எண்ணங்களை பிரதிபலிப்பவை கண்கள்!



உடல்மொழி-29

நடை உடை பாவனை!

நடைமொழி


Look at you, standing there in your iron- gray dress, feeling pious and self- righteous while you starve small children!
- V.C. Andrews

ஒவ்வொருவரின் உடல்மொழியின் வெளிப்பாட்டிலும் மிக முக்கிய இடம்பிடிக்கும் உறுப்பு கண்கள். காரணம், மனிதனின் உணர்ச்சிப் பாவனைகள் உடல்மொழியாக வெளிப்படத் தொடங்கும்போது அதை முதலில் வெளிப்படுத்தும் உறுப்பு கண்கள்தான்.  மனித உணர்ச்சிப் பாவனைகளைக் கண்கள் வெளிப்படுத்தும் அளவுக்கு மற்ற உறுப்புகள் வெளிப்படுத்துவதில்லை. அந்தவகையில் உடல்மொழியோடு கண்களுக்கு மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது.

ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களையும், மனோபாவங்களையும் வெளிப்படுத்த கண்ஜாடைகள் முக்கிய காரணியாக இருக்கின்றன. மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, முதலில் அவர்களின் கண்கள்தான் நேருக்கு நேராகச் சந்திக்கின்றன. அந்தப் பார்வைப் பரிமாற்றத்தின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட செயல்பாடு குறித்து ஒரு தீர்மானத்திற்கு வருகிறார்கள்.

உடல் பற்றிய வர்ணனையை கவனித்தால் கூட உலகம் முழுக்க ‘அந்தக் கண்களின் பார்வை…. கத்தியைப் போல் கூர்மையாக, ஈட்டியைப் போல் ஊடுருவுவதாக, நெருப்பு போல் அக்னிப் பிழம்பாக, பனி போல் குளிர்ச்சியாக, பால் போல் கருணையாக இருக்கிறது என்றே வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்குக் கண்கள் உணர்ச்சிப் பாவனைகளை வெளிப்படுத்தக்கூடியவை.

கண் என்று குறிப்பிடுவது கருவிழிகளைத்தான். மனிதர்களின் எல்லா உடல் உறுப்புகளையும் விட கண்களே அதிகமாகவும், துல்லியமாகவும் மனித உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.  காரணம், கண்கள்தான் மனித உடலின் மையம். அதே நேரம் கண்களின் கண்மணிகள் மனிதர்களின் கட்டுப்பாட்டில் ஒருபோதும் இருப்பதில்லை.எதையும் கண்கொண்டு பார்க்கிறோம் என்பது கண்ணின் மணியான கண்மணியைக்கொண்டே பார்க்கிறோம். ஒரு குறிப்பிட்ட வெளிச்சத்தில் மனிதர்களின் எண்ணங்கள் நேர்மறையிலிருந்து எதிர்மறையாகவும், எதிர்மறையிலிருந்து நேர்மறையாகவும் மாறும் போது, உணர்ச்சி நிலைக்கு ஏற்றவாறு கண்மணிகள் விரிந்து சுருங்கியிருக்கும். இது இயல்பாக, இயற்கையாக நிகழக்கூடியது.

ஒரு சந்தர்ப்பத்தில் மனம் பரவச நிலையை அடைந்தால் அப்போது கண்மணி நன்கு விரியும். அதுவே கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகளுக்கு ஆட்படும்போது கண்கள் சுருங்கிவிடும். இதைத்தான் பெரியவர்கள் ‘கோபம் கண்ணை மறைக்கும்’ என்று குறிப்பிட்டார்கள். எதிர்மறையான உணர்ச்சி
களின்போது கண்கள் சுருங்குவதை ‘பாம்பு விழிகள் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஒரு மனிதன் எந்த அளவுக்கு பரவச நிலையில் மிதக்கிறானோ அந்த அளவுக்குக் கண்மணிகள் அதிகமாக விரிகின்றன என்பதை எகார்ட் ஹெஸ் என்ற சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்டறிந்தார். பொதுவாக ஒருவனது உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய பொருளைப் பார்த்தால் கண்கள் விரிகின்றன. குறிப்பாக மனிதர்களுக்கு விருப்பமானவற்றைப் பார்த்தால் அவ்வாறு நிகழும். சிலருக்கு சினிமா நட்சத்திரங்கள், திரைப்படங்கள், சிலருக்குப் பணம், சிலருக்கு ருசியான உணவுப் பதார்த்தம் என்று ஆளுக்கு ஆள் விருப்பமான விஷயங்கள் மாறுபடும். எகார்ட் ஹெஸ்ஸின் ஆய்வு வர்த்தக உலகிற்கு ஒரு திறவுகோலாக இருந்தது.

