ஓவரா யோசிக்காதீங்க!அளவு தாண்டினால் ஆபத்து

சிந்திக்கும் திறன்தான் ஒருவரை வித்தியாசப்படுத்தி காண்பிக்கிறது; வாழ்வில் மேன்மையடைய வைக்கிறது. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே... ஒரு விஷயத்தை பற்றி அளவு கடந்து யோசிப்பது, சின்னச்சின்ன விஷயங்களைக்கூட மனதில் போட்டு குழப்பிக் கொள்வது, எப்பொழுதோ நடந்த சம்பவத்துக்காக வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பது போன்ற பிரச்னைகளை Over thinking என்கிறார்கள் உளவியல் மருத்துவர்கள். பலரையும் பாதித்துக் கொண்டிருக்கும் இந்த ஓவர் திங்கிங் பிரச்னை பற்றி விளக்குகிறார் உளவியல் மருத்துவர் ராஜேஷ் கண்ணன்.

ஒருவர் தேவையற்ற விஷயங்களைக்கூட திரும்பத் திரும்ப யோசிப்பதன் காரணம் என்ன?

‘‘தேவையற்று யோசிப்பது குறிப்பிட்ட அந்த நபரின் குணமாகவே இருக்கலாம் அல்லது அவர்கள் வளர்ந்த விதமாகவும் இருக்கலாம். ஒரு விஷயத்தை ஒருவர் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார், அதை எப்படி அணுகுகிறார் என்பதைப் பொறுத்தது இது. 15 முதல் 20 வயது வரை ஒருவரின் குணம் வெளியில் தெரியாமல் இருக்கும். 20 வயதுக்குப் பிறகு சமூக வாழ்க்கைக்கு வரும்போது அவரின் குணம் வெளியில் தெரியும். ஒரு குறிப்பிட்ட வயது வரை சாதாரணமாக இருந்த ஒரு நபர் திடீரென்று அவர்களின் குணம் மாறி சமீபகாலமாக அதிகமாகவும் யோசிக்க ஆரம்பிக்கலாம். அதாவது, ஒரு சில விஷயங்களை மட்டும் திரும்பத் திரும்ப யோசித்து அதற்காக வருத்தப்படுவது இந்த வகைதான்.

உதாரணமாக, ஒரு திருமணத்துக்கோ அல்லது உறவினர் வீட்டுக்கோ சென்றால் அங்கு நிறைய மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் நடந்திருந்தாலும் யாரோ ஒருவர் ‘நீங்க குண்டாகிட்டீங்க’ என்று சொன்னதை மட்டுமே நினைத்து கவலையில் ஆழ்ந்துவிடுவார்கள். அந்த ஒரு விஷயத்தை மட்டுமே யோசிப்பார்கள். இதை மனப்பதற்ற நோய் என்கிறோம். எந்த ஒரு விஷயத்தையும் சாதாரணமாகவும் ஜாலியாகவும் எடுத்துக்கொள்பவர்களுக்கு இந்தப் பிரச்னை இருக்காது.’’

ஓவர் திங்கிங் பிரச்னை யாரை அதிகம் பாதிக்கிறது?

‘‘ஆண்களைவிட பெண்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் தாம் செய்யும் செயல்கள் சரியா தவறா என்று எல்லாவற்றையும் மனதுக்குள் ரீவைண்ட் செய்து பார்ப்பார்கள். ஒரு காரியத்தைச் செய்வதால் நம்மை யாரேனும் தவறாக நினைப்பார்களா, எவ்வாறு மதிப்பீடு செய்வார்கள் என்று அதிகமாக யோசிப்பார்கள்.

வீட்டுக்கு விருந்தினர் வருவதாக இருந்தால்கூட அவரை எப்படி வரவேற்பது, அவருக்கு என்னவெல்லாம் செய்வது என்று மனதுக்குள்ளே அட்டவணை போடுவார்கள். முடிவு செய்த அட்டவணையை திரும்பத்திரும்ப 10, 20 முறைக்கு மேல் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குப் பிடித்த மாதிரி இருக்க வேண்டும். அவர்கள் ஏதும் குறை கூறிவிடக்கூடாது என்று மனதுக்குள் யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.

