சந்தர்ப்பங்கள் அப்போதைய நிலையை நியாயப்படுத்துவதில் பெரும் வல்லவர்கள்.
தட்சிணாமூர்த்தி எதிரே வெறித்தபடி இருந்தார். எழுபது வயதானாலும் கண்ணாடி போடாத கண்களின் கூர்மை, அவர் படிக்கும் நிறையப் புத்தகங்கள்- பத்திரிகைகள் பொடி எழுத்துக்களைக் கூடத்தட்டாமல் - தடவாமல் படிப்பதனால் மட்டுமல்ல-
மனிதர்களை - பார்க்கும் காட்சிகளை - கேட்பவைகளை கண்முன்னால் காட்சிகளாகக் காண்பதில் - எல்லாவற்றிலுமுள்ள உட்பொருளை அறிவதில் அவர் பார்வை தீர்க்கமானது.
“ஊமைக்குப் பேச்சுத்தான் வராது - சிரிப்புமா வராது!”
அவர் கேட்கும்போது முதலில் சிரிப்புத்தான் வரும். கூடவே சிந்தனையும் வரும்.
இப்போது எதை இமைக்காமல் பார்க்கிறார்?
குறுந்த மரத்தடியில் அமர்ந்து திரிகாலமும் உணர்ந்த ஞானியர்களுக்கு உபதேசிப்பார் பகவான் தட்சிணாமூர்த்தி. ஆனால் இந்த தட்சிணாமூர்த்திக்கோ, உலக இயக்கம் உபதேசிக்கிறது.
“சார் - பேப்பர்!” தாமோதரன் அன்றைய தினசரியைக் கொடுத்தான். வாங்கிக் கொண்டவர் - பக்கத்தில் எழுதி வைத்திருந்த அம்மாத பேப்பருக்குரிய கணக்குச் சிட்டையையும் பணத்தையும் கொடுத்தார். வாங்கியதோடு “மீதிச் சில்லரை இல்லையே - மாற்றிக் கொண்டு வரட்டுமா?”
சரி என்பதற்காக தலையாட்டியவர், பேப்பரைப் பிரித்துப் படிப்பதில் முனைந்தார்.
“தொழில் முடக்கம் - கடன் தொல்லை - டாக்டர் தற்கொலை” இது ஒரு செய்தி. மக்கள் ஆரோக்கியமாயிருந்தால் மருத்துவர்கள் நோய்வாய்ப்பட்டுப் போவார்கள்.
அடுத்து, கற்பழிப்புச் செய்தி. ரொம்பக் காலமாக இது நடக்கிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்கோ...
தட்சிணாமூர்த்தி அடுத்த பக்கத்தைப் புரட்டினார். உலகத்தார் உய்வதற்கு சீரான மார்க்கம் சொல்லி வந்த பெரும் சாமியார், தொண்ணூற்று எட்டு வயதில் சமாதி நிலை அடைந்துவிட்டார். பக்த கோடிகளின் கண்ணீர் அஞ்சலி. உயிர் எங்கிருந்து வந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்குள், அவர் உயிர் போய்விட்டது. இதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கை.
இதற்கும் கீழே கட்டம் கட்டி ஒரு செய்தி - “பாலின் அடர்த்தியைக் கணக்கிட ‘லாக்டா மீட்டர்’ என்னும் கருவி கண்டுபிடிக்கிறது. இதை முதலிலேயே தெரிந்து வைத்திருக்கிறதே பசு!
“இலவசத் திட்டங்களால் ஏழைகள் மேலும் கையேந்திகளாகத்தான் போவார்கள்.” எதிர்க்கட்சித் தலைவர் கடும் தாக்கு.
“ஏழைகளாக இருப்பதனால்தானே கொடுக்கிறோம்.” மந்திரி காட்டமான பதில்.
“அப்பாடா! ஏழைகள் இருப்பதை ஒத்துக் கொள்கிறார்களே! வறியவர்கள் இல்லையானால் எப்படி அரசியல் நடத்த முடியும்? நாடு தன்னிறைவு அடைந்துவிட்டது என்று பெருமிதப்படுகிறாரே மத்திய அமைச்சர்.
ஆமாம் - தினசரி வானொலி- தொலைக்காட்சி - செய்தித்தாள்களில் இதைத்தானே படிக்கிறோம் - பார்க்கிறோம் - கேட்கிறோம். இதெல்லாம் ஊடகங்களா- ஊடாடல்களா?
இதெல்லாம் எதற்கு? நாம் வாழ்வதுதான் எதற்கு? அப்படித்தான் இதெல்லாம்!
