உதவித்தொகையுடன் படிக்கலாம் அடிப்படை அறிவியல் ஆய்வுப் படிப்புகள்!



வழிகாட்டல்

இந்தியாவில் அறிவியல் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 1974ம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஹோமிபாபா சென்டர் ஃபார் சயின்ஸ் எஜுகேஷன்  டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் கல்விநிறுவனம். இந்திய அரசின் அணு ஆற்றல் துறையுடன் இணைந்து செயல்பட்டுவரும் இந்நிறுவனம், அடிப்படை அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கிவருகிறது. இந்நிறுவனத்தில் அறிவியல் கல்வி சார்ந்த பிஎச்.டி ஆய்வுப் படிப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆய்வுப் பிரிவுகள்

தொடக்கப் பள்ளி முதல் இளங்கலை வரை அறிவியல் மற்றும் கணிதத்தைக் கற்பித்தல் மற்றும் கற்றல், புதுமையான பாடத்திட்டங்கள் மற்றும் மதிப்பீட்டு முறைகள், பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவர்களுக்கு  மேம்படுத்தப்பட்ட அறிவியல் மற்றும் கணித சிந்தனைகள் மூலம்  பிரச்னைகளைக் கையாளுதல், நவீன தொழில்நுட்பத்தில் பாடத்திடங்கள் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிப் பிரிவுகளின்கீழ் முனைவர் படிப்புகள் மேற்கொள்ளப்படும்.

கல்வித் தகுதி

இப்பாடப் பிரிவுகளில் சேர விருப்பமுள்ளவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் ஏதாவது ஒரு துறையில் M.Sc, M.E , M.Tech படித்திருக்க வேண்டும். அல்லது Behavioural Science / Psychology / Linguistics / Sociology / Economics / Anthropology துறைகளில் முதுகலைப் படித்திருக்க வேண்டும். Science / Social Science / Humanities போன்ற பிரிவுகளில் இளநிலை முடித்து M.Ed படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆரவமுள்ளவராக இருத்தல் வேண்டும். அறிவியல் மற்றும் கணிதத் துறையில் பணி  அனுபவம்  கொண்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

இந்நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்குக் கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.35,000 வழங்கப்படும். அரசு விதிகளின்படி கூடுதல் நிதி சலுகைகளும் வழங்கப்படும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுள்ளவர்கள் ரூ.750ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தி www.hbcse.tifr.res.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்க விரும்புவோர் ‘Graduate School Admissions-2020, Homi Bhabha Centre for Science Education, TIFR, V >N >Purav Marg, Mankhurd, Mumbai-400088’ என்ற முகவரிக்கு கடிதம் எழுதி விண்ணப்பம் பெற்று தபால் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். பெண்கள் ரூ.250-ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்க கடைசி நாள் 31.4.2020.
மேலும் முழு விவரங்கள் பெற www.hbcse.tifr.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- மணிகண்டன்