திகில் பட வரிசையில், 3டி தொழில் நுட்பத்தோடு வெளிவந்து, பயமுறுத்தும் படம்.
கிராமப் புறத்தில் ஒரு கல்லூரி. அதில் பயிலும் மாணவன் அஜய்யின் காதலி அந்த கிராமத்தில் வசிக்கிறாள். கோடை விடுமுறை விட்டும், காதலியை தினமும் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே கல்லூரியில் தங்குகிறார் அஜய். வாட்ச்மேன் தம்பி ராமையாவின் மகன் ஸ்ரீஜித் அதற்கு உதவுகிறார்.
காதலியைப் பார்க்க சோளக்காட்டிலுள்ள குறுக்கு வழி மூலம் செல்லும் அஜய், அங்கு பயங்கரமான அம்புலி என்கிற நரமாமிசம் உண்ணும் மிருக மனிதன் இருப்பதை அறிகிறார். அதன் பூர்வ சரித்திரத்தைக் கூறும் தம்பி ராமையா, அந்த வழியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறார்.
ஊரே அஞ்சி நடுங்குகிறது. அம்புலிக்கு பல உயிர்கள் பறிபோகின்றன. அஜய்யும் ஸ்ரீஜித்தும் மிகத் துணிச்சலாக இந்த அம்புலி ரகசியத்தை ஆராய்கிறார்கள். அது ஒரு விஞ்ஞான விபரீதம் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். பிறகு அந்தக் கொடிய மிருக மனிதனை அவர்கள் எப்படி வேட்டையாடி ஒழிக்கிறார்கள், அதற்கு பார்த்திபன் எவ்வாறு உதவுகிறார் என்பதையெல்லாம் அச்சத்தின் உச்சத்திற்கே இட்டுச் சென்று விவரிக்கிறது படம்.
- கௌதம நீலாம்பரன்