ஊற்று மணல் 06



Chimil magazine, Chimil weekly magazine, Tamil Magazine Chimil, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       “என்னங்க. மதினி எப்படியிருக்காங்க? டாக்டர் என்ன சொன்னாங்க? வீட்டுக்கு எப்போ வருவாங்க?” முத்துசாமியின் மனைவி புஷ்பா கேள்விகளை அடுக்கினாள்.

“உம். இருக்கிறாள். கால் வீக்கம்தான் குறையலே...”

“மதினிக்கு நல்ல சாப்பாடு கிடையாது. இந்தப் பொண்ணுங்க ரெண்டும் மதினியை சரியா கவனிக்கறது இல்லே. மத்தியான நேரம் மைசூர் பாகும். காராபூந்தியும் சாப்பிட்டால் உடம்பு என்னத்துக்கு ஆகும்.  அதுவும் உங்க சின்ன மருமகள் நீலா படுத்தறபாடு ஆண்டவனுக்கே அடுக்காது.” படபடவெனப் பேசினாள் புஷ்பா.

“புஷ்பா. அந்த ரெண்டு பிள்ளைகளுமே... அப்பா செல்லம்.. அம்மாவை மதிக்கறதே இல்லே... இப்பவும் அப்படித்தான் நடத்துக்கறாங்க.”

“நீங்க பணத்தைக் கொடுத்தீர்களா? மதினியை இங்கே வரச் சொன்னீர்களா?” புஷ்பாவின் வேகத்திற்கு முத்துசாமியால் பதில் சொல்ல முடியவில்லை.

“என்னங்க... பேச்சையே காணாம்?”

“என்னத்தப் பேசறது... பணம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க... பணத்தை வாங்கினால் நீலா திட்டுவாளாம்.” உங்க மதினி பயந்துகிட்டு சொன்னாள்.”

“நான்தான் சொன்னேனே... நீலா “மேடம்“ ரொம்ப ப்ரெஸ்டீஜ் பார்ப்பாங்கன்னு... நீங்க கேட்கலே..”

“நீ சொன்னது சரிதான்.”

“உங்க தங்கைக்கு உடம்புல நோயைவிட மனநோய்தான் அதிகம். கோமதி வேலைக்குப் போயிடுவாள். இவள் வேலைக்குப் போறப்போ... அம்மாவை ஜன்னல் கதவு உள்பட எல்லாக் கதவையும் சாத்திக்கச் சொல்லிடுவாள். ஜெயில்தான். அப்புறம் ராத்திரி ஆறு மணிக்குத்தான் விடுதலை. அதுவும் அக்கம்பக்கம் பேசக்கூடாது. யார்கிட்டேயும் எதுவும் கேட்கக்கூடாது.. இது என்னங்க வாழ்க்கை.”

“புஷ்பா என் தங்கை ரொம்ப தைரியசாலி. கிராமத்துல நானும் அவளும் சேர்ந்துதான் பள்ளிக்கூடம் போவோம். போற வழி நெடுக பனங்காடுதான். மணல்பாதை பனைமரக் கூட்டங்களுக்கு மத்தியில்.. கருவேல மரங்கள் நெருக்கமாய் வளர்ந்து காணப்படும். பனை ஓலைகள் காற்றில் ஆடும். அந்த சலசலப்புக்கே நான் பயப்படுவேன்.

‘அண்ணே... இதுக்குப் போயி பயப்படலாமா? கூட நான் வர்றேன்லே ... பயப்படாதேன்னு...’ எனக்கு தைரியம் சொல்லி... என் கையைப் பிடித்து அழைத்துச் செல்வாள். ஆனால் இன்னிக்கு மகள்களுக்குப் பயந்து, நடுங்கி வாழ்கிறாள். எனக்கு அவளை பார்க்கவே பரிதாபமாயிருக்குது.” முத்துசாமியால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“மதினிக்கு வாழ்க்கையில நிம்மதியே கிடைக்கலைங்க... கணவரால ஏற்பட்ட துன்பங்கள் சில பெண்களுக்கு பிள்ளைகளால தீரும்னு சொல்லுங்க. ஆனால் இவங்களுக்குப் பிள்ளைகளாலதான் ரொம்பக் கஷ்டம்ங்க... அவர்களோட புத்திசாலித்தனத்துக்கும். தைரியத்துக்கும்... இப்படி ஒரு நிலைமை வரப்படாதுங்க...” புஷ்பா அங்கலாயத்துப் போனாள்.

“அவளுக்கு மரணபயம் வந்துட்டுது.... என் பொண்ணுகளை நீங்கதான் பார்க்கணும்னு... சொன்னாள்.”

“நம்ம எல்லாம் செய்யலாங்க. ஆனால் உங்க ரெண்டு மருமகள்களும் யாருக்கும் கட்டுப்படமாட்டாங்களே.. தன்னிச்சையா... வளர்ந்துட்டாங்க...”