எதிர் வீட்டுக்காரர் சஞ்சாரி நாயினா வந்தார்.
“வாங்க உட்காருங்க.”
உட்கார்ந்தவர் - எண்பது வயதுக் கிழவியை கற்பழித்துவிட்டானாம் ஒரு விடலை. அந்த அம்மாளுக்கு மரபணு சோதனை செய்யுறாங்களாம். இதெல்லாம் என்ன கண்ராவி...”
காமத்திற்கு கண்ணில்லைன்னு அப்பவே சொல்லியிருக்காங்களே!
“இப்ப அவன் உடம்பு போலீசார் வசம் இருக்கே!”
கொனஷ்டையாகப் பேசுவதில் நாயினா வல்லவர். ஊரிலுள்ள ஒவ்வொருவரைப் பற்றியும் ஆதியும் அந்தமும் தெரியும். நாரதர்தானா திரிலோக சஞ்சாரி!
பேப்பரில அரைப் பக்கத்திற்கு “உங்களுக்குக் குழந்தை இல்லையா? என்னிடம் வாருங்கள் என்று ஒரு வைத்தியர் சொல்லியிருக்கிறாரே?”
மருந்து கொடுப்பதற்கு!
அவருக்கே பிள்ளையில்லையே!
விளம்பரம் மக்களுக்குத்தானே! அவருகில்லையே?
பேப்பரைப் பிரிச்சா; தலை மட்டுமல்ல - உலகமே சுற்றுது.
நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதின் உணர்த்தல்.
“என்னவோ போங்க...” சஞ்சாரி நாயினா போய்விட்டார். அநாதி காலத்தில் தானா நாரதர் இருந்தார்? எல்லாக் காலங்களிலும் திரிலோகசஞ்சாரிகள் இருக்கத்தான் செய்வார்கள்!
மறுநாள் தாமோதரன் வந்து பேப்பரைக் கொடுத்துவிட்டு, இருநூறு ரூபாயில், கணக்குப் போக மீதிப் பணத்தைத் தந்து - “சாரி சார்! நேத்திக்கு வேலைக்குப் போக நேரமாயிடுச்சு.” அவன் குரலே அச்சமாக இருந்தது.
அவர் அவனைப் பார்த்தார். கடல் நீரில் ஐஸ் தயாரித்தால், உப்புக் கரிக்குமா? கரிக்காது. உறையும் போது நீர் மட்டுமே ஐசாக மாறுகிறது. உப்புத் தனியே பிரிந்துவிடும். கூர்ந்து கவனிக்கையில் மனிதர்களின் பேச்சில் உண்மையும் பொய்யும் தனியே தெரிகிறது.
“அதனாலென்ன! என்ன வேலை பார்க்கிறே?”
“வேளாண்மைத் துறை அலுவலகத்திலே கடைநிலை ஊழியராக இருக்கேன்.”
“பட்ஜெட்ல துண்டு விழுவதை ஈடுகட்ட இந்தப் பேப்பர் வருமானமாக்கும்.”
“சார்! மனிதனே துண்டு துண்டுகளாகத்தானே இருக்கான். ஊராருக்கு - குடும்பத்தாருக்கு - நடைமுறைக்கு - நீதிக்கு - இதையெல்லாம் கடந்து தனக்காகவும் வாழவேண்டியிருக்கு.”
புத்தகத்தைப் படிக்கும் முன் முன்னுரையைப் படிப்பதுபோல, மனிதர்களைத் தெரிந்து கொள்ள அவர்களின் நடவடிக்கைகள்.
“தாமு! இந்தப் பணம் கடன் வாங்கி வந்ததுதானே?”
அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை.
“இதை எடுத்துக்கோ. அடுத்த மாதம் பேப்பர் போடும்போது பார்த்துக் கொள்வோம்.”
“சார்!” தழுதழுக்கும் குரல்... அவனுக்கு நேரமாகியது. பல இடங்களுக்கும் செய்தித்தாள்களை வினியோகிக்க வேண்டும். பணத்தை எடுத்துக் கொள்ளாமலே அவன் போய்விட்டது, அவரைத் துன்பப்படுத்தியது.
வேளாண்மை அலுவலகத்தில் வேலை பார்த்த அவன் தந்தையை நெஞ்சுவலி ஐந்து நிமிடத்தில் சுருட்டிக் கொண்டு போய் விட்டது. இவன் அம்மா வலதுகையும் காலும் விளங்காத வாதநோயால் படுத்த படுக்கைதான் வாழ்க்கை. இவனுக்கு அடுத்த தம்பி தங்கை இரண்டு பேர்களும் மூளை வளர்ச்சியில்லாத உருவங்கள். மூவருக்குமே மலஜல உபாதைகளிலிருந்து - சாப்பிடப் பண்ணி - துணி மாற்றி - குளிக்க வைத்து - இரவு படுக்கைக்குப் போகும் வரைக்கும் இவன்தான் துணை.
