சிறப்பு குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி!



சிறப்புப் பயிற்சி

இயற்கையோடு இயைந்த சூழலில் ஒரு வாழ்வியல் மையத்தை நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே அமைத்து சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி அளித்துவருகிறார் வானதி பாலசுப்பிரமணின். இவர் ‘பிற உயிர்களின் தேவையை நீங்கள் பூர்த்தி செய்யும்போது உங்களின் தேவை தானாகப் பூர்த்தி அடையும் என்ற தாரக மந்திரம்தான் இன்று வரை எங்களை இயக்கிக்கொண்டிருக்கிறது’ என்ற தத்துவார்த்த வார்த்தைகளுடன் நம்முடன் பேச ஆரம்பித்தார்.  

‘‘தஞ்சாவூர் பக்கம் ஒரத்தநாடுதான் எனது சொந்த ஊர். சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி தரக்கூடிய டிப்ளமோ இன் ஸ்பெஷல் எஜுகேஷன் என்ற கோர்ஸ் முடித்துள்ளேன்.  திருச்சி போன்ற இடங்களில் சிறப்புக் குழந்தைகளுக்கான பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கும்போது எனக்கு திருநெல்வேலி பாபநாசம் வரும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பார்க்கும்போது சிறப்புக் குழந்தைகளை பராமரிக்கத் தெரியாத மற்றும் தெளிவு குறைவான நிறைய பெற்றோர்களைச் சந்தித்தேன்.

அதனால் திருச்சி போன்ற பெருநகரங்களில் இருப்பதைவிட அறியாமையில் இருக்கும் பெற்றோர்கள் உள்ள இடங்களில் சென்று பயிற்சி அளித்தால் நன்றாக இருக்குமே என எண்ணியபோதுதான் இந்தப் பணிக்கான ஒரு நல்ல நிறைவு கிடைப்பதாக உணர்ந்தேன். சிறப்புக் குழந்தைகள் ஒரு அமைதியான சூழலில் இருக்கும்போது அவர்களை முன்னேற்ற முடியும் என்பது என் எண்ணம். அதன் காரணமாகத்தான் நான் பாபநாசம் நோக்கி நகர்ந்துவந்தேன்’’ என்ற வானதி தங்கள் பயிற்சி மையம் உருவான விதத்தையும் பெயர்க் காரணத்தையும் விவரித்தார்.  

‘‘எங்கள் சிறப்புக் குழந்தைகளுக்கான பயிற்சி மையத்தின் பெயர் வாசி வாழ்வியல் மையம். வாசி என்பதற்கு நிறைய பொருள் இருக்கிறது. ஏதுமறியாத குழந்தைகளுடைய முகத்தில் இருக்கின்ற உணர்வுகளை வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அந்த பெயருக்கான ஒரு முக்கியமான காரணம். வாசி என்றால் காற்று, மூச்சுக்காற்றைச் சீர்படுத்தும்போது சிறப்பு குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதனுடைய சூட்சுமங்கள் இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில்தான் இருக்கின்றது என்பதைத் தொலைத்துவிட்டு சிறப்புக் குழந்தைகள் என்றாலே அவர்கள் மேல் ஒரு லேபிளை ஒட்டிவிட்டு எங்கெங்கோ அதற்கான தீர்வைத் தேட ஆரம்பிக்கிறார்கள். தீர்வு நம்மிடமே மிகவும் எளிமையான வழிகளில் இருக்கின்றது என்பதைப் புரிய வைப்பதுதான் இந்த வாசி வாழ்வியல் மையத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

சிறப்புக் குழந்தைகளுடன் பெற்றோர்களில் ஒருவர் பயிற்சிக் காலம் வரை தங்க வேண்டும். காரணம் என்னவென்றால், குழந்தைகளை ஆண்டுக்கணக்கில் நம்முடன் தங்க வைக்கப்போகிறோம் என்பது கிடையாது. பிரச்னையுள்ள ஒரு குழந்தை இங்கே வருகிறதென்றால், அதற்கான ரூட் என்ன, பிறகு அதை எப்படி சரிசெய்வது? ஒரு குழந்தைக்குப் பேசத் தெரியவில்லை, சாப்பிடத் தெரியவில்லை, இதுபோன்று அடுத்தடுத்து என்னென்ன குறைபாட்டோடு இருக்கின்றார்கள், எந்த திறனெல்லாம் குறைவாக இருக்கின்றது எனக் கண்டுபிடித்து முதலில் ஒரு ஸ்கில்தான் எடுப்போம்.

முதலில் அந்தக் குழந்தை பேசுவதுதான் முக்கியம் என்றால், பேசுவதற்கு எவ்வளவு கவனம் செலுத்த முடியுமோ அதைச் செய்வோம். அப்படி பண்ணும்போதுதான் அடுத்த கட்ட முன்னேற்றத்தை அடைய முடியும். இல்லையென்றால் ஆண்டுக்கணக்கில் அக்குழந்தையை வைத்திருந்தால்கூட நான் நினைக்கிற மாதிரியான அவர்களிடம் தேவையான முன்னேற்றத்தை நாம் காண முடியாது.

