அரசுப் பள்ளி மாணவி திருக்குறள் ஒப்புவித்து உலக சாதனை ஆசிரியையின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி!
சேவை
ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு திறமை நிச்சயம் இருக்கும். அந்தத் திறமை எது என்பதை நாமே கண்டறிந்து சாதிப்பது ஒரு விதம், நம் திறமையைப் பிறர் கண்டறிந்து சாதிக்க வைப்பது இன்னொரு விதம். அப்படி ஆசிரியையால் கண்டறியப்பட்டு சாதனை மாணவியாகியுள்ளார் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட க.மடத்துப்பட்டி ஊ.ஒ.தொ.பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஹரிணி. இந்த மாணவி 200 திருக்குறள்களை 5.39 விநாடிகளில் ஒப்புவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளாள். இதுகுறித்து அம்மாணவியை தயார்படுத்திய ஆசிரியை ம.ஜெயமேரியிடம் பேசினோம்.
‘‘2004-ல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம், உலகினிப்பட்டியில் முதல் முதலாக ஆசிரியப் பணியில் சேர்ந்தேன். ஆசிரியப் பணி பிழைப்பு அல்ல. இறைவனின் அழைப்பு என்பதைப் பள்ளி செல்லும் ஒவ்வொரு நாளும் உணர்ந்திருக்கிறேன். சிறு வயதிலிருந்தே ஆசிரியக் கனவுகளை வறுமையோடே ஊட்டி வளர்த்த அம்மாவை அறிந்ததாலோ என்னவோ, ஆசிரிய அதிகாரம் என்ற பிம்பத்தை உடைத்து, குழந்தைகளின் ஆசிரியராக என்னை மாற்றிக்கொள்ள முடிந்தது. அரசுப் பள்ளிகளின் தேவையை நிறைவேற்ற அரசை எதிர்பார்க்காமல், என் பள்ளி, என் கடமை என்ற எண்ணம் எனக்குள் வந்தது. பட்டிமன்றம், நாளிதழ்களில் எழுதுதல் போன்றவற்றில் வந்த தொகையை எடுத்து உண்டியலில் சேமிக்க ஆரம்பித்தேன்.
பள்ளிக்குத் தேவையான கரும்பலகை வண்ணமடித்தல், மின்சார மணி பொருத்துதல், சாக்பீஸ் பெட்டிகள் வாங்குதல், வகுப்பறை மாற்றங்கள் என செய்துகொண்டேன். கல்வி இணைச் செயற்பாடுகளில் கலக்கும் பிள்ளைகளை ஊக்கப்படுத்த பரிசுகள் வழங்கினேன். சென்ற ஆண்டு அருகிலுள்ள அரசுப் பள்ளிக்கு ரூ.1500 மதிப்பிலான ஸ்பீக்கர், மற்றோர் அரசுப் பள்ளிக்கு விளையாட்டுப் பொருட்கள், உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் வழங்குதல், கல்லூரிக் கட்டணம் கட்ட முடியாத கல்லூரி மாணவிக்கு கட்டணம் செலுத்துவது, கடலூரிலுள்ள இயலாக் குழந்தைகளுக்கு உணவு வழங்குதல் போன்ற சமூகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினேன்.
பரத, ஓவிய வகுப்புகள் வாரம் ஒரு முறை அதற்கென சிறப்பு ஆசிரியர்களை வரவழைத்து கற்றுத்தரப்படுகிறது. எங்கள் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளாக வட்டார அளவிலான போட்டிகளில் ஓவியம், பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு பெற்று வருகின்றனர்.
காலையில் சரிவர சாப்பிட்டு வராத குழந்தைகளுக்கு, வகுப்பறையில் உணவு பரிமாறியபோது, இதைப் பள்ளியிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பயன்படுத்த எண்ணி வாரம் ஒருமுறை இணை உணவாக வழங்க உண்டியல் தொகையைப் பயன்படுத்திக்கொண்டேன். இப்போது காலை இணை உணவுத் திட்டத்திற்கு தன்னார்வலர்களும் உதவியதால், தினந்தோறும் பள்ளியில் காலை இணை உணவுத் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது’’ என்றவர் திருக்குறள் பயிற்சி தொடங்கிய விதத்தையும் விவரித்தார்.
‘‘இன்றைய வாழ்க்கைமுறையில் அன்பு என்ற பண்பும், அறம் என்ற பயனும் இல்லாமல் பொருள் என்ற ஒன்றை மட்டுமே தேடிக் கொண்டிருக்கும் தலைமுறையாகிவிட்டது. மாணவர்களை நல்வழிப்படுத்த உலகப் பொதுமறையைக் கையிலெடுத்தேன். திருக்குறளைப் படிப்பவனே குணம் நிறைந்த மனிதனாக இந்த சமூகத்தில் பரிணமிக்க முடியும் என்பதை உணர்ந்து ‘குறளால் வளம் பெறுவோம்’ என்ற திட்டத்தை ஆசிரியர் தினத்தில் தொடங்கினேன். சொந்த செலவில் 130 மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கியுள்ளேன். இதற்கென பெற்றோரை வாட்ஸ்அப் குழுவில் இணைத்து, தினந்தோறும் குறள்களை அதில் அனுப்பி வருகிறேன்.