வயதுக்கு வந்த தங்கையானால் என்ன, வயதான தாயானால் என்ன? இருவரும் பெண்கள்தானே. அவர்களுக்கான காரியங்களைப் பார்க்கும்போது, வாலிபன் என்னும் அவனுக்கு எத்தனை அவஸ்தைகள்... அந்நேரம் ஆண் என்பதையே மறந்துவிட வேண்டும். ஒரு செயல் ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டது. இதையெல்லாம் எத்தனை வார்த்தைகளால் சொல்வது? நீண்டவாழ்க்கைப் பாதையில் செல்லும் கர்மயோகி அவன்.
அன்று அலுவலகத்திற்கு மேல் அதிகாரி வருகை தருகிறார். ஆபீசில் ஏதோ ஊழலாம். அதைக் கண்டறிவதற்காக வருகிறார். எல்லோரும் வழக்கத்தை விடச் சீக்கிரமே போக வேண்டும். மற்ற நாட்களில் தாமதமானால், பழகிய அதிகாரிகள் இவன் நிலை கண்டு பொறுத்துக் கொள்வார்கள். இவர் அப்படியிருப்பாரா?
“தம்பி.”
கீழே இறங்க வாசலில் கால் வைத்தவன், திரும்பிப் பார்த்தான். நீண்ட நேரம் கையையும் காலையும் முடக்கிக் கொண்டு இருந்தவளால், இனிப் பொறுக்க முடியாது என்னும் அவஸ்தை. வாசலில் கோபி துடித்துக் கொண்டிருக்கிறான். அலுவலகச் சூழ்நிலை - கொஞ்சம் தவறினாலும் பிழைக்கிற பிழைப்பில் மண் விழுந்துவிடும்.
விதிக்கு தலையிலடித்துக் கொள்ளலாமா?
சே... சே... இளமையில் வரும் சிரமங்களைத் தாங்குகிறோம். அதன் பலன் முதுமையிலும் சிரமங்கள் நம்மைத் தாக்குகின்றன. பெற்ற பிள்ளைகளும் அப்படி இருக்கலாமா?
மெல்ல வந்து அம்மாவைத் தூக்கி நாற்காலியில் உட்கார வைத்து - அவள் எப்படிச் சாய்ந்து இருந்தால் சௌகரியமாக இருக்குமோ; அப்படி வைத்து - சுவாதீன மற்ற வலது கையை முன்னால் இழுத்து வைத்து, “சரியாம்மா?” என்று கேட்ட போது, “சரிப்பா - உனக்கு வேலைக்கு நேரமாயிருச்சு. போயிட்டு வா.” எனச் சம்மதம் கொடுத்தாள்.
மூச்சு வாங்க, “வா, போவோம்.” என்று கோபியை இழுத்துக் கொண்டு ஓடினான் தாமு. படுக்கையில் கிடக்கும் அம்மாவின் உடம்பு கல்லாக் கனக்கிறது. அவளைத் தூக்கி உட்கார வைப்பதற்குள், உடம்பும் மனதும் களைத்துப் போய்விட்டது. சற்று நேரம் ஓய்வாக இருக்க உடம்பு கெஞ்சுகிறது. முடியுமா?
தாமுவைப் பார்த்து, “இதென்ன வாழ்க்கை? நானா இருந்தா...” வெறுப்பில் முகம் சுழித்தான்.
“இதுதான் வாழ்க்கை” தாமு பேசவில்லை. மெல்லிய சிரிப்பு, சகிக்க முடியாத வேதனையை மீறி வந்தது.
பழகிப் போன தீமையும் நாளடைவில் நன்மையாகத் தெரிகிறது. உடலை அழிக்கும் குடியானால் என்ன? குடும்பத்தை அழிக்கும் கூத்தியாள் ஆனால் என்ன? நெஞ்சை அரிக்கும் புகைபிடிக்கும் பழக்கமானால் என்ன?
தாய்க்குச் செய்யும் சேவை அப்படியா?
அன்று பேப்பர் கொடுத்தபோது, தட்சிணாமூர்த்தி என்னவோ போல் இருந்தார். பேப்பரைக் கூட சுரத்தில்லாமல் வாங்கி வைத்தார்.
“ஏன் சார், உடம்புக்கு முடியலியா?”