விருந்தினர்கள் வந்து சென்ற பின்பு அவர்கள் ஏதேனும் கருத்து கூறியிருந்தால் அதைப்பற்றி அதிகம் யோசிப்பார்கள். அவர்கள் கூறிய குறையையோ அல்லது விவாதத்துக்குரிய விஷயங்களையோ அதிகம் யோசிக்கத் தொடங்குவார்கள். வீட்டிலிருக்கும் பெண்கள் வீட்டு வேலைகள் அனைத்தும் முடிந்த பின்னர் தனிமையில் இருக்கும் நேரத்தில் இதுபோல் நடந்த விஷயங்களை நினைவுப்படுத்தி பார்க்க ஆரம்பிக்கின்றனர்.

இது ஏன் இப்படி நடந்தது, எனக்கு ஏன் அவ்வாறு கருத்து கூறினர், என்ன காரணமாக இருக்கும் என்று  ஒரு விஷயத்தையே மீண்டும் மீண்டும் அசைபோடத் தொடங்குகின்றனர். எப்போதோ நடந்த சிறிய பிரச்னையை ஞாபகப்படுத்தி அந்த நிகழ்ச்சியை மனதில் மொத்தமாக ஓட்டிப்பார்த்து வருத்தப்படுவார்கள். திரும்பத்திரும்ப அதை மனதில் அசைபோட்டுக் கொண்டே இருப்பார்கள். உளவியலில் இதற்கு Rumination என்று பெயர்.’’

தான் தேவையில்லாமல் யோசிக்கிறோம் என்பது ஒருவருக்குத் தெரியுமா?

‘‘ஓவர் திங்கிங் என்பதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒரு சாராருக்கு இவ்வாறு யோசிப்பது பற்றி உடன் இருப்பவர்கள் கூறும்போதுதான் புரிய ஆரம்பிக்கும். மற்றொரு சாராருக்கு இவ்வாறு யோசிக்கிறோம், இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று தெரிந்தும் அதிலிருந்து அவர்களால் வெளியே வர முடியாது.’’தேவையற்ற யோசனைகளிலிருந்து அவர்களால் வெளியே வர முடியுமா?

‘‘எண்ணங்கள், பிரச்னைகள் மற்றும் அந்த நபரைப் பொறுத்தே இது சாத்தியம். சாதாரணமாக, தேர்வில் தோல்வியடைவது, ஆசிரியர் கண்டிப்பது போன்ற வருத்தங்களில் இருக்கும்போது ஆறுதல் மூலமாகவோ, பக்குவப்பட்ட நபர்களிடம் பேசும்போதோ அதிலிருந்து வெளியே வந்துவிடலாம். இது
சாதாரணப் பிரச்னையே.

ஆனால், ஒரு விஷயத்தில் திரும்பத் திரும்ப யோசனைக்கு ஆட்பட்டாலோ, அன்றாட வேலைகள் தள்ளிப்போகிறது, மன நிம்மதி கெடுகிறது என்று உணர்ந்தாலோ அவர்களுக்கு கண்டிப்பாக உதவி தேவை. ஆரம்ப நிலையில் இருந்தால் நெருங்கிய நண்பர்களிடமோ உறவினர்களிடமோ பேசுவதன் மூலம் இவற்றிலிருந்து வெளிவரலாம்.’’

பொதுவாக பெண்கள் மனநலப் பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற நம்பிக்கை உண்மையா?

‘‘உண்மைதான். இயற்கையாகவே ஆண்களுடன் ஒப்பிடும்போது மனப்பதற்ற பிரச்னை பெண்களுக்கு அதிகமாகவே காணப்படுகிறது. ஆண்கள் வீட்டில் மட்டுமல்லாமல் அலுவலகங்களிலும் நண்பர்கள், தெரிந்தவர்கள் என அதிகப்படியான மனிதர்களை சந்திக்க நேர்வதால் அனைத்தையும் மறந்து, எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள பழகிவிடுகின்றனர்.

