித மரணங்கள் நிகழ்ந்தன. ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவின் விதர்பா பகுதி, பீகார், ஜார்கண்ட் மற்றும் டெல்லி போன்ற பகுதிகள் இப்பிரச்னைகளால் அதிகளவு பாதிக்கப்படுகின்றன.

செய்ய வேண்டிய முதலுதவி

*உடல் வெப்பநிலை 40°C க்கு மேல் இருந்தால் அந்த நபரை குளிர்ந்த,நிழலான இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

*கழுத்து, அக்குள் என்று உடலை வெளிப்புறமாகக் குளிர்விக்க வேண்டும்.

*தண்ணீர் அல்லது நீ்ர்ச்சத்துள்ள பானங்களைக் கொடுக்க வேண்டும். மது, காஃபி மற்றும் வாயு உள்ள பானங்களை தவிர்க்க வேண்டும்.

*இறுக்கமான ஆடைகளை அணிந்திருந்தால் அதை அகற்றிவிட்டு, காற்றோட்டத்துக்கு ஏற்ற தளர்வான ஆடைகளை அணிவிக்க வேண்டும்.  

*தொடர்ந்து காற்று விசிற வேண்டும்.

*மூச்சுத் திணறலைக் குறைக்க காற்றோட்டம் சீராக இருக்கும்படி செய்ய வேண்டும்.

*இதுபோன்ற முதலுதவிகளுக்குப் பிறகு நோயாளி மயக்கத்தில் இருந்தால் அவரை பக்கவாட்டில் படுக்க வைக்க வேண்டும். உடனடியாக அவரை அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்று மருத்துவர் ஆலோசனைப்படி உரிய சிகிச்சை கொடுக்க வேண்டும்.

நோய்த் தடுப்பு நடவடிக்கைகள்

வெப்பம் தொடர்பான நோய்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இருந்தால் ஆரம்ப நிலையிலேயே இதுபோன்ற  பிரச்னைகளைத் தெரிந்துகொண்டு தடுக்கவும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்கவும் முடியும். வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் குறித்த பொதுக்கல்வி, நடத்தை மாற்றங்கள், கட்டுப்பாடான மதுப்பழக்கம், கண்டிப்பான ஓய்வு, நீராகாரங்கள், இணக்கமான தட்பவெப்பநிலை, சூடான பகுதிகளை சரியான முறையில் குளிர்விக்கும் வசதிகள் போன்றவற்றால் இந்த நோய்த் தாக்கத்தையும் மரண விகிதத்தையும் குறைக்க முடியும்.

கோடை காலங்களில் உடலை குளிர்ச்சியாக பேணி உடலின் நீர்ச்சத்து இழப்பைத் தவிர்த்தாலே இதுபோன்ற பெரும்பாலான நோய்களை தடுக்கலாம்.
‘அகமதாபாத் வெப்ப செயல் திட்டம் 2015’ ஆனது வெப்ப எச்சரிக்கைக்கான நிறங்களை வரையறை செய்துள்ளது. இத்திட்டத்தின்படி சிவப்பு நிறம் மிக அதிகமான வெப்பமுடைய நாளுக்கான எச்சரிக்கை அறிகுறியாகவும், ஆரஞ்சு நிறம் வெப்ப எச்சரிக்கை நாளுக்கான அறிகுறியாகவும், மஞ்சள் நிறம் வெப்பமான நாளுக்கான அறிகுறியாகவும், வெள்ளை நிறம் இயல்பான நாளுக்கான அறிகுறியாகவும் உள்ளது.

இந்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பானது வெப்ப அலைவீச்சு அதிகமாகும் காலங்களில் வெப்பம் தொடர்பான நோய்களைத் தடுக்கவும், வெப்ப அலைவீச்சைக் கட்டுப்படுத்தவும் தேவையான செயல்திட்டத்தை உருவாக்கும் வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வெப்ப அலை வீச்சால் ஏற்படும் நோய்கள் மற்றும் மரணங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும் என்கிறது இந்த வழிகாட்டுதல். இதுபோன்ற வெப்ப ஆரோக்கியம் தொடர்பான எச்சரிக்கை அளிக்கும் அமைப்புகளை நாட்டின் வெப்ப பிரச்னைகளுக்கு உள்ளாகிற அனைத்துப் பகுதிகளில் அமைத்து, உரிய நேரங்களில் எச்சரிக்கை செய்ய வேண்டியது அவசியம்.

வெப்பம் தொடர்பான நோய்கள் அனைத்தும் தடுக்கக் கூடியவையே. வெப்ப அலைகளால் உண்டாகும் நோய் மற்றும் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, புவி வெப்பமயமாதலைக் குறைப்பது மற்றும் நோயை எதிர்கொள்வது குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை. குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை அரசும் மக்களும் இணைந்து இதற்கான செயலில் உடனடியாக களமிறங்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

நகர்ப்புற வெப்பத்தைக் குறைக்க நிழல்தரும் தாவரங்கள் மற்றும் மரங்களை அதிகமாக வளர்க்க வேண்டும். வீட்டின் மேற்பரப்பு மற்றும் கூரைகளில் பசுமைக் கூரை, பசுமைத் தோட்டம், குளிர் கூரை அல்லது சூரிய ஒளி பிரதிபலிப்புக் கூரைஅமைப்பதன் மூலம் வீட்டின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தலாம். வெப்ப அலையின் பாதிப்புகளைக் குறைக்கவும், ஆபத்தான வெப்ப நோய்களைத் தடுக்கவும், சமுதாயம் மற்றும் தனிநபர் அளவில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவற்றை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.  