தலைவலி தாங்க முடியவில்லை. ஒரு மாத்திரையும் காப்பியும் சாப்பிட்டாப் பரவாயில்லை. அம்மா ஊரிலே இல்லே...”
அம்மா இருந்தா என்ன? அது சண்டி மாடு. இவர் சொல்றதுக்கெல்லாம் எதிராகத்தான் இருப்பாள்.
“வாங்கியாறேன்.”
பிளாஸ்க்கை எடுக்க எழுந்தார்.
“நீங்க இருங்க. நான் எடுத்துக்கறேன்.” உள்ளே ஓடிப்போய், பிளாஸ்க்கை எடுத்து வந்தான்.
“சார்! நீங்க லேசானவர்தான். ஆனா தாங்கிக் கொண்டிருக்கும் முதுமை எவ்வளவு கடினமானது! எங்கம்மாவைப் பார்க்கிறேனே” சொல்லிக்கொண்டே ஓடிப்போய் காபி வாங்கி - தம்ளரில் ஊற்றிக் கொடுத்து; மீதி சில்லலையும் கொடுத்து - மீதமிருந்த காபியை தான் குடித்துவிட்டு - எல்லாவற்றையும் கழுவி வைத்து விட்டுக் கிளம்பினான்.
தட்சிணாமூர்த்தி - “சிரமம் கொடுத்திட்டேன்” என்றவாறு காப்பிக்கும் மாத்திரைக்கும் ரூபாய் கொடுத்தார்.
“கணக்கென்ன சார், கணக்கு? நாம் முடிந்த பிறகு, வாழ்ந்ததை மற்றவர்கள் லாப நஷ்டம் பார்க்கிறார்களே - அதுதான் உண்மையான கணக்கு. நானும் காப்பி குடித்தேனே, அதை எதிலே சேர்க்கிறது?”
தாமு சைக்கிளில் பறக்கிறான்.
துணை நாடி அலையும் பொய்கள், தனியாகச் சொல்லும் அந்தச் சத்தியத்தை நாட முடியவில்லை.
அலுவலகத்தில் அன்று ஏகக்கெடுபிடி. சென்னையிலிருந்து வந்திருக்கும் உயர் அதிகாரி போவது வரைக்கும் எமகண்டம். தாமோதரன் அங்குமிங்குமாக பறந்து கொண்டிருக்கிறாள். அவனுடைய மேலாளர் ராகவன் சாரும் இருப்புக் கொள்ளாமல் குறுக்கும் நெடுக்குமாக போய் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் இல்லையென்றால் இந்த வேலை கிடைத்திருக்காது. அப்பா இறந்த பிறகு குடும்பம் தத்தளித்து நின்றது. படித்துவிட்டு வேலையில்லாமல் பேப்பர் போடுவதை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அதில் கிடைக்கும் வருமானம் எந்த மூலைக்கு ஆகும்? கருணை அடிப்படையில் தந்தைக்குப் பதிலாக வேலை வேண்டி அவன் போய் நிற்கும் போதெல்லாம் ராகவன் சார் குமைந்து போவார்.
“உன் நிலையை விளக்கி மேலிடத்திற்கு கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருகிறேன். அசைந்த பாடில்லை. என் கையிலிருந்தால், உடனே போட்டுவிடுவேன். வரட்டும் பார்ப்போம். இல்லாவிட்டால் உனக்காக ஒருநாள் தலைமையகத்திற்கு நீயும் நானும் போய் வருவோம்..”
தயவாகச் சொன்னவர்- கொஞ்சம் பொறுத்திரு. வேலை எப்படியும் கிடைச்சிடும்.”
எதிர்காலத்தில் சாதனைத் தளிராக நிற்கும் இவரின் வாக்குறுதி - தாமோதரன் அவரையே பார்த்தான். கிடைக்க வேண்டியதை யாராலும் தடுக்க முடியாது. தடுக்க வேண்டியதை யாராலும் கொடுக்க முடியாது.
“என்ன பார்க்கிறே? இவர் இப்படியே சொல்லிக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார். தினசரிச் சிரமங்களுக்கு இப்படிப் பதில் சொல்ல முடியுமா? அதை எதிர் கொள்கிறவனுக்குத்தான் அவஸ்தைகள் தெரியும். அப்படித்தானே?”
தாமு பேசவில்லை.
காலங்கள் தோறும் இந்த உலகத்தை குழப்பியடிப்பது மரணமும் வயிற்றுப்பசியும்தான்- கடவுள் அல்ல.