திருக்குறள் உண்டியல் தொடங்கி வாரந்தோறும் திருக்குறள்கள் சொல்லும் பிள்ளைகளுக்கு அவர்களது உண்டியலில், பணம் செலுத்துகிறேன். ஒரு குறள் படித்தால் ஒரு ரூபாய் என்றும், குறளோடு பொருளும் படிக்கும் குழந்தைகளுக்கு இரண்டு ரூபாயும் அவர்களது உண்டியலில் செலுத்த தொடங்கினேன். மாணவர்களிடம் குறள்கள் படிக்கும் ஆர்வம் வளர்ந்தது.
இப்படி ஆரம்பித்த ஐந்து மாதங்களிலேயே 2-ஆம் வகுப்பு மாணவி ஹரிணி 200 குறள்களும், காவ்யா 250 குறள்களும், கவிலன் 210 மற்ற மாணவர்கள் 100, 150 என குறள்களைச் சொல்கின்றனர் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. 200 குறள்கள் முடித்த குழந்தைகள் பெயரில் அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்கியுள்ளேன். 5ஆம் வகுப்பில் 20 குறள்கள் முடித்த பிள்ளைகளை அருகிலுள்ள நூலகத்தில் நூலக உறுப்பினராகச் சேர்த்துவிட்டு வாசிக்கும் பழக்கத்தையும் ஊக்குவித்துவருகிறேன்’’ என்று மனநிறைவோடு தெரிவித்தார் ஆசிரியை ஜெயமேரி.
‘‘உலக சாதனை நிகழ்விற்கு ஹரிணி என்ற மாணவியைத் தயாராக்க எண்ணினேன். ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய மூன்றாம் வகுப்பு மாணவி 150 குறள்களை 4.46 விநாடிகளில் சொல்லி உலக சாதனை படைத்திருந்தாள். அதை முறியடிக்கும் விதமாக 200 குறள்களை இரண்டாம் வகுப்பு ஹரிணி 5.39 விநாடிகளில் சொல்லி புதிய சாதனை படைத்துள்ளாள் என்பதும், அவளுக்குக் கல்வி வைப்புத்தொகையாக சிவகாசி அரிமா சங்கத்தினர் ஒரு லட்சம் பரிசுத்தொகை தந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
சாதனைகள் என்ற வார்த்தையோடு அதனை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது. அதற்குப் பின்னாலான வலிகளும், முயற்சிகளும் சற்று கடினமானவையாகவே இருந்தன.செய்து முடிக்கப்படும் வரை எந்தவொரு செயலும் மற்றவர்களுக்கு சாதாரணமாகவே தெரியும். ஆனால், எடுக்கும் முயற்சிகளில் மனம் தளரவில்லை. ஹரிணியின் வீடு சற்று தொலைவில் உள்ளது.
மாலை 5 மணிக்கு அவள் அம்மாவுடன் வருவாள். அவள் அப்பா பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை பார்த்துவிட்டு, வீட்டில் வந்து துணிகளைத் தேய்த்துக்கொடுத்துவிட்டு, அவளைக் கூப்பிட வர 9 மணியாகும். முதலில் 200 குறள்களை மனப்பாடம் செய்தவளுக்கு,நேரத்தைக் கணிக்க டிஜிட்டல் கடிகாரம் மூலம் பயிற்சி கொடுத்தேன். என் முயற்சிக்கு உதவும்விதமாகத் திருக்குறள் ஒப்புவிக்கும் நிகழ்ச்சியை நடத்த சென்னை விஷன் லயன் சங்கம், தமிழால் இணைவோம் அமைப்பு, சிவகாசி லயன்ஸ் சங்கம் போன்றோர் உறுதுணையாக இருந்தனர். டிரம்ப் வேர்ல்டு நிறுவனர் முக்தா அவர்கள் உலக சாதனை நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்தார்.
2018 ஆம் ஆண்டு ‘கனவு ஆசிரியர் விருது’ வழங்கப்பட்டது. அதற்கான பரிசுத்தொகை பத்தாயிரம் ரூபாயுடன், கூடுதலாக கட்டுரைத் தொகையும் சேர்த்து ரூ.18,000 மதிப்பிலான ஸ்பீக்கர், மைக் பள்ளிக்கு வாங்கிக் கொடுத்துள்ளேன். கனவு ஆசிரியர் விருதுகளை வழங்கிவிட்டு கல்வி அமைச்சர் மேடையை விட்டு இறங்க, சார் ஒரு நிமிடம் என்ற என்னை, சொல்லுங்கம்மா என்றதும், காலை உணவுத் திட்டம் அரசுப் பள்ளிகளில் கொண்டுவர ஆவன செய்யவேண்டும்.
என் பிள்ளைகள் காலையில் சாப்பிட்டு வருவதில்லை’’ என்று கூறவும், நிச்சயமாக மா... என்று கூறிச் சென்றபோது, பசித்த என் பிள்ளைகள் வயிறு இனி காலையிலும் நிரம்பும் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது. அனைத்துப் பள்ளிகளில் காலை இணை உணவுத் திட்டம் கொண்டு வர வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு’’ என்றார் ஆசிரியை ஜெயமேரி.
- தோ.திருத்துவராஜ்
|