“அதுக்காக நாம... அப்படியே விட்டுடறதா? பாப்பாவுக்கு ரொம்ப  இளகிய மனசு... யாரும் அழுதாள் அவள் தாங்கமாட்டாள்.”

“அழுதுதானே உங்க அத்தான்... செங்கமலத்தோட வாழ்க்கையை பங்கு போட்டுக்கிட்டாரு.. அதெல்லாம் கொடுமைங்க... ஆனால் இப்பக் கொடுமையை அனுபவிக்கிறது மதினிங்க...”
“பாவமாத்தான் இருக்குது.. இன்னும் அவள் கஷ்டம் தீர்த்தபாடு இல்லை.”

“மதினிக்கும் பிடிவாதம் ஜாஸ்திங்க.”

“பாப்பாவோட பிடிவாதத்துக்கும் காரணம் உண்டு. இந்தத் தடவை. அவள் மனசுல இருந்த சோகத்தையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டாள்.”

“உங்க மருமகள்கள் எதுவும் பேசலையா?”

“அவங்க ரெண்டு பேரும் வெளியே போயிருந்தாங்க.”

“அதுதானே கேட்டேன்.  அவங்க முன்னால மதினி வாயைவே திறக்கமாட்டாங்க... அவங்களோட புடவை கட்டும், புடவைக்கு மேட்சா பிளவுஸ் செலக்ட் பண்ணிப் போடறதும்... அதுவே தனி அழகுங்க... உங்க அப்பா பண்ணின பெரிய தப்பு அவங்க படிப்புக்கு ஆறாவதோட முற்றுப்புள்ளி வைச்சதுதான்!”

“உண்மைதான் புஷ்பா... சங்கரிக்கு... லேசா புடவை கசங்கினாக் கூட பிடிக்காது... அவ்வளவு நேர்த்தியாயிருப்பாள். இப்பக்கூட ஆஸ்பத்திரியில படுக்கையிலிருந்தாலும், கஷ்டப்பட்டு ஆடைகள் மெருகுகுலையாமல் இருக்கணும்னு பார்த்துக்கிறாள்.”

“மனம் விட்டுப் பேசணும். அக்கம்பக்கத்துல பழகணும். அப்போதாங்க... மனசும் உடம்பும் நல்லாயிருக்கும்.”

“அத்தானோட நடவடிக்கையால யார்கிட்டேயும் நெருங்கிப் பழக அவள் தயங்கினாள். அவளை மாதிரியே அவள் பிள்ளைகளும் தங்களை மாத்திக்கிட்டாங்க. புஷ்பா... வெயில் காலத்துல ஆத்து மணல்ல நடந்தால் கொதிக்கும். அதே மணலைத் தோண்டினால் ஈரம் கசியும்... இன்னும் அழமாகத் தோண்டினால் நல்ல சுவையான தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். சங்கரி மேற்பார்வைக்கு சுடுமணல்தான். நெருங்கிப் பழகினால் ஊற்று மணல் தான்...”

“அது உண்மைதான்!”

மதினி பேசினால் கேட்டுக் கொண்டேயிருக்கலாங்க.”

நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் புஷ்பா.

“என்ன முடிவு?”

“ஆஸ்பத்தரியிலயிருந்து டிஸ்ஜார்ஜ் கனவுடன் கொஞ்சநாளைக்கு நம்ம கூட அவளை வச்சுக்கணும். நீலாவுக்கு நாமளே எடுத்துச் சொல்லி திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைக்கணும். அப்புறம் கோமதிக்கும் நாமளே ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்க முயற்சி செய்யணும்.”

“நீங்க சொல்றது எல்லாம் கேக்குறதுக்கு. நல்லாயிருக்குது... இதுக்கெல்லாம் நீலா ஒத்துக்கணுமே.”

“ஒத்துக்க வைப்போம். அடுத்த வாரம் நாம ரெண்டு பேரும் போய் பார்த்துட்டு வருவோம்.”

“சரிங்க...”

“அப்புறம் சொல்ல மறந்துட்டேனே... தேர் அலங்காரத்தோட கம்பீரமா நிற்குது... நாளைக்குத் தேரோட்டம்னு நினைக்கிறேன். தேர் நிலைக்கு வர்றதுக்கு ரெண்டு நாள் ஆகும். அதனால... நாம போனா... தேர் அழகையும் தரிசிக்கலாம்.

“ஒவ்வொரு வருஷமும் மதினி தேரோட்டம் பார்க்க கூப்பிடுவாங்க! நாமதான் போனதே இல்லே...”

“நாளைக்கே போயிருவோம்...”

“அப்படியெல்லாம் உடனே புறப்பட முடியாதுங்க. நாளை மறுநாள் புறப்படுவோம். மதினியும் எழுந்து உட்காரட்டும்.

“அதுவும் சரிதான்.”