சார் வெறும் அலுவலக அதிகாரி மட்டுமில்லை - எழுத்தாளரும் கூட. அவர் எழுதும் கதைகளிளெல்லாம் மனிதநேயம் நிறைந்திருக்கும். எல்லோரும் தாயைப் பற்றித்தான் அதிகம் பேசுவார்கள் - எழுதுவார்கள். இவர் தந்தையைப் பற்றித்தான் அதிகம் எழுதுகிறார். அவர் ஹோட்டலில் சரக்கு மாஸ்டரா இருந்து - வியர்வையும் ரத்தமும் ஒவ்வொரு நாளும் சிந்த குடும்பத்தைக் கட்டிக் காத்து; பிள்ளைகளைப் படிக்க வைத்திருகிறார்.
இவர் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு அவர்தான் அஸ்திவாரம்.
“அம்பி! நிலவு மட்டுமா தேய்கிறது? முயற்சிகள் தொடராவிட்டால், நாமும் தேய்ந்துதான் போவோம். முடிந்த மட்டும் படி. படித்துக் கொண்டே வேலைக்கும் முயற்சி செய்.”
கணகணவென்று எரியும் அடுப்பின் வெக்கையையும் வியர்வையையும் தோளில் கிடக்கும் துண்டில் துடைத்துக் கொண்டே, முதலாளியிடம் வீட்டுச் செலவிற்கும் - படிப்புக்கும் பணம் வாங்கிக் கொடுத்த அப்பாவை நினைவுகூறும் போதெல்லாம் ராகவன் சார் பொங்கி விடுவார்.
அவர் இறந்த அன்று ஆபீசிலிருந்து எல்லோருமே வந்து மாலை போட்டார்களே. கிட்டத்தட்ட அலுவலகமே லீவாகி விட்டது. மேலேயிருந்து கீழேவரை யார் நல்லவன்னு பெயர் வாங்க முடியும்?
இந்த வேலை அவர் போட்ட பிச்சை. சம்பளம் வாங்கும்போது நான் வாங்கவில்லை. அவர் வாங்கி என்னிடம் கொடுக்கிறார்.
உணர்ச்சியில் கரைந்து கரைந்து அவன் குரலே நூலிழையாகி விட்டது. “சார்! மனிதனைப் புரிந்து கொண்ட தெய்வமல்ல - மனிதர் நீங்கள்!”
வயதாகி விட்டாலும், அதிகாலையில் எழுந்துவிடும் பழக்கம் உள்ளவர் தட்சிணாமூர்த்தி. பத்து நிமிடம் உடல் பயிற்சி. காபி குடிப்பது. அடுத்துப் புத்தகத்தை கையிலெடுத்துக் கொண்டு - அதில் மூழ்கிப் போவார்.
புத்தகம் புத்தகம் வீடெங்கும் காகிதக் குப்பைதான். ‘இந்த மனுசன் செத்தா, எரிக்க விறகும் எருவாட்டியும் வேண்டாம். இந்தப் புத்தகங்களே போதும்.’ நிஷ்டூரமாகச் சொல்வாள் அவர் மனைவி. இந்தக் கொடூரம் அவர் காதுக்கு எட்டாது.
அரைப்பவனுக்குத்தான் சந்தன மணம் கமழும்!
“சார்! அன்றைய பத்திரிகையை நீட்டினான் தாமு. வாங்கியவர் கண்களில் அந்தப் படமும் செய்தியும்... கணவர் கைவிட்டு - வேறு ஒருத்தியுடன் போய்விட்டதால் - குடும்பக் கஷ்டம் தாங்க முடியாமல் பத்து வயதுப் பெண்ணையும், எட்டு வயதுப் பையனையும் சேலையின் இருபக்கத்தில் தூக்கில் தொங்கவிட்டு - மருந்தைக் குடித்து மாண்டுகிடக்கும் தாய்...
பெற்றவளால் எப்படி பிள்ளைகளை துடிதுடிக்க தொங்க விடமுடிந்தது? தட்சிணாமூர்த்தி நடுங்கினார்.
தினசரி நம் காலடியில் எத்தனையோ உயிர்கள் பட்டு மடிகின்றன. நாம் அதை எண்ணிப் பார்க்கிறோமா? செய்தித்தாள்களும் அப்படித்தான். எத்தனையோ மரணங்கள். அதெல்லாம் வெறும் செய்திதான். பேப்பர் என்றாவது கண்ணீர்விட்டு நனைந்திருக்கிறதா?
தாமு ஒருநாள் “சார்!” என்று எதிரே தயங்கி நின்றான்.
“என்னப்பா? என்னமும் பிரச்சினையா பணம் வேண்டுமா?” கண்ணாடியைத் தூக்கி விட்டுக் கொண்டு நிமிர்ந்து கேட்டார்.
