மனமிருந்தால் மார்க்கமுண்டு!



போட்டித் தேர்வு

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை விதைக்கும்  வகையில் இருந்தது கற்றல் குறைபாட்டுக்கான சிறப்புப் பயிற்சிக் கட்டுரை. கற்றல் குறைபாட்டைக் கடந்து வெற்றி பெற வழிகாட்டுவது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற புதுப்புது முயற்சிகளை செய்துவரும் மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா அசோசியேஷனின் செயல்பாடுகளுக்கு ஒரு கிரேட் சல்யூட்.
- எஸ்.கிருஷ்ணவேணி, நாமக்கல்.

நடப்பு நிகழ்வுகளின் தீவிரம் உணர்ந்து அதைப்பற்றி விரிவாக அலசும் குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டியின் கட்டுரைகளுக்கு எப்போதுமே ஒரு தனித்தன்மை உண்டு. அரசுப் பள்ளிகளில் ஆசியர்களின் பற்றாக்குறை, அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள், அஞ்சல் துறையில் நியாயமற்ற பணி நியமனங்கள் என முக்கியமான பிரச்னைகளைப் பற்றி முழுமையாக விளக்கும் விதம் அற்புதம்.
  - ஆர்.ஜோசப் மரியதாஸ், விழுப்புரம்.

ஆசிரியர் பணி அர்ப்பணிப்போடு செய்ய வேண்டிய பணி என்பார்கள். அதை மாற்றுத்திறனாளி என்பதையும் கடந்து நிரூபித்திருக்கிறார் ஆசிரியை ஹேம்குமாரி. அரசுப் பள்ளி மாணவர்கள் நவீன தொழில்நுட்ப உதவியுடன் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில், தனது சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறை, தொடுதிரைப் பலகை அமைத்துள்ளதோடு அக்கம்பக்கத்து அரசுப் பள்ளிகளுக்கும் உதவிகளைச் செய்து வருவது சிறப்பு. மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை நிகழ்த்திக் காட்டியிருக்கும் ஆசிரியை ஹேம்குமாரியின் சேவை சிரம்தாழ்த்தி வணங்குதற்குரியது.
  - ரா.சுப்புராஜ், திருமங்கலம், மதுரை.

தடைகளைத் தாண்டி சாதனைபுரிந்த மனிதர்களின் கதைகளைப் பகிர்ந்து  இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ‘புதிதாய் பிறப்போம் சரித்திரம் படைப்போம்’ தொடர் அற்புதம். ஷில்பா ராகவனின் ஆரம்பகாலத் தடுமாற்றங்கள், தோல்விகள், அவமானங்களைத் தொடர்ந்து இலக்கை அடைந்தது என ஒவ்வொரு நிலையாகக் கூறி தன்னம்பிக்கை விதைக்கும் வகையில் அமைந்தது கட்டுரை.
  - என்.ஸ்ரீதேவி, திருச்சி.