அதனால், எது முதலில் எது இரண்டாவது என நாங்கள் குழந்தைகளின் பிரச்னைகளைப் பிரித்துக்கொள்கிறோம். அதன்படிதான் பயிற்சிகள் கொடுக்கிறோம்’’ என்றவர் சிறப்புக் குழந்தைகளுக்கான பயிற்சி முறை எப்படி இருக்கும் என்பதையும் விளக்கினார்.

‘‘சிறப்புக் குழந்தைகள் எல்லாவற்றையும் செய்யக்கூடிய சூழலில் இல்லாதபோது மேலும் மேலும் அவர்களை நம்முடைய எதிர்பார்ப்புகளை அவர்கள் மேல் திணித்து அவர்களை குழப்பக்கூடாது. அவர்கள் மிகவும் ஈஸியா, ரொம்ப ஹேப்பியா அவர்கள் எல்லாவற்றையும் செய்கின்ற மாதிரி நாம் செய்ய வைப்பதுதான் ரியல் சக்சஸ்.

வாசி வாழ்வியல் மையம் மற்ற சிறப்புப் பள்ளிகளோடு எந்த விஷயத்தில் மாறுபட்டிருக்கிறோமென்றால், ஆரம்பகாலக் குறுக்கீடு என்று சொல்லப்படும் பிறந்த குழந்தைகள் அதாவது, மூன்று மாதக் குழந்தையிலிருந்து பத்து வயதுக் குழந்தை வரைக்கும்தான் பயிற்சி கொடுக்கிறோம். ஏனென்றால், இந்தக் காலகட்டங்களில் பயிற்சி அளிக்கும்போது ரொம்ப ஈஸியா குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும். அந்த வயதைத் தாண்டும்போது அவர்கள் நம்மைக் கவனிக்கமாட்டார்கள். அதனால் பயிற்சி அளிப்பது எந்த காலகட்டத்தில் அப்படி என்பது ரொம்ப கரெக்டா நாம் தேர்ந்தெடுத்து செய்யும்போது சிறப்புக் குழந்தைகளுடைய வாழ்க்கைத் திறன் மேம்படுத்த முடியும் என்பதால்தான் ஏர்லி இன்டெர்வென்சனில் எடுக்கிறோம்’’ என்றார்.

‘‘நம்முடைய மையத்தைப் பொறுத்தவரையிலும் உணவுக் கட்டுபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். ஏனெனில், உணவு முறையில் சரியானதைக் கொடுக்காமல் அவர்களுடைய மூளைத்திறனை எந்த வகையிலும் மாற்ற முடியாது. அதனால் சரியான உணவுமுறையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகளுக்குச் சரியான பயிற்சிகள் தனியாகவும் வகுப்புகள் தனியாகவும் நடக்கக்கூடாது. இரண்டும் ஒன்றாகக் கலந்திருக்க வேண்டும் என்பதுதான் இதனுடைய முக்கியமான நோக்கம். ஏனென்றால் ஒரு குழந்தையை மண்ணில் விளையாட வைக்கிறோம், பிசியோதெரபி கொடுக்கிறோம், ஆக்குபேஷன் தெரபி என நிறைய விஷயங்கள் மேற்கொள்கிறோம்.

மறைந்துபோன நம்முடைய பாரம்பரிய உணவுகளையும், மரபு சார்ந்த விளையாட்டு களையும் இம்ப்ரூவ் பண்ணுவதுதான் வாசி வாழ்வியல் மையத்தினுடைய தலையாய நோக்கம். உணவு தயாரிப்பில் ஆட்டுக்கல், அம்மி பயன்படுத்துகிறோம். திருவையில் பருப்பு உள்ளிட்ட தானியங்களைக் குழந்தைகள் உடைக்கிறார்கள், அவர்களுக்கான தின்பண்டங்களை நாங்களே தயார்செய்கிறோம். இதற்கான காரணம் என்னவென்றால், இதிலெல்லாம்தான் அவர்களுக்கான பயிற்சி இருக்கிறது.

உதாரணமாக, திருவை வட்டமாக சுழலக்கூடிய அமைப்புடையது, அதில் பருப்பு உடைக்கும்போது அதைக் கவனிக்கும் அவர்களின் கை, கண் அவை எல்லாமே ஆட்டோமேட்டிக்காக வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இது என்னவாகுமென்றால், பிஹேவியர் பிராப்ளம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். இப்படித்தான் சிறப்புக் குழந்தைகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்கிறோம்.

நாங்கள் தெரபி தனியா வகுப்பு தனியா பிரிப்பது கிடையாது. அவர்களுக்கு பிடித்தமாதிரி கற்பித்தலும் கற்றலும் இருந்தால் சிறப்புக் குழந்தைகள் ரொம்ப அழகாகக் கற்றுக்கொள்வார்கள். வழிகாட்டினால்போதும் அதை அவர்கள் நாம் எதிர்பார்ப்பதைவிட வேகமாக உள்வாங்குவார்கள்’’ என்கிறார் வானதி பாலசுப்பிரமணியன்.

- தோ.திருத்துவராஜ்