“அதெல்லாம் இல்லை. உங்கள் கதைகளையெல்லாம் பெரும்பாலும் படித்திருக்கிறேன். எல்லாக் கதைகளிலும் உங்க அப்பாவைப் பற்றிய ஏக்கமும் ஆதங்கமும் இருக்கிறதே...”
“நான் இப்படி இருப்பதற்கு அவர் உடம்பையும் உயிரையும் தத்தம் பண்ணினார். வசதியாக இருக்கும்போது, அவர் போய்விட்டாரே...”
அவனுக்கு ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது.
தந்தைக்கு இறுதிக்கடன் செய்ய முடியாத இராமபிரான், ஜடாயுவிற்கு செய்தாரே! அப்பாவுக்கும். செய்ய வேண்டியதையெல்லாம் எழுத்தில் கொட்டுகிறீர்களே - அதுதான் பாக்கியம்.
நன்றியின்மை ஆணவத்தின் பிள்ளை. அதை இவர் பெறவுமில்லை - வளர்க்கவுமில்லை. இவர் எப்போதும் சரக்கு மாஸ்டர் வெங்கட்ராமய்யரின் பிள்ளைதான்.
“மன்னிச்சுக்குங்க- உங்க மனசை கஷ்டப்படுத்திட்டேன்.”
சார் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
இவரின் முயற்சியால் - தாமுவுக்காக சென்னை சென்று மேல் அதிகாரியைக் கண்டு பரிவு சொட்ட வேண்டி, வேலை வாங்கிக் கொடுத்தார். தாமுவை விட, அவனுக்காக மெனக்கெட்டு வந்து மன்றாடிய ராகவன் சாருக்காக வேலை கொடுத்தார் மேல் அதிகாரி.
வெளியிலிருப்பவர்கள், ‘நீ சாமர்த்தியசாலி. எப்படியோ காக்காப் பிடிச்சு வேலை வாங்கிட்டே’ என்பார்கள். வெற்றிதான் உலகத்தாரின் கண்களுக்குப் படுகிறது. அதற்கான முயற்சிகள் தெரிவதில்லை.
“சார்! எங்கப்பா ரெங்கசாமியை “ரங்கா” ன்னுதான் கூப்பிடுவீங்களாமே?”
இவனுக்கும் அப்பாவைப் பற்றிய நினைப்பு வந்துவிட்டதோ?
“ஏன் அப்படி ஒரு நயம் - பாந்தம் - அவரைப் போல மனிதர் அமைவது கஷ்டம்.”
படிக்கும் நாம்தான் சஞ்சலப்படுகிறோம். ஏன் சார் அதை வெறும் நியூசாக எடுத்துக் கொள்ள முடியவில்லை? ஒவ்வொருவர் கஷ்டமும் அவரவர்களுக்கு உலகத்தனையாகத் தெரிகிறது. அப்படித்தானா?
உலகம் தெரியாததால் நமக்கு அப்படிப்படுகிறது.
கடந்த காலத்தின் சாரம் அவருள் இறங்கி நிற்கிறது. தட்சிணாமூர்த்தி அவனைப் பார்த்து, “நீ ஒரு பெண்ணைக் காதலிக்கிறாயாமே?”
“ஆமாம் சார்” வெட்கம் வராதா என்ன? மெல்லிய சிரிப்பு கசிந்து வருகிறது.
“இத்தனை அவலங்களுக்கும் அல்லல்களுக்கும் மத்தியில் உனக்கு எப்படி இம்மாதிரி ஆசை வருகிறது? காதல் - தேவைதானா?”
சந்தன மரத்தைத் தனியே வளர்க்க முடியாது. வேறு மரத்தின் அருகில்தான் வளரும். இதன் வேரினால் தனக்கு வேண்டிய சத்துக்களை தரையில் இருந்து நேரிடையாகப் பெற முடியாது. இப்படித்தான் ஆணும் பெண்ணும். ஒருவரின் ஊட்டமே இன்னொருவரின் வாழ்க்கை.
அவள் அழகே ஒரு சக்தி! அதே நேரம் அவள் புன்னகை கத்தியாக இருக்கும். என்னைத் தவிர யாரும் அதில் பதம் பார்க்க முடியாது.
அழகினால் என்ன பயன்?
நுகர்ச்சி!
ஆனால் அது புத்துணர்ச்சி தருகிறதே! அவள் நட்பின் நேரம் மகிழ்ச்சி பூத்திருக்கும். நேசிக்கும் நேரம் உற்சாகம் பொங்கி வழியும்!
