சர்வதேச தடகளப் போட்டிகளில் சாதனைகள் படைத்த தமிழகப் பெண் காவலர்!சாதனை

விளையாட்டில் தொடங்கி விமான சாகசம் வரை ஆண்களுக்கு நிகராக இந்தியப் பெண்கள் சாதனைகளைப் படைத்துவருகின்றனர். அந்தவகையில் சென்னை, கீழ்ப்பாக்கம்  ஜி4 ஐ.எம்.எச். காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்துவரும் தடகள வீராங்கனை பிரமிளா சர்வதேச மற்றும் ஆசிய அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

இவர் உள்நாட்டில் நடக்கும் மாநில மற்றும் தேசியப் போட்டி களிலும் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். சர்வதேச அரங்கில் தமிழகக் காவல்துறைக்குப் பெருமை சேர்த்துவரும் பிரமிளாவிடம் பேசியபோது  பகிர்ந்துகொண்ட தகவல்களை இனி பார்ப்போம்.

‘‘சென்னை ஷெனாய்நகர்தான் எனக்குச் சொந்த ஊர். எனக்கு மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு தம்பி என எளிய நடுத்தரக் குடும்பம் எங்களுடையது. பால் வியாபாரம் செய்துதான் என் அப்பா எங்களைப் படிக்க வைத்தார். சிறுவயதிலிருந்தே எனக்கு விளையாட்டின் மீது தீராத ஆர்வம் இருந்தது. ஆகையால் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஸ்போர்ட்ஸ் கிளப்பில் சேர்ந்து தடகளத்தில் தொழில்முறைப் பயிற்சி பெற்றேன். உயரம் தாண்டுதல், 100மீ, 200மீ ஒட்டப்பந்தயங்களில் நான் சிறப்பாகச் செயல்பட்டதால் பள்ளி அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றேன்.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் சென்னை எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. எக்கனாமிக்ஸ் படித்து பட்டம் பெற்றேன். அதே சமயம் தொடர்ந்து பயிற்சியைக் கைவிடாமல் மேற்கொண்டேன். கல்லூரியில் படித்தபோதும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளிலும் கலந்துகொண்டு கோப்பைகளை வென்றேன்’’ எனும் பிரமிளா தமிழகக் காவல்துறையில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்த விதத்தைக் கூறினார்.

‘‘எங்களுடைய குடும்பச் சூழல் நடுத்தரமானது என்பதால் நான் வேலைக்கு செல்லவேண்டியது அவசியமாகப்பட்டது. என்னோடு பிறந்த நான்கு பேர் மற்றும் பெற்றோரையும் சேர்த்து எங்கள் வீட்டில் நாங்கள் மொத்தம் ஏழு பேர். எங்கள் ஐந்து பேரையும் வளர்த்து ஆளாக்குவதே அம்மா, அப்பாவுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. என்ன செய்தால் குடும்பக் கஷ்டத்தைச் சரிசெய்ய முடியும் என யோசித்தபோதுதான் எனக்குத் தெரிந்த விளையாட்டைத் தகுதியாக வைத்துக்கொண்டு போலீஸ் வேலையில் சேர முடிவுசெய்தேன். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் தமிழகக் காவல்துறையில் சேர விண்ணப்பித்தேன். நான் நினைத்தபடியே எனக்குக் காவல் துறையில் வேலை கிடைத்தது. 2005ம் ஆண்டு எனக்குப் பணி நியமனம் கிடைத்தது.

எனக்கு வேலை கிடைத்தபோதும் ஒருபுறம் காவல்துறையில் பணிபுரிந்துகொண்டே மறுபுறம் தடகளப் பயிற்சியும் மேற்கொண்டுவந்தேன். அதற்காகவே மதியம் மற்றும் இரவு நேரப் பணிகளைத் தேர்ந்தெடுத்தேன். காலையிலும் மாலையிலும் பயிற்சிகளை மேற்கொண்டேன். என்னுடைய உயர் அதிகாரிகளும் எனக்கு ஊக்கமளித்தனர். அதன் விளைவாகத் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தொடங்கினேன். 2009ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பெண்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 X 100 ரிலே பிரிவில் தங்கம் வென்றேன். தங்கப்பதக்கம் தந்த உந்துதலால் தொடர்ந்து போட்டிகளில் கலந்துகொண்டேன்.

