Blood Group Diet



மேட்டர் புதுசு

உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதற்காக பிரபலங்கள் மட்டுமில்லை... அனைவருமே மெனக்கெடுவதில் ஆச்சர்யமில்லைதான். இதற்காக புதுப்புது உணவுமுறைகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள் ஆய்வாளர்கள். அவற்றில் லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் ஒன்றுதான் Blood Group Diet. ஹாலிவுட் டெமிமூர், பாலிவுட் அக்‌ஷய்குமார் முதல் நம்மூர் டாப்ஸி வரை இந்த லேட்டஸ்ட் டயட்டைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.
அது என்ன ப்ளட் க்ரூப் டயட்?

ஒருவருடைய ரத்த வகைக்கேற்ற உணவு முறையைப் பின்பற்றுவதையே ப்ளட் க்ரூப் டயட் என்கிறார்கள். அமெரிக்க இயற்கை மருத்துவரான பீட்டர் ஜே.டி ஆடமோ என்பவர் கண்டுபிடித்த இந்த உணவுமுறையில் அவரவர் ரத்தவகைக்கேற்ற உணவு எடுத்துக் கொள்வதையே முக்கிய அறிவுரையாக வலியுறுத்துகிறார். Eat right for your type என்ற விரிவான புத்தகமும் ஆடமோ எழுதியிருக்கிறார்.

‘உணவை செரிப்பதற்காக உடலில் உற்பத்தியாகும் ரசாயன எதிர்விளைவு உடனே வேலை செய்யத் தொடங்குகிறது. உடல் உறுப்புகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உணவு மற்றும் ரத்தத்தில் சர்க்கரையை உற்பத்தி செய்யும் புரதங்களான லெக்டின்கள் இடையிலான எதிர்விளைவு திறமையாக செயல்படுகிறது. எளிதில் செரிமானம் நடைபெறுவதால், வேகமாக எடை குறைந்து, உடல் ஆற்றல் அதிகரிக்கிறது. இதனால் நோயற்ற ஆரோக்கியமான உடலை பெற முடியும்’ என்று குறிப்பிடுகிறார்.

நான்கு ரத்த வகையினருக்கும் அவர் பரிந்துரைக்கும் உணவுமுறைகள் இவை. ‘O’ ப்ளட் குரூப்பினருக்கான உணவுகள்மற்ற ப்ளட் குரூப்பினரைவிட செரிமான அமில சுரப்பு அதிகம் கொண்டவர்களாக இருப்பதால், ‘O’ ப்ளட் குரூப்பினருக்கு முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகள் மிகவும் ஏற்றது. காரணம், அசைவ உணவுகள் இவர்களுக்கு எளிதில் செரிமானம் ஆகிவிடும். அதேநேரம் இந்த உணவுகள் செரிமானம் அடையும் வகையில் போதுமான தண்ணீரும் பருக வேண்டும். இத்துடன் கீரை, காய்கறிகள், ஸ்ட்ராபெர்ரி, உலர்திராட்சை, ஆப்பிள், மாம்பழம், வாழைப்
பழம் போன்ற பழங்களையும் இவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவைஊட்டச்சத்து பானங்கள், மாத்திரைகள் போன்றவற்றைத் தவிர்த்தல் நலம். சிட்ரஸ் வகை பழங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. பால் பொருட்கள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால் சோயாபால், ஆட்டுப்பால், சீஸ் போன்றவற்றை உண்ணலாம்.
‘A’ ப்ளட் குரூப்பினருக்கான உணவுகள்சென்சிட்டிவ் ரத்தவகையைச் சார்ந்தவர்கள் என்பதால் இயற்கையான உணவுகளை உண்பதே முக்கியமானது. இவர்களுக்கு செரிமானத்துக்கான அமிலம் குறைவாக இருப்பதால் மாமிச உணவைத் தவிர்ப்பது நலம்.

உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கக்கூடிய பழச்சாறுகள், பழங்கள், காய்கறிகளை போதுமான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ், நட்ஸ், சோயா போன்ற புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகள் நிறைந்த காய்கறிகள் பழங்களை அதிகம் சேர்க்க வேண்டும். சிட்ரஸ் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டியவைசெரிமான சக்தி மிகவும் குறைந்து காணப்படும் ‘A’ குரூப்பினர் பால் பொருட்களை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். Latin நிறைந்த உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள், தக்காளி, முட்டைக்கோஸ் போன்றவற்றை உண்ண வேண்டாம். மாம்பழம், பப்பாளி, ஆரஞ்சு போன்றவை எளிதில் செரிக்காதவை என்பதால் இவற்றையும் தவிர்க்க வேண்டும்.

‘B’ ப்ளட் குரூப்பினர் உண்ணக்கூடியவைஎந்த வகையான உணவுகளும் இவர்களுக்கு எளிதில் செரிக்கக்கூடியவை என்பதால், எல்லாவகையான உணவுகளையும் இவர்கள் சேர்த்துக் கொள்ள முடியும். காய்கறிகள், பழங்கள், மாமிசம், மீன், பால்பொருட்கள் என எதுவும் இவர்கள் விலக்க வேண்டியதில்லை. ‘AB’ ப்ளட் குரூப்பினரின் உணவுகள் பீட்டர் ஜே.டி.ஆடமோவின் வலுவான கருத்துப்படி, இவர்கள் ‘A’ மற்றும் ‘B’ இரண்டு ரத்தப்பிரிவினரின் குணங்களை கொண்டிருப்பதால், இரண்டு குழுக்களுக்கும் ஏற்ற கலவையான உணவுகளை உட்கொள்வதன் மூலம் தங்களது ரத்தத்தின் பி.எச் நிலையை சரிசமமாகப் பராமரிக்க முடியும்.

முட்டை, மாமிசம், மீன், பால் உணவுகளை உட்கொள்ளலாம். பீன்ஸ், சோயா, நிலக்கடலை போன்ற பருப்பு வகைகள் மற்றும்
பயறுவகைகளையும் சாப்பிடலாம். கத்தரிக்காய், பீட்ரூட், ப்ரோக்கோலி போன்ற நடுநிலையான காய்கறிகளை உண்ணலாம். பழச்சாறுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டியவை...

சிவப்பு மாமிசம் மற்றும் சிக்கன் இரண்டும் அறவே உண்ணக்கூடாதவை.நெகட்டிவ் ரத்த வகையினருக்கு...எல்லாவகை ப்ளட் குரூப்பிலும் நெகட்டிவ் வகையைச் சார்ந்தவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்தவர்களாக இருப்பார்கள். ஊட்டச்சத்தை உறிஞ்சும் திறன் குறைவாக இருப்பதால் செரிமானத்திறனும் குறைவாகவே இருக்கும். ஒரு நோயிலிருந்து மீண்டு வருவது இவர்களைப் பொறுத்தவரை மிக தாமதமாகவே நடக்கும். எனவே, இவர்கள் உணவு விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் பழச்சாறுகள், கொட்டை வகைகளை நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். 

சரி... ப்ளட் க்ரூப் டயட்டைப் பற்றி சர்ச்சைகள் எதுவும் இருக்கிறதா என்று கேட்டால், சர்ச்சைகள் நிச்சயம் உண்டு.ரத்த வகை என்பதைத் தாண்டி மரபியல் காரணிகள் மற்றும் வாழ்க்கைமுறை போன்றவையும் ஒருவரின் உணவுத் தேவையை தீர்மானிக்கிறது. உதாரணத்துக்கு, ‘O’ ரத்த வகையைச் சேர்ந்தவர்கள் புரதச்சத்துக்காக மாமிசம் மற்றும் மீன் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறது இந்த டயட். ஆனால், ஒருவர் சைவ உணவை பின்பற்றுபவராக இருந்தால், புரதத்துக்காக அசைவ உணவை அவர் தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமம்.

பால், பீன்ஸ் போன்றவற்றில் புரதம் மிகுந்து காணப்பட்டாலும் நிறைய பேருக்கு பால்பொருட்களில் காணப்படும் லேக்டோஸ் ஒவ்வாமை இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால், ப்ளட் க்ரூப் டயட் என்பது முழுவதுமாக ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்பது ஒருசாராரின் கருத்து.

- இந்துமதி