மல்யுத்தப் போட்டியில் சாம்பியன்ஷிப் வென்ற இந்திய வீரர்!



சாதனை

புதுடெல்லியிலுள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் Asian Wrestling Championships 2020 சமீபத்தில் நடந்து முடிந்தது. சீனா, வடகொரியா ஆகிய நாடுகளைத் தவிர இந்தியா, ஈரான், ஈராக், தென்கொரியா, ஜப்பான் என மொத்தம் பத்து ஆசிய நாடுகள் இப்போட்டிகளில் பங்குகொண்டன.

இப்போட்டியில் ஜப்பான் 8 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் முதலிடத்தையும், ஈரான் 7 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், 5 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. இப்போட்டியில் 27 ஆண்டுகளுக்கு பின் Greco-Roman பிரிவில் இந்தியா சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

  ஆண்கள் மற்றும் பெண்களுக்கான Free style மற்றும் ஆண்களுக்கான Greco Roman போன்ற இரண்டு பிரிவுகளில் மல்யுத்தப் போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் Greco Roman 87 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சுனில்குமார் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார். முன்னதாக அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீரர் அஜாமத் குஸ்துபயேவுடன் மோதிய சுனில்குமார் 12-8 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் கிர்கிஸ்தான் வீரர் அசாத் சாலிடிநோவுடன் மோதிய சுனில்குமார் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச்சென்றார்.

இந்திய மல்யுத்த வீரர் பப்புயாதவ் 1993ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டியின் Greco Roman பிரிவில் பட்டம் வென்றிருந்தார். அவரைத் தொடர்ந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு சுனில்குமார் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இப்போட்டியில் மற்றொரு குறிப்பிட்டதொரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

இந்திய வீரர் ஜிதேந்தர் குமார் 74 கிலோ உடல் எடைப் பிரிவு ஆட்டத்தில் மங்கோலிய வீரர் ஜன்டான்புட்டை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆனால், இறுதி ஆட்டத்தில் ஜிதேந்தர் 1-3 என்ற புள்ளிக் கணக்கில் நடப்பு சாம்பியன் கஜகஸ்தானின் டேனியர் காசனோவிடம் தோற்றதால் வெள்ளிப்பதக்கத்துடன் வெளியேறினார். ஆனால், இந்த ஆட்டத்தில் ஜிதேந்தர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டிக்கான இந்திய அணியிலும் இடத்தை உறுதி செய்துள்ளார்.

  -வெங்கட்