திருச்சியில் 2011ம் ஆண்டு நடைபெற்ற 84th Open Senior State Athletic Championship-ல் 200மீ மற்றும் 400X100 ரிலே பிரிவில் வெண்கலப் பதக்கமும், 2012ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற Open State Athletic Championship-ல் 100மீ மற்றும் 4X100 பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 2013ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 86th Open Senior Athletic Championship-ல் 200மீ பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 400X100 ரிலே பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றேன்.

சென்னையில் 2016ம் ஆண்டு நடைபெற்ற Open State Level CM Trophy போட்டியில் 200 மீட்டரில் வெண்கலமும், 2018ம் ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற 37th Tamil Nadu State Master Athletic Championship-ல் 100மீ, 200மீ போட்டிகள் மற்றும் உயரம் தாண்டுதலில் தங்கமும், 2019 குண்டூரில் நடைபெற்ற 40th National Master Athletic Championship-ல் 100மீ, 200மீ போட்டிகள் மற்றும் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றேன். 2019ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற
1st Women National Athletic Championship-ல் 100மீ, 200மீ, உயரம் தாண்டுதல் மற்றும் 4X100மீ ரிலே பிரிவுகளில் தங்கம் வென்றேன்’’ என்று தன் சாதனைப் பட்டியலோடு சர்வதேச மற்றும் ஆசிய போட்டிகளில் கலந்துகொண்டு பெற்ற வெற்றிகளையும் மகிழ்ச்சியோடு
தெரிவித்தார்.  

‘‘காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையிலுள்ள விளையாட்டு வீரர்களுக்காக சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை உலக நாடுகளால் நடத்தப்படும். அதன்படி கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவில் நடைபெற்ற போட்டிதான் நான் முதன்முறை கலந்துகொண்ட சர்வதேச போட்டி. சுமார் 15 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் தமிழகத்தின் சார்பாக ஏழு பேர் உட்பட இந்தியாவிலிருந்து மொத்தம் 120 பேர் கலந்துகொண்டனர்.

தடகளப் பிரிவில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற அப்போட்டியில் உயரம் தாண்டுதல் 100மீ, 200மீ, 400மீ, 4X400 ரிலே மற்றும் 4X100 ரிலே ஆகிய ஐந்து பிரிவுகளில் நான் கலந்துகொண்டேன். உயரம் தாண்டுதலில் தங்கமும் மற்றும் 100மீட்டர் தூரத்தை 12.79 விநாடிகளில் கடந்து ரெக்கார்ட் பிரேக் செய்து தங்கம் வென்றேன். மற்ற நான்கு பிரிவுகளில் வெள்ளிப் பதக்கமும் வென்றேன். அடுத்ததாக அதே ஆண்டு டிசம்பரில் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான 21st Asian Masters Athletic Championship போட்டியில் 100மீ, 200மீ ஓட்டப்போட்டியில் தங்கமும், உயரம் தாண்டுதலில் ரெக்கார்ட் பிரேக் செய்து தங்கமும் வென்றேன்’’ என்று பெருமிதத்தோடு கூறுகிறார் பிரமிளா.

மேலும் தொடர்ந்த அவர் ‘‘தொழில்முறைத் தடகள வீராங்கனையாகத் தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகள் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறேன். இடைப்பட்ட ஆண்டுகளில் மூட்டு எலும்புப் பிரச்னை வந்து தடகளத்தில் தொடர்ந்து என்னால் கவனம் செலுத்த இயலாமல் போனது. அதன் காரணமாக என்னால் சிறப்பாக இயங்க முடியவில்லை. ஆனாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு சர்வதேசப் போட்டியில் தங்கம் வெல்ல வைத்தது’’ எனக் கூறும் பிரமிளா தன் எதிர்கால லட்சியம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘இந்த ஆண்டு ஜூலையில் கனடாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச அளவிலான ஓப்பன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தேர்வாகியிருக்கிறேன். அதில் ரெக்கார்ட் பிரேக் செய்து தங்கம் வெல்லவேண்டும். அடுத்ததாக 2021ம் ஆண்டு நெதர்லாந்தில் நடக்கவிருக்கும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையிலுள்ள விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேசப் போட்டியில் தங்கம் வெல்வதே என்னுடைய தற்போதைய இலக்கு. அதற்கான தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறேன்’’ என இலக்கை தீர்மானித்து தடைகளைத் தாண்டி பதக்கங்களை வென்றுவரும் தலைமைக் காவலர் பிரமிளா மேலும் வெற்றிகளைப் பெற நாமும் வாழ்த்துவோம்.

- வெங்கட் குருசாமி