“சார்! நான் வயசுப் பயல்தானே! இம்மாதிரி நினைவெல்லாம் வரக்கூடாதா? எல்லாம் சுமையாகக் கருதுபவனுக்கு, அவரும் காதலும் தண்டனைதான். நான் எதையும் சுமையாக நினைக்கவில்லை. இதெல்லாம் சுமக்கக்கூடிய - சுமக்க வேண்டிய சுமைகள்!”
உடலின் தேவைகள் துன்பம்தான். ஆனால் இதுதானே வாழ்க்கை!
“நான் பார்க்கும் போதெல்லாம் புத்தகங்கள் படித்துக் கொண்டே இருக்கிறீர்கள். அதில் ஏன் உங்களுக்கு சலிப்பு வருவதில்லை? அடுத்தடுத்துப் படிப்பதில் அப்படி என்ன புதியது இருக்கிறது? அப்படித்தான் இதுவும்!”
கண்ணீரில் எழுதப்பட்ட கதை காதல்:
அது தொடர்கிறதே?
ராமாயண காலத்தில்தானா மாயமான் இருந்தது? எல்லாக் காலத்திலும்தான்.
“எதை இழந்தாலும் இழக்கக்கூடாத ஒன்று நம்பிக்கை. அது எனக்கு இருக்கிறது. அவளுக்கும்தான். பெரிய பணக்கார வீட்டுப் பெண். நிறையப் படித்தவள். அழகி. பெயர் அனிதா! நான் அனி! அனி! என்று தான் கூப்பிடுவேன்.”
அவள் சிலிர்த்துப் போவாள்.
“உனக்கும் எனக்கும் எந்த விதத்திலும் பொருத்தமில்லை. உனக்கேற்ற எத்தனையோ வரன்கள் வருவார்கள்.”
“அவர்களில் ஒருவராக நீங்கள் வருவீர்களா?”
தாமு அமைதியாக நின்றான்.
எங்கு பெண்கள் கௌரவமாக இருக்கிறார்களோ, அங்கு ஆனந்த தேவதைகள் குடிகொள்கிறார்கள். ஆனால் எது தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற இடம் என்று நினைக்கிறார்களோ. அங்கு தங்கள் பெண் இருக்க வேண்டுமென்று எண்ணுகிறார்கள். இதில் ஒரு பெண்ணின் இதயம் நசுங்குகிறது என்பதை அவர்கள் ஏற்பதில்லை.
தோல்விகளிலிருந்தும் சோதனைகளிலிருந்தும் முளைத்து வெளிக் கிளம்பும் அந்த இதயம் - நியாயங்களை செவிபிடுக்காத அவர்களின் கன்னத்தில் சர்வாதிகாரமாக அறைந்து மீறி வந்து விடுகிறது.
“நீங்கள்தான் வேண்டும்” தாமுவை அனிதா அணைத்துக் கொண்டாள். அன்பும் மகிழ்வும் இணையும்போது, எல்லையில்லாப் பேருவகையாகிறது. மழையைக் கூட்டும் குளிர்ந்த காற்று வீசுகிறது.
எல்லாவற்றையும் மீறிக் காரியங்கள் நடந்துதான் விடுகின்றன. அனிதாவின் தந்தை அவர் விரும்பியவனுக்கே, அவளை மனம் முடித்து வைத்து தொலை தூரத்திற்கு அனுப்பிவிட்டார். தாமுவும் அவளைத் தேடிச் சென்று ஒருநாளும் பார்க்கவில்லை.
ஒரு மாலைப் பொழுதில் - கோயிலுக்கு அருகில் எதிர் எதிராக இருவரும் சந்தித்தார்கள்.
“தாமு!”
“அனி!” அவன் அப்படித்தான் பொங்கப் பொங்க அழைப்பான்.
சோதனைகள் சூழ்ந்தவர்களைத்தானே காதல் விரும்புகிறது. இவர்கள் எங்கெங்கோ இருந்தாலும் சதா அருகில் இருப்பவர்கள்தான்.
“நான் உங்களை மறந்து சந்தோஷமாக இருக்கிறேன் என்றா நினைக்கிறீர்கள்?”
“நீ சொல்கிறாய்- நான் சொல்லவில்லை. வெளியில் இருந்து ரசிப்பவர்களுக்கு ரோஜாவின் அழகும் மணமும் தெரியும். அனுபவிப்பவர்களுக்கு முள்தான் குத்துகிறது.”
