டென்ஷனா இருக்கா... வாங்க உடைக்கலாம்



விநோதம்

‘தாங்க முடியாத மன உளைச்சலில் இருக்கிறீர்களா.. நாங்க இருக்கோம்’ என்று ஆறுதல் சொல்லி வழிகாட்டுகிறார்கள் Break room ஆசாமிகள். மனதுக்குள் கொந்தளிக்கும் உணர்வுகளை அப்படியே அடக்கிவைத்தால் ஆபத்து. அதனால், அவ்வப்போது அதை உடைத்தெறிய வேண்டும் என்பதுதான் இதன் முக்கியமான ஐடியா. அப்படி என்ன ஐடியா என்று ஆர்வமாக இருக்கிறதா.... உடைப்பதுதான் ஐடியாவே!

கோபம் தலைக்கேறினால் கைக்குக் கிடைப்பதை விட்டெறிவதும், உடைப்பதும்தான் நம்முடைய தொன்று தொட்ட பழக்கம். செல்போனை உடைப்பது, டி.வி ரிமோட்டை உடைப்பது, சமயத்தில் டி.வியையே கூட உடைப்பது என்ற நம் ஆவேசத்தைத் தணிக்கும் வேலையை, அரியானா மாநிலத்தில் புரொஃபஷனலாக மாற்றியிருக்கிறார்கள்.

குர்கான் நகரத்தில் இதற்காக Break room என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். டென்ஷனாக இருந்தால் அங்கு சென்று, ரிலாக்ஸாகத் திரும்பி வரும் வகையில் பல ‘அடடா’ யோசனைகள் அங்கு இருக்கிறது. பிரேக் ரூமில் அப்படி என்னென்ன இருக்கும்?உடைப்பதற்காகவே பல்வேறு பொருட்கள் ஒவ்வொரு அறையிலும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

டி.வி, போன், கம்ப்யூட்டர், சமைக்கும் பாத்திரங்கள் என எல்லாமே உண்டு. உடைப்பதற்கு முன்பு பாதுகாப்பு உடைகள், உபகரணங்களையும் வருகிறவர்களுக்குக் கொடுத்துவிடுவார்கள். என்னென்ன பொருட்களை உடைக்க வேண்டும் என்பதற்குத் தகுந்த மாதிரி கட்டணம் மாறுபடும். வீட்டிலிருந்தும் பொருட்களைக் கொண்டு வரலாம்.

18 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், இதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள், தன்னைத்தானே வருத்திக் கொள்ளக்கூடிய மனநோயாளிகளையெல்லாம் இந்த அறைக்குள் அனுமதிப்பதில்லையாம். டென்ஷனை சமாளிக்க மனிதர்கள் என்னவெல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைத்தால் பாவமாகவும் இருக்கிறது. பயமாகவும் இருக்கிறது.

- என்.ஹரிஹரன்