கமலாம்பிகா பாலிகிளினிக் இரண்டு மாடிக் கட்டடம். மொத்தம் முப்பத்தாறு அறைகள். அதில் இரண்டு குளிர்சாதன அறைகள். எல்லா அறைகளிலும் நோயாளிகள் ‘நீக்கமற’ நிறைந்திருந்தனர்.
மருத்துவ வளாகத்துக்குள்ளயே கேண்டீன் வசதி, மெடிக்கல்ஷாப் அமைந்திருந்தது.
இருபத்தி நான்கு மணிநேரமும் இயங்கும் உயிர்த் துடிப்புள்ள பாலிகிளினிக் அது.
வெளிர்நீலநிற உடையில் செவிலியர்கள் குறுக்கும் நெடுக்குமாய் பரபரப்பாய் நடந்து கொண்டிந்தார்கள்.
காக்கிச் சட்டை அணிந்த துப்புரவுப் பணியாளர்கள் மந்தகதியில் பளிங்குத் தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.
அறை எண் 21.
தனி அறை. சிறப்பு அறை அது. ‘பாத்ரூம்’ ‘அட்டாச்டு’ கட்டிலில் கண்கள் செருகிய நிலையில் கிடந்தாள் சங்கரி. அவள் அருகே கோமதியும், நீலாவும் யாரையோ எதிர்பார்த்துக் காத்து நின்றார்கள்.
“மேடம்...”
“வாங்க கோபால்...”
நீலாதான் வரவேற்றது. அவள் பெரும்பாலும் சம வயதுடைய நண்பர்களைப் பெயர் சொல்லித்தான் அழைப்பாள்.
மூத்தவள் கோமதி கைகூப்பினாள்.
கோமதி அதிகம் வாய்திறக்கமாட்டாள்.
‘மண்ணாந்தை’ என்று சங்கரி அவளைத் திட்டுவதுண்டு.
“சாரி... கொஞ்சம் லேட்டாயிட்டுது”
“அப்படியெல்லாம் இல்லே கோபால்...”
சொல்லிக் கொண்டே அவன் நீட்டிய பணத்தைப் பெற்றுக் கொண்டாள் நீலா.
“அதுல இருபதாயிரம் இருக்குது. போதுமா?”
கோமதி பிளாஸ்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
“நில்லுங்க... எங்கே போறீங்க...?”
கோமதி தயங்கி நின்றாள்.
“அக்கா... நீ... நீ போ... அரை ஜீனி போட்டு காப்பி வாங்கிட்டு வா.”
கோமதி ஓசையின்றி கதவைத் திறந்து சென்றாள்.
“பணம் போதுமா? டாக்டர் என்ன சொன்னார்? கவலையுடன் விசாரித்தான் கோபால்.
“உங்களைத் தொந்தரவு செய்யக்கூடாதுன்னு தான் நினைச்சேன். காலேஜ்ல பி.எஃப் லோன் அப்ளை பண்ணியிருக்கிறேன். அது அவசரத்துக்கு ஆகாது. அந்தப் பணம் கைக்கு வர்ற வரைக்கும் உங்ககிட்டதான் வருவேன். நீலா தன்னிலை விளக்கம் அளித்தாள்.
“நீலா மேடம், நீங்க என்னை இன்னும் உங்க குடும்பத்துல ஒருத்தராகவே நினைக்கலே... பணத்துக்காக லோன் அது இதுன்னு அலைய வேண்டாம். எப்ப என்ன உதவி வேணும்னாலும் தயங்காம... என்னக் கூப்பிடுங்க. நான் உடனே வந்து நிற்பேன்.”
கோபால் புறப்படத் தயாரானான்.
“காபி... வாங்கப் போயிருக்கிறாள் கோமதி... உட்காருங்க.”
சங்கரி மெதுவாக கண் விழித்தாள். கோபாலைப் பார்த்தாள். அவளால் பேச முடியவில்லை. கைகளைக் கஷ்டப்பட்டு குவித்து வணக்கம் தெரிவித்தாள்.
கோமதி காபியுடன் உள்ளே வந்தாள்.
“ஏய்... ஏண்டி இவ்வளவு நேரம். ஒரு இடத்துக்குப் போனால் சீக்கிரம் வரத்தெரியாதா! யாராவது பேசக் கிடைச்சுட்டா... அப்படியே நின்னுடுவே...”
நீலா பொரிந்து தள்ளினாள்.
கோமதி அமைதியாய் பிளாஸ்கை திறந்து காபியை தம்பளரில் ஊற்றப் போனாள்.
“ஏய்... ஏய்... என்ன செய்யறே. முதல்ல அந்த தம்பளரைக் கழுவிட்டு வா...”
“நீலா... அது கழுவி வைச்ச டம்பளர்தான். சுத்தமாகத்தான் இருக்கும்.”
“அதெல்லாம் எனக்குத் தெரியும். இன்னொரு தடவை நல்லா... கழுவி சுத்தம் பணிணிட்டுவா...”
“நீலா மேடம்... தம்பளர் நல்லாத்தானே இருக்குது.”
சும்மாயிருங்க கோபால். ஆஸ்பத்திரியில... கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் இருக்கும். ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா... புழங்கற பாத்திரங்களை சுத்தம் பண்றது தப்பே இல்லே...”
கோமதி டம்பளரைக் கழுவித் துடைத்து காபியை ஊற்றிக் கொடுத்தாள்.
“அம்மாவுக்கு என்ன கொடுக்கப் போறீங்க?” காபியைக் குடித்து கொண்டே கேட்டான் கோபால்.
“இடியாப்பம் குடுக்கச் சொல்லியிருக்காரு டாக்டர். கோமதி இப்ப வீட்டுக்குப் போயி... செய்து எடுத்துக்கிட்டு வருவாள்.”
“வேண்டாம். நீங்க ரெண்டு பேரும் அம்மா பக்கத்துலயிருங்க. நான் எங்க வீட்ல தயார் பண்ணி எடுத்துக்கிட்டு வர்றேன்.
“கோபால்... நீலா தயங்கினாள்.
“பயப்படாதீங்க... மேடம். ஹைஜீனிக்கா... செஞ்சு எடுத்துட்டு வர்றேன். சரியா?” நீலா சிரித்தாள்.
கோமதி அமைதியாய் நின்றாள்.
கோபால் புறப்பட்டு விட்டார். சங்கரி மீண்டும் கண்மூடித் தூக்கத்தில் ஆழ்ந்தாள்.