“நான் உங்களுடன் வாழ்ந்து கஷ்டங்களை அனுபவித்திருந்தால்கூட, எனக்கு இவ்வளவு துன்பம் இருக்காது. வாழாமல் போன கஷ்டம்தான் நிமிடம் தோறும் வதைத்து வாங்குகிறது.”
“அனி! நாம் தாண்ட முடியாத பன்னெடுங்காலக் கோடு ஒன்று குறுக்கே இருக்கிறது. மிக அருகில் நேருக்கு நேர் நாம் பேசினாலும், வேறுபட்ட வாழ்க்கையில் எங்கோ தூரத்தில் இருக்கிறோம்.”
“நாம் பழகியதை கணவர் தெரிந்து கொண்டார். கோபம் பழி வாங்குதலை மணக்கும் நேரங்களில் அவரால் எத்தனையோ துன்புறுத்தல்கள். அதையும் மீறி பலமான இடத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.”
இன்பத்தைத் தேடி வீட்டுக்கு வெளியே நிழலைப் பின்தொடர்ந்து ஓடுகிறவரை, நான் எப்படி நேசிக்க முடியும்.”
“பூமியில் குடிசை போட முடியாதவன், ஆகாயத்தில் அரண்மனை கட்டிய கதைதான் இது. இல்லத்தரசியை மகிழ்விக்க இயலாதவன், மலர்ந்து வாடும் பூக்களை நாடிப் போகிறான்.”
நடப்பதை ஒளிந்திருந்து பார்த்த அவள் கணவன்; அன்றிரவு- “அனி!அனி!” என்று அன்பொழுகக் கூப்பிட்டான்.
எப்போதும் அனிதா! என்றுதானே கூப்பிடுவார்? இப்போது மட்டும் - அவன் கபடம் புரிந்தது.
அவன் இருக்கும்வரை உன்னால் மறக்க முடியாது.
ஏவியவரையே திருப்பித் தாக்கும் கொடிய ஆயுதம் சினம் என்பது உணர்ச்சிவயப்பட்டவர்களுக்கு எப்படித் தெரியும்.”
தட்சிணாமூர்த்தி இமைக்காமல் தாமோதரனைப் பார்த்தார்.
“சார்! நாம் உயிருடன் இருக்கும்போதே உடல் உறுப்புகள் சில மரத்துப் போகிறதே ஏன்? என் இதயமும் அப்படியாகி ரொம்ப நாட்களாகி விட்டன. அதற்கான வைத்தியம் எதுவும் இருக்கிறதா?”
இந்நேரம் சஞ்சாரி நாயினா வந்தார். “பேப்பர் போடுவதை விட்டு அப்படி என்ன வாதம் நடக்கிறது?” கபடமாகச் சிரித்தார்.
தன்னை மதிக்காதவரை தண்டிக்காமல் விடுவதில்லை காலம்.
“மறந்தே போனேன். நேரமாச்சு. வர்ரேன் சார்! இன்னிக்கு எல்லோருக்கும் நியூஸ் லேட்டாகத்தான் கிடைக்கும்!” தாமு சைக்கிளில் பறந்தான்.
மறுநாள் வெகுநேரம் காத்திருந்தார் தட்சிணாமூர்த்தி. தாமு வரவில்லை. சஞ்சாரி நாயினாதான் வந்தார். “என்ன இன்னிக்கு உங்க பையன் பேப்பர் போடக் காணோம்? ரோட்டுக்குப்போய் எனக்கு ஒன்றும் உங்களுக்கு ஒன்றுமாக பேப்பர் வாங்கி வந்தேன்.”
தினத்தாளை நீட்டினார். தட்சிணாமூர்த்தி வாங்கி முதலிலிருந்து புரட்டிப் படித்துக் கொண்டே வந்தார்.
பத்தாம் பக்கத்தில் கீழே கடைசியில், ‘ஆற்றுப் பாலத்தின் அடியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாகக் கிடந்தார். போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்’ என்றும் செய்தி. படத்தைப் பார்த்தார். பார்வை அப்படியே நின்று விட்டது.
தாமுதான்.
இன்றையச் செய்திகளில் இதுவும் ஒன்று.
தினசரி நம் காலடியில் எத்தனையோ உயிர்கள் நசுங்கி மடிகின்றன. நாம் எண்ணிப் பார்க்கிறோமா? செய்தித்தாள்களும் அப்படித்தான். எத்தனையோ மரணங்கள். அதெல்லாம் வெறும் செய்திதான். பேப்பர் என்றாவது கண்ணீர் விட்டு நனைந்திருக்கிறதா?
அன்று தாமு சொன்னானே?...
அப்படியானால் அவன் மரணமும் ஒரு செய்திதானா?