அன்று: பியூட்டி பார்லர் ஊழியர் இன்று: சாந்தி’ஸ் புரூச்சர்ஸ் நிறுவன உரிமையாளர்



வெற்றிக்கதை

பிறந்தது முதலே வசதி வாய்ப்புகளற்ற சூழலில் உள்ளவர்களைத் தொழில்முனைவோர் ஆக்குவது அவர்களின் பயிற்சியும் விடாமுயற்சியும்தான். ஒரு தொழிலைத் தொடங்க தீர்க்கமாகத் திட்டமிடுங்கள். திட்டமிட்டுச் செயலாற்றுவதே வெற்றியின் அடிப்படை. அப்படித்தான் பல வெற்றியாளர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

‘‘வெற்றி பெற வேண்டுமென்றால் முடிந்த இடத்திலெல்லாம் முயற்சி செய்யுங்கள். பல வகைகளிலும் சிந்தித்துப் பாருங்கள். ஆராய்ந்து தெளிந்து, பின் ஒரு தொழில் முயற்சியில் இறங்குங்கள். ‘இது சரியான நேரம் அல்ல’ என்றால், ஆறப்போடுங்கள். ‘இப்போதே செய்வது நல்லது’ என்றால், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுங்கள்’’ என்னும் அறிவார்ந்த வார்த்தைகளுடன் பேச ஆரம்பித்தார் சென்னை அம்பத்தூரில் சாந்தி’ஸ் புரூச்சர்ஸ் (SHANTHI’S BROOCHERS) என்ற பெயரில் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் மேரி அன் சாந்தி. அவரிடம் பேசியபோது தன் தொழிலில் கடந்துவந்த அனுபவங்களை விவரித்தார்.

‘சென்னை அம்பத்தூரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தேன். பத்தாம் வகுப்பு படித்து முடித்த பின்னர் அமைச்சகப் பணி சார்ந்த செகரட்டரி கோர்ஸான டைப்ரைட்டிங் மற்றும் சில படிப்புகளைப் படித்திருந்தாலும், தொழில் படிப்பான பியூட்டிஷன் பயிற்சியிலும் சேர்ந்து படித்தேன். படித்து முடித்ததும், அண்ணா நகரில் அப்போதுதான் தொடங்கியிருந்த ஒரு பியூட்டி பார்லரில் பத்து பணியாளர்களை மேற்பார்வை செய்யும் வேலை கிடைத்தது. பியூட்டி பார்லர் என்பதே அப்போதுதான் அறிமுகமான காலம், அதுவும் அண்ணா நகர் என்றால் சொல்லவேண்டுமா? பலவித மேல்தட்டு மக்களும் பியூட்டி பார்லர் திறந்திருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டு குவிந்தனர். அதனால், தொழில்மீது எனக்கு நல்ல பிடிப்பு ஏற்பட்டது.

பியூட்டி பார்லருக்கு வருபவர்கள் அனைவருமே இயற்கையிலேயே பெண்களிடம் ஊறியிருக்கும் அழகுணர்ச்சியுடன் எனக்கு அப்படி வேண்டும் இப்படி வேண்டும் என்று பின்னல் போடவும், கூந்தல் முடியவும், கொண்டை இடவும் அன்புடன் தொந்தரவு செய்வார்கள். அப்போதுதான், மெதுவாக எனக்குத் தொழில் பற்றி புரிய ஆரம்பித்தது. அதனால், நான்கு ஆண்டுகளில் சிகை அலங்காரங்களைச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து கடையில் இருப்பவர்களுக்கு புதுப்புது யோசனைகளைக் கூறிவந்தேன்.’’ என்று கூறும் சாந்தி தொழில் தொடங்கும் எண்ணம் தோன்றியதையும் ஆரம்ப கால அனுபவங்களையும் நினைவுகூர்ந்தார்.