பெண்கள் அலுவலகத்துக்குச் சென்றாலும் அதிக நேரம் நண்பர்களுடன் செலவளிக்க முடியாமல் வீட்டுப் பொறுப்பையும் கவனிக்க வேண்டி இருப்பதால் ஒருவித பதற்றத்திலேயே இருக்கின்றனர். இந்த மனப்பதற்றம் பொதுவாக திருமணமானதில் இருந்து மெனோபாஸ் காலத்திலேயே அதிகமாக ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பதற்றமானது இளம் பெண்களையும் விட்டு வைப்பதில்லை. நண்பர்களின் பேச்சு மற்றும் அலுவலகப் பிரச்னை காரணமாக அவர்களுக்கும் இது ஏற்படுகிறது.’’

இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி?

‘‘ஒருவர் வேலைக்காக நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது வேலை கிடைக்குமோ, கிடைக்காதோ என்ன நடக்குமோ என்பது பற்றி யோசிப்பதில் எந்தவித பிரச்னையும் இல்லை. ஓரிரு நாளில் அது முடிந்ததும் அந்த நினைவு இருக்காது. ஆனால், மனப்பதற்றத்தில் இருப்பவர்கள் யாருக்கோ நடந்த சம்பவங்கள், பத்திரிகை செய்திகள், சமூக வலைதளத்தில் பார்த்த பிரச்னைகள் தனக்கும் நிகழ்ந்துவிடுமோ என்று அஞ்சுவார்கள், அந்தப் பிரச்னையில் தன்னை சம்பந்தப்படுத்திப் பார்த்து பயப்படுவார்கள்.

இதுபோல் தனக்கு நேர்ந்தால் நம்மால் சமாளிக்க முடியாமல் போய்விடுமோ என்று ஒப்பிட்டுப் பார்த்து பயப்படுவது ஒருவித பதற்றமே. உதாரணத்துக்குக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போதோ, விளையாட செல்லும்போதோ ஏதாவது அசம்பாவிதம் நேரும் என்று வெளியில் செல்வதையோ, குழந்தையை விளையாட வெளியே செல்ல அனுமதிப்பதையோகூட சிலர் தவிர்ப்பார்கள்.

பொதுவாக தன்னம்பிக்கை இழக்கும் மனிதர்களுக்கே இது போன்ற பயங்கள், பதற்றங்கள் ஏற்படுகிறது. தன்னைப் பற்றியும், சமுதாயத்தில் மற்றவர்களை அணுகும் முறையிலும் பதற்றங்கள் இருக்கும். எனவே, அவர்கள் எதைப் பார்த்தாலும் எதிர்மறை எண்ணங்களுடனே பார்க்கத் தொடங்குவர். எந்த ஒரு விஷயத்திலும் இருக்கும் நன்மைகளைப் பார்க்காமல் அதிலுள்ள பிரச்னைகளையே பார்ப்பார்கள். வாழ்க்கையையே பாதிக்கும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு கண்டிப்பாக உளவியல் மருத்துவரின் ஆலோசனை தேவை.’’

இந்த மனப் பதற்றத்துக்கான எளிதான தீர்வு?

‘‘மனப்பதற்றத்தின் ஆரம்ப நிலையிலேயே அதை உணர்ந்து அதற்கேற்றவாறு சில பயிற்சிகள் செய்வது நல்லது. உதாரணம் யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, இனிமையான பாடல்கள் கேட்பது, பிடித்த செயல்களை செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். பதற்றம் ஏற்படுத்தும் சூழ்நிலைகளை தவிர்ப்பது நல்லது.

ஒரு சூழ்நிலையில் எதிர்மறை எண்ணம் ஏற்படும்போது அந்த சூழ்நிலையின் நேர்மறை எண்ணங்களையும் நினைக்க முற்படுவது போன்றவற்றின் மூலமும் அந்த எண்ணங்களிலிருந்து வெளிவரலாம். பிடித்த விஷயங்களை செய்வது, தனிமையில் இல்லாமல் நண்பர்களுடன் அதிக நேரங்களை செலவிடுவது போன்றவற்றாலும் இந்தப் பிரச்னையை தவிர்க்கலாம். மேலும் பிரச்னை அதிகமாகி தினசரி வாழ்க்கையிலேயே விளைவுகளை ஏற்படுத்தும்போது மருத்துவ ஆலோசனையுடன் சரி செய்யலாம்!’’

- மித்ரா