மனிதர்களில் இரண்டு வகை...



Personality

‘‘மனிதனுடைய குணநலன்கள் அடிப்படையில் ஒருவரை Introvert, Extrovert என்ற இரண்டு வகைக்குள் அடக்கலாம். இந்த இரண்டுமே எதிரெதிரான பழக்க வழக்கங்களைக் கொண்டது’’ என்கிற மனநல ஆலோசகர் கார்த்திக் அதுபற்றி விளக்கமாகக் கூறுகிறார்.Introvert, Extrovert மனநிலைகள் பற்றிச் சொல்லுங்கள்...‘‘Introvert குணநலன் உடையவர்கள் மற்றவர்களோடு அதிகமாக பேச மாட்டார்கள். அவர்கள் தேவை ஏற்பட்டால் மட்டுமே பிறரிடம் பேசுபவர்களாகவும், தன் உள்ளத்தில் இருக்கும் அனைத்தையும் யாருக்கும் தெரியாமல் மறைப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

இதற்கு நேர் எதிராக உள்ளதே Extrovert என்கிற குணநலன். இந்த குணநலன் உடையவர்கள் மனதில் எதையுமே வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக அனைத்தையும் பேசிவிடும் பண்புடையவர்கள். அதாவது இவர்கள் வாழ்க்கையே திறந்த புத்தகம்போல, தனது உள்ளத்திலிருக்கும் அனைத்தையும் வெளிப்படையாக மற்றவர்களோடு பகிர்ந்து கொள்பவர்களாக இருப்பார்கள்.’’

எதன் அடிப்படையில் இந்த குணநலன்கள் ஒருவரிடம் ஏற்படுகிறது?

‘‘ஒருவரது குழந்தைப் பருவத்திலேயே இந்த குணநலன்கள் உருவாகிவிடுகிறது. அதாவது, குழந்தைப் பருவத்தில் தன்னை சுற்றியிருக்கும் சூழலை உற்றுநோக்கி அதிலிருந்து ஒவ்வொரு பழக்கத்தையும் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போதே, இதுபோன்ற குணநலன்களும் ஒருவரிடம் உருவாகிவிடுகிறது. மரபியல் வழியாகவும் இந்த குணநலன்கள் அடுத்துவரும் சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது.’’

ஒருவரை இன்ட்ரோவெர்ட், எக்ஸ்ட்ரோவெர்ட் என்று அடையாளம் காண்பது?

‘‘பொதுவாக அறிவியல் அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் மற்றும் சினிமா போன்ற பிற துறைகளில் சிந்தித்து பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றோர் Introvert குணநலன் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், மார்க்கெட்டிங், விளம்பரம், ஊடகத்துறை மற்றும் ஒரு குழுவை வழிநடத்துபவர்கள் போன்றோர் Extrovert குணநலன் உடையவர்களாக இருக்கிறார்கள்.’’

Introvert குணங்களோடு இருப்பதால் பிரச்னை ஏதும் ஏற்படுமா?

‘‘Introvert குணநலன் உடையவர்கள் தனது உடல், மனநலம் சார்ந்த எந்தவொரு பிரச்னையையும் வெளியே சொல்லாத நிலை வரும்போதுதான் பிரச்னைகள் அதிகரிக்கிறது. உதாரணமாக, பெற்றோர் சிலர் தங்களின் உடல், மனநலம் மற்றும் பொருளாதார பிரச்னைகளை தனது குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என்று யாருக்கும் தெரியாமல் தங்கள் மனதிலேயே ரகசியமாக வைத்துக் கொள்கிறார்கள்.

இதனால் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பெரிய அளவிலான உடல்நலப் பிரச்னைகளுக்கு அவர்கள் ஆளாக நேரிடுகிறது. சில சமயங்களில் இதனால் ஏற்படுகிற அதிக மனஅழுத்தமானது தற்கொலை எண்ணத்துக்கும் வழிவகுக்கிறது.’’

Extrovert குணநலன் என்ன பிரச்னையை ஏற்படுத்தும்?

‘‘Extrovert குணநலன் உடையவர்கள் தனது பிரச்னைகளில் எதை யாரிடம் சொல்ல வேண்டுமென்று சரியாக புரிந்துகொள்ளாமல் எல்லோருடனும் அதைப்பற்றி பகிர்ந்துகொள்கிறார்கள். அப்படி சில தவறான நபர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது பிரச்னைகள் ஏற்படுகிறது. உதாரணமாக, இளைஞர்களில் சிலர் வேலைக்கு முயற்சி செய்கிறபோது, அந்த வேலை வாய்ப்பு சரியாக உறுதியாகாத நிலையில் அனைவரிடமும் அது குறித்து பகிர்ந்து கொள்கிறார்கள். இறுதியில் அந்த வேலை கிடைக்காத ஒரு சூழல் ஏற்பட்டு ஏமாற்றமடையும்போதோ அல்லது அதை அவமானமாகக் கருதும்போதோ அவர்களுக்கு மனநல பிரச்னைகள் ஏற்படலாம்.

இதுபோன்ற காரணங்களால் சில சமயங்களில் சிலர் தற்கொலைக்கும் முயற்சி செய்கின்றனர். அனைவரிடமும் பேசிபழகும் பழக்கமுடைய இவர்கள் மற்றவர்களால் புகை, மது போன்ற பிற தீய பழக்கங்களுக்கும் ஆளாக வாய்ப்புள்ளது.’’  இந்த மாறுபட்ட குணநலன்களை எப்படிக் கையாள்வது ?

‘‘Introvert அல்லது Extrovert குணநலன்கள் தீவிரமடைந்து மனநல பிரச்னைகளுக்குரிய நிலையில் இருப்பவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்களிடம், பிரச்னைகளைப் பகிர்ந்து அதற்கான தீர்வு காண முயற்சிக்க வேண்டும். மற்றவர்களைத் தொந்தரவு செய்வதாக நினைப்பதை Introvert குணநலனுடைய நபர்கள் தவிர்க்க வேண்டும்.

அதேபோல், Extrovert குணநலனுடைய நபர்கள் அனைவரிடமும் அந்த பிரச்னையை பகிர்ந்துகொள்வதை தவிர்த்துவிட்டு தனது நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்த இரண்டு குணநலன்களைக் கொண்டவர்களும் தங்களை சரியாக புரிந்துகொள்வதோடு, தங்களின் குணநலன்களுக்குப் பொருத்தமான பணிகளை மேற்கொள்வது நல்லது. இதுபோன்ற மனநல பிரச்னைகளுக்கு ஆளாகி இருப்பவர்கள் சரியான நேரத்தில் மனநல ஆலோசகரை அணுகி அவரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.’’

- க.கதிரவன்