ஆழித்தேர் அமைதியாக - புதுப் பெண்ணின் பொலிவோடு நின்று கொண்டிருந்தது. அதன் அழகையும் அலங்காரத்தையும் கூட்டம் வியந்து பாராட்டி பக்தியில் திளைத்து நின்றது.
தேரின் கம்பீரம் நாத்திகரையும் நிமிர்ந்து பார்க்கச் செய்தது.
எங்கு பார்த்தாலும் பெரியவர்களும், இளைஞர்களும், பெண்களுமாய் மக்கள் வெள்ளம். சிறுவர்கள் துள்ளிக் குதித்து விளையாடிய வண்ணம் தேரைச் சுற்றிச் சுற்ற¤ வந்தனர்.
“திருவாரூர் தேர் அழகு
திருக்கடையூர் தெரு அழகு” என்று பெரியவர்கள் சொல்லி மகிழ்வது உண்மைதான்.
என்ன கம்பீரம்! எவ்வளவு அழகு!
கண்களுக்குள் அடங்காத கவின்மிகு அழகு!
அரூரில் பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தாம்.
“ஆரூரில் பிறக்கமுக்தி அண்ணாமலையை நினைக்கமுக்தி” என்ற நம்பிக்கையும் இறைப்பற்றாளர்களிடம் உண்டு.
தேரின் உச்சியில் பறந்து கொண்டிருந்த கொடி காற்றின் உதவியால் விண்ணைத் தொட முயல்வது போல் பட்டது.
இந்தக் காட்சிகள் எதுவுமே முத்துசாமியை பாதித்ததாகத் தெரியவில்லை. அவர் மனம் மிகப்பெரிய துக்கத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது. துக்கம் வந்தபின் படும் மனவேதனை யைவிட துக்கம் வந்துவிடுமோ என்ற நினைப்பில் வரும் மனவேதனை மரணவேதனைதான்.
முத்துசாமியின் மனநிலை சமநிலையில் இல்லை.
கீழவீதியைக் கடந்து வலதுபக்கம் திரும்பினால் மானந்தியார் தெரு வந்துவிடும். பெயர்தான் மானந்தியார் தெரு, சிறிய சந்துதான் அது. ஒரு காலத்தில் அக்ரஹாரமாய் இருந்தது இன்று காட்சியாய் மாறிவிட்டது.
பழைய மனிதர்கள் எங்கு சென்றிருப்பார்கள்?
புதிய மனிதர்கள் எப்படி இங்கு வந்து சேர்ந்திருப்பார்கள்?
புதிர்தான். வாழ்க்கையே புதிர்தான். வாழ்விடங்களும் புதிர்தான்.
கீழவீதிக்குள் கஷ்டப்பட்டு நுழைந்துவிட்டார் முத்துசாமி.
கூட்டம். அப்படி ஒரு கூட்டம்.
சூரியனின் ஒளிக்கோடுகளே உள்ளே புக முடியாத அளவு மனிதத் தலைகள்... எங்கு நோக்கினும் மனிதத் தலைகள்.
கீழவீதி முத்துசாமிக்குப் புதியதன்று.
அரசியல்வாதிகளின் வேடந்தாங்கல் கீழவீதி.
அனைத்துக் கட்சிகளும் தங்களின் கொள்ளை விளக்கக் கூட்டங்களைக் கீழவீதியில் நடத்துவதுண்டு.
தினம் ஒரு கொடி.
தினம் ஒரு தலைவர்.
கொடிகள் மாறும், தலைவர்கள் மாறுவார்கள். கோவில்கள் மாறும்.
ஆனால் அதன் பின்னணியில் எப்போதுமே கம்பீரமாகத் தேர் மட்டும் நின்று கொண்டிருக்கும்.
ஆரூர் ஆழித்தேர் எத்தனை கட்சிகளைப் பார்த்திருக்கும்? எத்தனைக் கொடிகளைப் பார்த்திருக்கும்?
நினைத்துப் பார்த்தார் முத்துசாமி.
புதிய ஆட்சியாளர்களை உருவாக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வீதி கீழவீதி.
கீழவீதியைப் பற்றிய சிந்தனையுடன் அவ்வீதியைக் கடந்து மானந்தியார் தெருவில் நுழைந்துவிட்டார்.
முத்துசாமியின் வாழ்க்கை எப்பொழுதுமே சிக்கல்கள் நிறைந்ததாகத்தான் இருந்திருக்கிறது.
முள் பாதைதான். பெரும்பாலும் பழகிவிட்டது அவருக்கு.