‘‘பொதுவாக நாம் நன்றாக வேலை பார்த்தால் எந்த பிரச்னையும் இல்லாமல் அந்த வேலையிலேயே இருந்துவிடுவோம். எத்தனை நாட்களுக்குத்தான் ஒரே இடத்தில் வேலை பார்ப்பது? எனக்கு ஒரு தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால், நான் பிறந்து வளர்ந்த அம்பத்தூரில் பத்துக்குப் பத்து சதுர அடியில் ஒரு சிறிய கடையை என் உழைப்புக்குக் கிடைத்த வருமானத்தில் லீசுக்கு எடுத்தேன். அந்தக் கடை நகரைவிட்டு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்ததால் பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் வரவில்லை.

ஆனால், இதுதான் எனக்குச் சரியான தீனி போட்டது. ஏனென்றால் ஓய்வாக இருக்கும்போது புரூச்சர்களை (சிகை அலங்காரத்திற்கான பொருட்கள் - Hair Accessories) தயாரிக்கத் தொடங்கினேன். கடையில் நான் சும்மா இருந்த சமயங்களில் தயார் செய்த பொருட்களை பாரிமுனையிலுள்ள பிரபல காஸ்மெட்டிக் பொருட்கள் விற்கும் கடையில் கொண்டு சென்று விற்றுத்தருமாறு கேட்டேன். எனது தயாரிப்புகள் தனித்துவமாக இருந்ததால் வாங்கிக்கொண்டார். இப்படியாக ஒரு வாரம் உற்பத்தி மறுவாரம் விற்பனை என காலம் சென்றது. சிறிய அளவில் தயாரிக்கத் தொடங்கிய என்னை ஒரே மாதத்தில் டஜன் கணக்கில் ெகாடுக்க முடியுமா? என கடைக்காரர் கேட்டார். அதைத் தொடர்ந்து டஜன் என்பது கிலோ கணக்கில் அதிகமானது.

இந்த வேலையில் தனியொருத்தியாக உற்பத்திக்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை. எனவே, ஒரு நான்கைந்து பெண்களை வேலைக்கு அமர்த்தினேன். அடுத்த பிரச்னையாக இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் 2008-ல் லீசு எடுத்து தொடங்கிய தொழிலை 2013-ல் சாந்தி’ஸ் புரூச்சர்ஸ் என 1,500 சதுர அடி கொண்ட இடத்தில் ஒரு பதிவுபெற்ற நிறுவனமாக நிறுவினேன். எனது பிராண்டுக்காக தனி லோகோ உருவாக்கினேன்’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

‘‘சாந்தி’ஸ் புரூச்சர்ஸில் இன்று அறுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகிறார்கள். நாமும் தொழில்முனைவோர் ஆகமுடியும் எனும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு தொழில் நிறுவனமாக வெற்றிநடை போடுகிறது. இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பு. ஏனென்றால், பியூட்டிஷன் மற்றும் ஹேர் டிரெஸ்ஸிங் தொழிலில் பயன்படும் அலங்காரப் பொருட்கள் அனைத்தும் சீனா உள்ளிட்ட வெளிநாட்டு சாதனங்களாக இருந்தன.

அந்தப் பொருட்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் நமது பாரம்பரியத்தையும், கலை உணர்வையும் பிரதிபலிக்கவில்லை. அப்போதுதான் உள்நாட்டு தயாரிப்பாக இருக்கவேண்டும் என சிந்தித்து துணிகளில் பலவிதப் பூக்கள், செடிகளின் இலைகள் அவற்றுடன் மணிகளைக் கோத்து முடி அலங்காரம் செய்ய ஆரம்பித்தோம்.