உடல்மொழியின் மிக முக்கிய பயன்பாட்டுத் துறையான விளம்பரத் துறையில் இது புகுந்தது. இதன் காரணமாகத்தான் இன்றளவும் விளம்பரங்
களில் கவர்ச்சிகரமான பெண்களைப் பயன்படுத்துகிறார்கள். விளம்பரங்களில் கவர்ச்சிகரமான பெண்கள் தோன்றும்போது, கவர்ச்சிகரமான வடிவம் பார்ப்போரைச் சுண்டி இழுக்கிறது, அப்போது கண்கள் விரிய,  காட்டப்படும் காட்சி பெரிய அளவில் உள்ளே வருகிறது. விளம்பரம் மனதில் பதிய, அது விற்பனையை அதிகரிக்கச் செய்கிறது.

பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள், சிகையலங்காரப் பொருட்கள், உடைகள் போன்ற விளம்பரங்களில் மாடல்களின் முகத்தை மிக அருகில் காட்டும்போது பாருங்கள் அவர்கள் கண்களின் கருவிழிகள் ஊடுருவி ஈர்ப்பது போல் இருக்கும். அதைப் பார்ப்பவருக்கும் கண்கள் விரிந்து உள்வாங்கிக்கொள்ளும்.

பெண்களுக்கான உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்) தயாரிக்கும் ரெவ்லான் கம்பெனி தனது Print Advertisement ஒன்றில் மாடல் பெண்ணின் கண்கள் பெரிதாக இருப்பது போல் படத்தை விரிவாக்கி வெளியிட, அதன் விற்பனை 45% அதிகரித்தது என்பார்கள்.  அந்த அளவுக்கு கண்களுக்கு அடுத்தவரை ஈர்க்கும் சக்தி இருக்கிறது.

உடல்மொழியாக வெளிப்படும் ஆண் பெண் கவர்ச்சியில் கண்கள்தான் முக்கியத் தகவல்களைப் பரிமாறுகின்றன. கண்களுக்கு அலங்காரங்களும், ஒப்பனைகளும் செய்வதுகூட இதற்காகத்தான்.ஒரு சூழலில் ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பார்த்து கவரப்பட்டால், அவனது கண்மணிகள் உடனடியாக விரிந்திடும். இது அந்த ஆணிற்குத் தெரிவதற்கு முன் அவனது உடல்மொழி மூலம் அந்தப் பெண் அறிந்துகொள்கிறாள். இதனால்தான் குறைவான வெளிச்சமுள்ள, இருள் சூழ்ந்த தனித்த இடங்களில்கூட காதலர்களின் சந்திப்புகள் ரம்யமானதாக இருக்கிறது.

மனிதர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரின் கண்ணின் மணி விரிவடைவதைக் கண்டு பரவசமடையவே செய்கிறார்கள். காமத்தைத் தூண்டும் படங்களைப் பார்க்கும் ஆண்களின் கண்மணிகள் மூன்று மடங்கு விரிவிடைகிறது. அதுவே பெண்களுக்கு, தாயும் சேயுமாக இருக்கும் படங்களைப் பார்க்கும்போது கண்மணிகள் விரிவடைகின்றன.

பிறந்தது முதல் ஐந்து வயதுவரை குழந்தைகளுக்குக் கண்கள் அகலமாக, பெரிதாகத் திறந்திருப்பதைப் பார்த்திருக்கலாம். குழந்தைகள் எதையும் எப்போதும் ஆச்சர்யத்துடன் பார்க்கக்கூடியவர்கள். வயது ஆக ஆகத்தான் கண்கள் சுருங்கிப்போகின்றன. பெரியவர்கள் தங்களைக் கவனிக்க வேண்டும் என்ற Pocessiveness  நிறைந்த உணர்ச்சியின் காரணமாக குழந்தைகளின் கண்கள் விரிந்த நிலையிலேயே இருக்கும்.

