அதிகரிக்கும் ஆரோக்கிய அச்சுறுத்தல் வாழத் தகுதியற்ற இடமாகிறது தமிழகம்?!சுற்றுச்சூழல் அபாய அலாரம்

இயற்கையோடு பயணிக்கலாம், இயற்கையை பயன்படுத்திக் கொள்ளலாம்... ஆனால், அகம்பாவத்தாலோ, அறியாமையாலோ இயற்கையையே மனிதன் எதிர்க்க நினைத்ததற்கான விபரீதமான விளைவுகளைத்தான் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தோனேஷியாவில் சுனாமி, ஃப்ளோரிடாவில் புயல், மெக்ஸிகோவில் நிலநடுக்கம் என ஒட்டுமொத்த உலகமும் அழிவுப்பாதையில் வேகமாக சென்றுகொண்டு இருக்கிறது.குறிப்பாக, 2010-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி ஆசியாவின் 16 நாடுகள் காலநிலை மாற்றத்தால் பெரும் இடர்களைச் சந்திக்கின்றன என பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றில் அதிகம் சிக்கல்களை எதிர்கொள்ளும் 6 நாடுகளில் ஒன்றாக இந்தியா குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது கடந்த சில ஆண்டுகளாகக் கண்கூடாகத் தெரிகிறது. அதிலும் விழிப்புணர்வு என்பதே இல்லாத மாநிலமான தமிழகத்தின் நிலை இன்னும் கவலைக்கிடமானது.

கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டு விளைநிலங்களின் உயிர்மச்சத்து பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. அதில் இருந்து கிடைக்கப்பெறும் தானியங்
களையும், காய்கறிகளையும் உண்டுவந்தால் நமக்கு என்ன ஆரோக்கியம் கிடைக்கும்?!மனிதனின் இன்னோர் அத்தியாவசியத் தேவையான தண்ணீர் என்பதும் தமிழகத்தில் இல்லை.

30 ஆண்டுகளுக்கு முன்பு 43 ஆயிரம் ஏரிகளும், குளங்களும் இருந்த தமிழ்நாட்டில், இப்போது 13 ஆயிரம் நீர்நிலைகள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. மிச்சமிருக்கிற நீராதாரங்களும் பராமரிப்பில் இல்லை. வற்றாத ஜீவநதி என்பதெல்லாம் மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் ஓடுகிற ஓடைகளாக மாறிவிட்டன. கொஞ்சம் நஞ்சம் இருக்கிற நிலத்தடி நீரும் மாசுபட்டுக் கிடக்கிறது. அந்த தண்ணீரை அருந்துகிற நாம் எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும்?!

உயிர்க்காற்றான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரங்களும் இல்லை. கடந்த 2013-ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், சென்னைவாசிகளின் நுரையீரல் பலவீனமாக இருப்பதாகக் கூறியிருந்தது. ‘இளம் வயதில் முடி நரைத்தல், இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு, இளம் வயதிலேயே வயதானது போல தோற்றத்தை ஏற்படுத்துவது போன்ற பல பிரச்னைகள் ஏற்படுவதற்கு சுற்றுச்சூழல் மாசு முக்கிய காரணம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதேபோல் வெப்பம் என்பதும் எய்ட்ஸ், காசநோய் போன்ற உயிர்க்கொல்லியாக மாறிவருகிறது. ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு நூற்றுக்
கணக்கானவர்கள் பலி என்று செய்தியைப் படித்துக் கொண்டிருந்த நாம், இப்போது தமிழகத்திலும் வெயில் கொடுமையால் ஒவ்வோர் ஆண்டும் பெரும் உயிரிழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தென்மேற்கு பருவமழை பொழியும் இந்த நேரத்திலும் 100 டிகிரியைத் தாண்டி அனல் காற்று வீசிக் கொண்டிருக்கிறது.