செய்ய வேண்டியவை

*வெப்ப அலையின் மாற்றங்கள் குறித்து அனைத்து வகை அறிவிப்புகளையும் கவனித்துவர வேண்டும்.

*தாகம் இல்லாவிட்டாலும் தொடர்ந்து நீர் அல்லது வீட்டில் தயார் செய்யப்படும் மோர், கஞ்சி, எலுமிச்சைச்சாறு, இனிப்புத்தயிர் போன்ற நீராகாரங்களை அருந்த வேண்டும்.

*பழங்கள் அல்லது பச்சடி போன்ற எளிய, குளிர்ந்த, எளிதில் செரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும்.

*தளர்வான, லேசான, வெளிர் நிற மற்றும் துளைகள் உள்ள பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

*பாதுகாப்புக் கண்ணாடிகள், குடை, தொப்பி, காலணி அல்லது செருப்பு அணிந்தே வெயிலில் செல்ல வேண்டும்.

*பயணம் செய்யும்போது கூடவே குடிநீர் எடுத்துச் செல்வது நல்லது.

*வெளியில் வேலை செய்யும் போது தொப்பி அல்லது குடை பயன்படுத்துவதோடு ஈரத் துணியை தலை, கழுத்து, முகம் போன்ற உறுப்புகளில் பயன்படுத்தலாம்.

*வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய, உதவி தேவைப்படும் குழந்தைகள், முதியோர், நோயாளிகள், பலவீனமானவர்கள், நண்பர்கள், குடும்பத்தார் என்று இதுபோன்ற உதவி தேவைப்படும் நபர்களை அடிக்கடி கவனித்துக் கொள்ள வேண்டும்.

*அதிக வெப்பத்தின் அறிகுறிகளையும் வெளிப்பாடுகளையும் தெரிந்து கொள்வது அவசியம். மயக்கம் அல்லது நோய் உணர்வு ஏற்பட்டால் மருத்துவரை உடனே அணுக வேண்டும்.

*வீட்டில் வளர்க்கும் மிருகங்களை நிழலில் வைத்து அதிக அளவில் குடிநீர் அளிக்க வேண்டும்.

*வீட்டைக் குளிர்ச்சியாக வைக்க வேண்டும். திரைகள், கதவுகள் மற்றும் வெயில் மறைப்புகள் பயன்படுத்த வேண்டும். இரவில் காற்றோட்டம் சீராக இருப்பதற்காக ஜன்னல்களைத் திறந்து வைத்துக் கொள்ளலாம். தகரம் அல்லது அலுமினியத் தகடு போன்ற பிரதிபலிப்பான்களை ஜன்னலில் பயன்படுத்தலாம்.

*சூடான காற்று நீர்ச்சத்து இழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் மின் விசிறிகளைச் சற்று தூரத்தில் வைத்து பயன்படுத்தலாம்.

*குளிர்ந்த நீரில் குளிப்பதோடு, குளிர்ந்த குடிநீரை அருந்தலாம்.

*நேரடியாக சூரிய ஒளி படும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

*கடுமையான உடலுழைப்பால் செய்கிற வேலைகளை நாளின் வெப்பம் குறைந்த நேரத்தில் செய்யும்படி திட்டமிடலாம். வெளியிடங்களில் வேலைகளுக்கு செல்கிறவர்கள் ஓய்வு நேரங்களை அதிகப்படுத்திக் கொள்வதோடு, வேலைக்கான கால அளவை அதிகமாக்கிக் கொள்ளலாம்.

*பெண் பணியாளர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

செய்யக்கூடாதவை

*குழந்தைகளையும் செல்லப் பிராணிகளையும் கொஞ்ச நேரம் கூட நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் விடக்கூடாது.

*மது, அதிகளவு தேநீர், காஃபி மற்றும் அதிகளவு சர்க்கரை சேர்த்த பானங்களை அருந்தக்கூடாது.

*செரிமானம் ஆவதற்கு கடினமாக உள்ள மற்றும் பழைய உணவுகளை உண்ணக்கூடாது.

*வெளி வெப்பம் அதிகமாக இருக்கும்போது கடினமான உடல் உழைப்பைத் தவிர்க்க வேண்டும்.

*பிற்பகல் 12 முதல் 3 மணி வரை வெளி வேலைகளைத் தவிர்ப்பதோடு,வெயிலில் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

*உச்ச வெப்பம் உள்ள நேரங்களில் சமைப்பதைத் தவிர்க்கவும். ஜன்னல் கதவுகளைத் திறந்து சமையலறையைக் காற்றோட்டம் உடையதாக வைத்துக் கொள்ளலாம்.  

தொகுப்பு: க.கதிரவன்