கண்கள் பற்றியும் கண்மணிகள் பற்றியும் தெரிந்ததாலோ என்னவோ அவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கான பொம்மையைத் தயாரிப்பவர்கள் பொம்மைகளின் கண்கள் பெரிதாக இருப்பது போலவே படைக்கிறார்கள். அதேபோல குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் டெடிபியரின் கண்கள் பெரிதாக இருப்பதைப் பார்க்கும்போது, கண்களை விரித்து ஒரு பார்வை பார்த்திடுங்கள் உண்மை புரியும்.

உடை வழி - திருப்பூர் பனியன்

உலகம் முழுக்க பனியன் என்ற பெயர் சொல்லப்பட்டவுடன் அடுத்து நினைவுக்கு வருவது திருப்பூர்தான். Baniyan City, பின்னலாடை நகரம் என்று புகழப்படும் திருப்பூரில் தயாரிக்கப்படும் பனியன் உலகப் பிரசித்தம்.  திருப்பூர் நகரில் பனியன் தயாரிப்பு தொடங்க சினிமா ஒரு முக்கியக் காரணம். திருப்பூருக்கு பனியன் வந்த வரலாறு சுவாரஸ்யமானது.

1929-ல் கல்கத்தாவில் (கொல்கத்தா) Melody of Love என்ற பேசும் படம் திரையிடப்பட்டது. அது மக்களிடையே பெரிய பிரபலமடைந்தது. அந்தப் பேசும்பட இயந்திரத்தைத் திருப்பூருக்கு வாங்கி வர கல்கத்தா வந்திருந்தார் குலாம் காதர் சாகிப். அப்போது அங்கு சிறிய இயந்திரங்களைக்கொண்டு மேலாடை தயாரிக்கப்படுவதையும், அந்தத் துணிக்கு பனியன் என்று பெயரிடப்பட்டிருந்ததையும் பார்த்து வியந்துபோனார். பனியன் ஆடைகள் எடை குறைவாகவும், லேசாகவும் இருந்தன. அதுவரை தென்னிந்தியாவில் ‘அங்கராக்’கும் (ஜிப்பா போலவும் சட்டை போலவும் இருக்கும்) ‘கோவண‘முமே ஆண்களின் பிரத்தியேக ஆடைகளாக இருந்தன. மில் துணியால் தயாரிக்கப்பட்ட சட்டை வகை மேலாடையைப் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே அணிந்திருந்தார்கள்.

 பனியன் தயாரிக்கும் மிஷினைப் பார்த்ததும் சிறிதும் யோசிக்காமல் வாங்கினார் குலாம் காதர் சாகிப். தன் சகோதரர் சத்தார் சாகிப்புடன் சேர்ந்து 1935-ல் திருப்பூரில் முதன் முதலாக ‘The Baby Knitting Industries’ என்ற பனியன் தொழிற்சாலையாக உருவாக்கினார்கள்.

 பனியன் இயந்திரத்திற்கு அவர்கள் ‘தலைசுத்தி இயந்திரம்‘ என்று முதலில் பெயர் வைத்தனர். தூய வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்பட்ட பனியன்கள் நிட்டிங் முறையில் தயாரிக்கப்பட்டதால் அது தலைவழியே அணிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. Front opening இல்லாததால், அது பொதுமக்களுக்குச் சற்று அசௌகர்யமாகவும், அந்நியமாகவும் இருந்ததால் மக்கள் அதை வாங்கத் தயங்கினார்கள்.

‘பனியன் வாங்கினால் ஒரு பீடிக்கட்டும் தீப்பெட்டியும் இலவசம்’ என்ற ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்பைத் தர, வியாபாரம் சூடுபிடித்தது. அதன் பிறகு சாயப் பவுடர்களின் வரவை வைத்து பனியன்களைப் பல நிறங்களிலும் தயாரித்தார்கள். வண்ணங்களை ரசித்த மக்கள் அதற்குப் பெரிய ஆதரவைத் தந்தார்கள்.

அன்றைய தேதியில் ஒருங்கிணைந்த இந்தியாவில் கராச்சி நகரில் பனியனுக்குப் பெரிய வரவேற்பு இருக்க, அதை அறிந்து கராச்சி நகரில் திருப்பூர் பனியன்வாலா என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அது இன்றுவரை கராச்சி நகரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன்பின் 1955-ல் திருப்பூர் பனியன் முதல் முறையாக இலங்கைக்கு பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. அது இன்று உலகம் முழுக்க பரந்துபட்ட நிலையில் ஏற்றுமதி செய்யப்பட்டு, மக்கள் தலை வழியே நுழைந்துகொண்டிருக்கிறது.

- தொடரும்