முத்துசாமி எல்லாரிடமும் அன்பாகவும், நேசமாகவும் நடந்து கொள்வார். யாரிடமும் எதற்காகவும் எதிர்வழக்காடமாட்டார். ஆனாலும் நீதி, நேர்மை என்று வந்துவிட்டால் யாருக்காகவும், எதற்காகவும் வளைந்து கொடுக்கமாட்டார். அந்த ஒரு குணம் தான் பல சமயங்களில் அவரைத் தனிமரமாக நிற்கச் செய்திருக்கிறது.
கூட்டத்தில் இருப்பார். ஆனால் கூட்டத்தில் ஒருவராய் இருக்கமாட்டார்! காலுக்குச் செருப்பாய் கிடப்பார். அதற்கும் ஓர் வரையறை எல்லை வைத்திருப்பார். எல்லை மீறினால் உறவோ, நட்போ யார் என்று பார்க்கமாட்டார். சட்டென்று தொடர்பை முறித்துவிடுவார்.
முன்கோபி என்பார்கள்.
முசுடு என்று முகம் சுளிப்பார்கள்.
“ஆமா... இவர் ஒருத்தர்தான் இந்த உலகத்தை நட்டமாக நிறுத்தப் போகிறார்” என்று அவரை அறிந்தவர்கள் கேலி பேசித் திரிவதுண்டு.
அனுசரித்துப் போகத் தெரியாதவர்.
அதுவும் உண்மைதான்.
பதினைந்து ஆண்டுகளாகத் திருவாரூர் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை அவர்.
“உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்” என்பதைக் கேள்விப்பட்டு மனத்தை மாற்றிக் கொண்டு அவர் அவளைப் பார்க்க வருகிறார்.
அவள் ஓர் அபலை.
அப்படித்தான் சொல்ல வேண்டும்.
எப்பொழுதுமே இன்னல்களையும் ஏமாற்றங்களையும் வாழ்க்கையாக் கொண்டவள் அபலையாகத்தானே இருக்க முடியும்.
முகவரியைக் கண்டுபிடித்து வீட்டை அடைகிறார். வீடு பூட்டிக் கிடக்கிறது.
அது காலனி வீடு. வரிசையாக ஆறு வீடுகள். பக்கத்து வீட்டில் விசாரிக்கிறார்.
“தெரியவில்லை” என்று உதட்டைப் பிதுக்குகிறார். மூன்றாவது வீட்டில் கேட்கிறார்.
அவர்களும் அதே பதிலை அசிரத்தயாகக் கூறுகின்றன...
முத்துசாமி ஏமாற்றத்துடன் மீண்டும் கீழவீதி முனைக்கு வந்து சேர்ந்தார்.
யாரிடம் விசாரிக்கலாம்?
பதினைந்து ஆண்டு கால இடைவெளி.
திருவாரூரே அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருந்தது. ஊர் மாறுவது காலத்தின் கட்டாயம் தான். அது போலத்தானே மனிதர்களும்.
மண் மாறுவது போலத்தானே மனிதர்களும் மாறுவார்கள்.
மண்ணின் தன்மைக்கு ஏற்றாற்போல் மனித மனங்களிலும் மாற்றம் நிகழ்வது தவிர்க்க முடியாததுதான்.
நட்பு பகையாகியிருக்கலாம்; பகை நட்பாகியிருக்கலாம்.
முத்துசாமி மனவேதனையுடன் தொடர்பற்ற சிந்தனைகளில் சிக்கித் தவித்தார்.
இன்னம் இரண்டொரு நாட்களில் தேரோட்டம் நடைபெறவுள்ளதால் மக்கள் வெள்ளம் அலைமோதிக் கொண்டிருந்தது. துணைத் தேர்களும் தயார் நிலையில் நின்றிருந்தன.
ஆழித்தேர் தோரணங்களாலும் வண்ணத் திரைச் சீலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என கொத்துக் கொத்தாய் மனிதர்கள். அத்தனை பேர் முகங்களிலும் ஆனந்தக்களிப்பு: பரவச நிலை.
முத்துசாமி மட்டும் இறுகிய முகத்துடன், அந்தக் கூட்டத்தினரிடையே என்ன செய்வது? யாரை விசாரித்தால் சரியான தகவல்கள் கிடைக்கும் என்ற குழப்பத்துடனேயே நின்றிருந்தார்.
சட்டென அவர் மனத்தில் ஓடம்போக்கி ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ள சீனிவாசன் காபி கிளப் நினைவுக்கு வந்தது.
கீழவீதி விட்டு, திருவாரூர் கடைத்தெரு நோக்கி நடக்கத் தொடங்கினார்.