‘பூமி பாதிக்கு மேல் அழிந்துவிட்டது; மிக விரைவில் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக பூமி மாறிவிடும்’ என்று சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தார். அதேபோல் தமிழகமும் கூடிய விரைவில் வாழத்தகுதியற்ற ஒரு நிலமாக மாறிவிடும் என்பதற்கான எச்சரிக்கைதான் இந்த கட்டுரை. 

தனி ஒரு மனிதனால் உலகத்தை மாற்ற முடியாதுதான். ஆனால், சீனப்பெருஞ்சுவர் கட்டுவதற்கான ஒரு செங்கல்லை தனி ஒரு மனிதனால் எடுத்து வைக்க முடியும். அந்த நம்பிக்கையில் சமூக மாற்றத்துக்கான விழிப்புணர்வை இந்த கவர் ஸ்டோரியின் மூலம் ‘குங்குமம் டாக்டர்’ ஏற்படுத்த முயற்சித்திருக்கிறது. நீங்களும் உங்கள் பங்குக்கு சிறு வெளிச்சத்தை ஏற்றுங்கள்... மாற்றம் நிகழட்டும்!

நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர் ஜெயராமன் இதுபற்றி தன் கருத்தை இங்கே முன் வைக்கிறார்.‘‘தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நைட்ரஜன் மற்றும் கந்தக ஆக்ஸைடுகள், உலோகத்துகள்கள், கரிமச் சேர்மங்கள் போன்றவற்றாலும், பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்தும் வாகனங்களிலிருந்தும் வெளிவரும் ஹைட்ரோ கார்பன்கள், கார்பன் மோனாக்ஸைடு போன்றவற்றாலும் காற்று மாசுபடுகிறது.

வீட்டிலிருந்து வெளிவரும் குளிர்சாதனப் பெட்டி, தீயணைப்பான் போன்றவற்றிலிருந்து வெளிவரும் ரசாயனம் கலந்த வாயுக்கள் ஓசோன் படலத்தைச் சிதைக்கிறது. வீட்டை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள், பூச்சிக்கொல்லி ஸ்பிரேயர்கள், விறகு அடுப்பால் ஏற்படும் புகை, பட்டாசுப்புகை போன்றவற்றாலும் காற்று மாசுபடுகிறது. புகைப்பழக்கமும் கணிசமான அளவில் காற்றை மாசுபடுத்துகிறது.

இதனால், காற்று மண்டலத்தில் கலந்துள்ள வைரஸ், கார்பன் துகள்கள், தூசிகள் போன்றவற்றை சுவாசிக்கும்போது மூச்சுப்பாதையில் ஒவ்வாமை ஏற்பட்டு தும்மல், சளி, இருமல், மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு ப்ராங்கைட்டிஸ், ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய்களையும், சிலருக்கு சரும நோய்களையும் ஏற்படுத்தும். ஏற்கெனவே ஆஸ்துமா இருப்பவர்களுக்கு நோய் தீவிரமடைந்து நுரையீரல் புற்றுநோய் வரை கொண்டுபோய் விடும்.

இந்நிலையை மாற்ற மாசுபாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை நமது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். பொதுமக்கள், முதலாளிகள் மற்றும் அரசாங்கம் என அனைவரின் கூட்டு முயற்சியால் மட்டுமே மாசுபாட்டினை எதிர்த்து வெற்றியடைய முடியும். தொழிற்சாலைகளைப் பொருத்தவரை, வெளியிடும் புகையை வடிகட்டும் வசதிகள் மற்றும் சுத்திகரிப்பு வசதிகளைக்  கொண்டிருக்க வேண்டும்.