எங்கள் நிறுவனத்தின் போட்டோக்களைப் பார்த்தாலே தயாரிப்புகளின் முக்கியத்துவம் அனைவருக்கும் புரியும். ஹேர் ஸ்டைலிங்கில் இத்தனை தினுசா என அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படும். அதேபோல நம்மால் சிலர் பயனடைவதும் மகிழ்ச்சி. என்னிடம் பணிபுரியும் பெண்கள், ‘மேடம் நீங்க கொடுத்த சம்பளம்தான் பிள்ளைகளின் படிப்புக்கு உதவுகிறது’ என்று சொல்லும்போது, மனம் நிறைவாக இருக்கிறது’’ என்று கூறும் சாந்தி
‘‘இதுபோன்ற பெண்களைத் தொழில்முனைவோராக மாற்றும் வகையில், பிரபல நிறுவனங்களின் முன்பு ஃப்ரான்சைஸி முறையில் சாந்தி’ஸ் புரூச்சர்ஸ் ஸ்டால் அமைத்துக் கொடுக்கும் திட்டம் உள்ளது. இன்றைக்கு என்னிடம் பணிபுரியும் அறுபதுபேரை ஐநூறுபேராக அதிகரித்து பெண்களைத் தன்னம்பிக்கையோடு சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு தைரியம் கொடுக்க முடிவுசெய்துள்ளேன். அந்த இலக்கை நோக்கி சாந்தி’ஸ் புரூச்சர்ஸ் பாதையை விரிவுபடுத்தியுள்ளது.

வாடகை வீட்டிலிருந்த நடுத்தர வர்க்கத்து மேரி அன் சாந்தி, நிறுவனம் தொடங்கி ஐந்து ஆண்டுகளில் வீடு, கார் என வளர்ச்சி அடைந்ததன் பின்னணியில் கடுமையான உழைப்பு மட்டுமின்றி தொழிலில் ஆர்வமும் உத்வேகமும் இருந்ததால் தொழில்முனைவோராக உருவெடுத்துள்ளேன். குறிப்பாக இந்தத் தொழிலை மணப்பெண்ணுக்கு மட்டும் ஆரம்பத்தில் தொடங்கியிருந்தாலும், மண மகனின் சூட்- கோட் அலங்காரத்திலும் சாந்திப் புரூச்சர்ஸின் கைவண்ணம் திருமணங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதைத் தொடர்ந்து இப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். கல்வி நிறுவனங்களின் விழாக்களில் மாணவ  மாணவிகளுக்கு தலை கிரீடம் மற்றும் சவுரி அலங்காரம் செய்து அதிலும் தடம் பதித்துள்ளோம்.

என்னிடம் பணிபுரியும் பெண்களில் பலரும், மேடம் நான் வீட்டிலேயே செய்து எடுத்துக்கொண்டு தருகிறேன் எனக் கூறுகின்றனர். அப்படி வருபவர்களையும் அரவணைத்து அவர்களுக்குத் தொழில் வாய்ப்பு பழக்கி வருகிறோம். சென்னை மட்டுமில்லாமல் வெளிமாவட்டங்களில் இருப்போர் எனது தயாரிப்புகளை மொத்தமாக வாங்கி தங்களது மாவட்டங்களிலும் விற்பனை செய்துவருகின்றனர்.

சென்னையில், ேஹர் ஸ்டைலிங் செலிபிரிட்டிகளில் சாந்திக்கு தனித்துவம் உண்டு எனும் சான்று கிடைத்துள்ளது. ஆறாயிரம் பெண்கள் குழுமிய ஒரு போட்டியில் தேர்வு செய்யப்பட்ட முப்பத்தைந்து பேரில் நானும் ஒருத்தியாக நடிகர் கமலஹாசனிடம் விருது பெற்றேன்.

இந்த ஐந்து ஆண்டுகளில் நான் பெற்ற விருதுகளும் சான்றுகளும் முக்கியம்தான் என்றாலும் அதைக்காட்டிலும் எனது வாடிக்ைகயாளர்கள் மென்மேலும் பலரை என்னிடம் பரிந்துரைப்பது என் தொழிலுக்குக் கிடைத்துவரும் மிகப்பெரிய விருது. எங்கள் பொருட்களுக்காக யு-டியூப் சேனலும் தொடங்கி அதில் பொருட்களை அறிமுகப் படுத்திவருகிறோம். தமிழகமெங்கும் சாந்தி’ஸ் புரூச்சர்ஸ் வெற்றிக்கொடி நாட்டத் தொடங்கியுள்ளது’’ என்றார்
பெருமிதத்தோடு மேரி அன் சாந்தி.

 - தோ.திருத்துவராஜ்