ஸ்பைடர் கேர்ளின் 3 மந்திரங்கள்!



தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினான ரகுல் ப்ரீத் சிங், இப்போது தமிழிலும் தனது இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார். ‘ஸ்பைடர்’ வெளிவந்துவிட்டால் தமிழ் மக்களின் புதிய கனவுக்கன்னியாக ரகுல் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுவார் என்று பலரும் ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வாட்ட சாட்டமான உயரம், அதற்கேற்ற உடல்வாகு என்பதாலேயே ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இந்த பஞ்சாப் பேரழகியைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த கட்டுடல் ரகுல் ப்ரீத் சிங்குக்கு எப்படி சாத்தியமாகிறது?

‘‘சினிமா, ஃபிட்னஸ் மற்றும் டயட்... இந்த மூன்றும்தான் என்னுடைய வாழ்வை இயக்கும் முக்கிய மந்திரங்கள். சினிமாவில் வெற்றிகரமாக இருப்பதற்காக மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சிகளையும், சரிவிகிதமான உணவுமுறையையும் தீவிரமாகப் பின்பற்றுகிறேன்.

படப்பிடிப்புகளுக்காக வெளி இடங்களுக்குச் செல்ல நேர்ந்தாலும், முடிந்தவரை வீட்டு உணவுகளையே எடுத்துக் கொள்கிறேன். நானே எனக்கான
உணவைத் தயார் செய்து சாப்பிடவும் முயற்சிக்கிறேன்.எண்ணெய் சேர்க்கப்பட்ட, எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், பிஸ்கட்டுகள், கேக்குகள், பீட்சா, ஐஸ்க்ரீம் போன்றவற்றை நான் தொடுவதே இல்லை. காய்கறிகள், பழங்கள் இவற்றுடன் போதுமான கார்போஹைட்ரேட்டையும் சேர்த்துக் கொள்வேன்.

கார்போஹைட்ரேட் உணவு கெடுதலானது என்று பலரும் தவறாக சொல்கிறார்கள். ஆனால், கார்போஹைட்ரேட்டை சேர்த்துக் கொள்ளாவிட்டால் உடலின் ஆற்றல் குறைந்துவிடும். கொழுப்பை எரிக்கத் தேவையான சக்தியை வழங்குவதும் கார்போஹைட்ரேட்தான்.

அதேபோல், வாரத்தில் 6 நாட்கள் கண்டிப்பாக உடற்பயிற்சிகள் செய்துவிடுவேன். உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் அந்த நாளை முழுமையற்றதாக உணர்வேன்’’ என்று சொல்லும் ரகுல் ப்ரீத்சிங், அடிப்படையில் ஒரு ஜிம் மாஸ்டரும் கூட. ஆமாம்... பலருக்கும் ஃபிட்னஸ் ஆலோசனைகள் சொல்லிச் சொல்லி, ஒரு சொந்த ஜிம்மையே இப்போது ஆரம்பித்துவிட்டார்.

- இந்துமதி