அரசாங்கம் கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளின் மேல் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மைக் கேட்டினை ஏற்படுத்தும் நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்கள் வெளியிடும் புகையை அளவிடும் கருவிகள் தற்போது கொண்டு வந்திருக்கிறார்கள். எனினும், இந்த முயற்சியை அரசாங்கம் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

வீடுகளில் சமையலின்போது புகையினை குறைக்க காற்றோட்டமான இடத்தில் மேம்படுத்தப்பட்ட அடுப்புகளையும், சாண எரிவாயுக்கலன்களையும் பயன்படுத்தலாம். புகையில்லா அடுப்புகளில் எரிதிறனும் அதிகமாக இருக்கும். வீட்டுக்குள் காற்றை சுத்தமாக வைத்திருக்க சமையலறைகளில் சிம்னிகள், எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் போன்றவற்றை பயன்படுத்தலாம். குப்பைகளை எரிப்பதை தவிர்க்கவும். டயர், பிளாஸ்டிக் பொருட்களை தெருவோரம் குவித்து எரிப்பதையும் தவிர்க்கலாம்.

வாகனத்தை நல்ல முறையில் பராமரித்தல் வளிமண்டல சீர்கேட்டைத் தவிர்க்கும். கூடுமானவரையில் பொது வாகனங்களில் பயணித்தால் எரிபொருள் தட்டுப்பாட்டையும், தூய்மைக் கேட்டினையும், சாலை நெரிசலையும் பெருமளவு குறைக்கலாம். தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட கார்களைப் பயன்படுத்துவது ஸ்டேட்டஸாக நினைக்கிறார்கள்.

தனித்தனி கார்களை தவிர்த்து, முடிந்தவரை ஒரே வாகனத்தில் குழுவாகச் செல்வது, நடந்து செல்வது, 2 நபருக்காக காரை உபயோகிக்காமல், இருசக்கர வாகனங்கனை உபயோகிப்பது போன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். கழிவுகளை குறைப்பதற்கான வழிமுறைகளைப்பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தால், மாசுக்களை உருவாக்குவதை நம்மால் தவிர்க்க முடியும். உணவு எடுத்துச்செல்ல, காய்கறி வாங்க என எல்லாவற்றிற்கும் பிளாஸ்டிக் கேரிபேக்குகளை கடையிலேயே வாங்காமல், பலமுறை உபயோகப்படுத்தக்கூடிய துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். முடிந்தவரை சுற்றுச்சூழலை பாதிக்காத, நச்சுத்தன்மை இல்லாத பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் பல்புகள், மருத்துவக் கருவிகள், தெர்மா மீட்டர்கள், ஆய்வக வேதிப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களில் பாதரசம் அதிக அளவில் உள்ளது. இந்தப் பொருட்கள் முறையற்ற வகையில் அப்புறப்படுத்தப்பட்டால் அவற்றில் உள்ள பாதரசம் காற்றில் கலக்கக்கூடும். பாதரசம் நமது சுற்றுச்சூழலில் நீண்ட காலத்துக்கு தங்கியிருக்கும் தன்மை கொண்டது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இது நச்சு பாதிப்பை ஏற்படுத்தும்.

மரங்கள்தான் மனிதர்களின் நுரையீரல். நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டுமென்றால், மரங்களை காப்பது அவசியம். மரங்கள் வெளியிடும் காற்றை, நாம் சுவாசிக்கிறோம்; நாம் வெளியிடும் காற்றை, மரங்கள் சுவாசிக்கின்றன. அந்த வகையில், மரங்கள் தான் நம் நுரையீரலாக செயல்படுகின்றன. அவற்றைப் பாதுகாப்பது நம் கடமை.

மரங்களை வெட்டுவதால் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரித்து, காற்று மாசு ஏற்படுத்துகிறது, இதில் இரைச்சலும் அடங்கும்.
இந்த நிலை மாற வேண்டும். மரங்களை வளர்ப்பது நம் அடிப்படை கடமைகளில் ஒன்று என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். ஏதோ அழகுக்காக மரம் வளர்த்தோம் என்றில்லாமல், நடும் மரங்கள் பயனுள்ளவையா என்று பார்த்து நடுவதும் அவசியம். மரம் நடும் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து கொள்ளலாம்.

இதுபோல், ஒவ்வொருவரும் தத்தம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் ஆரோக்கியமான தமிழகத்தை மீட்டெடுக்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!’’

- உஷா நாராயணன்