வெளிநாட்டு வேலை வாய்ப்பும் தொழில்நுட்ப முன்னேற்றமும்!



அலசல்

உலகம் முழுவதும் பல்வேறு வேலைகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. உலகம் முழுவதும் இந்தியர்கள் பல துறைகளில் அதிகாரி முதல் உதவி ஆள் வேலை வரை செய்துவருகின்றனர். ஆனால், மென்பொருள் துறையைப் பொறுத்த வரை திறமைசாலிகளுக்கு மட்டுமே அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான கல்வி பயின்ற திறமையானவர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. அதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி நம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் பணியில் சேர்ந்திருப்பவர்கள் அதிகமானோர் உள்ளனர். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ஐடி தொழிலில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம்.

ஐரோப்பா கண்டம் முழுவதும் இதுபோன்ற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆனால், அங்கு தேவைக்கு தகுந்த ஆட்கள் இல்லை. அந்தந்த நாடுகளிலேயே அந்த வேலையை செய்வதற்கு ஆட்கள் இல்லை. அயர்லேண்ட், பெல்ஜியம் போன்ற நாடுகளில் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் அளவுக்கு அங்குள்ளவர்களிடம் ஸ்கில்செட் இல்லை. ஓரளவுக்கே ஸ்கில்செட் இருக்கிறது, ஆனால், இடைவெளி நிறையவே இருக்கிறது. அதை நிரப்புவதற்கு அந்த நாட்டு மக்களால் மட்டும் முடியாது.

அதனால் வெளிநாடுகளிலிருந்து யாராவது ஒருவர் வந்துதான் ஆக வேண்டும். இது எப்படி சாத்தியப்படும் என்று பார்த்தோமானால், வெளிநாடுகளில் படிக்கச் சென்று படித்துவிட்டு அப்படியே அந்த வேலைவாய்ப்பை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அப்படிச் சென்றால்தான் பெஸ்ட் அண்ட் ஈஸி வே. அமெரிக்காவை பொறுத்தவரை வேலைவாய்ப்புகளில் அதிகமானோர் இந்தியர்கள்தான் உள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை. இன்றைக்கும் எப்படியாவது நாம் அமெரிக்காவுக்கு போய் செட்டிலாகிவிட மாட்டோமா என்ற எண்ணமே நம் இந்தியர்களிடம் உள்ளது. ஆனால், தற்போது இதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தேர்தலை சந்திக்கும்போதே டிரம்ப் என்ன சொன்னார் என்றால், பை அமெரிக்கன், ஹயர் அமெரிக்கன். அதாவது, அமெரிக்காவில் உற்பத்தியாகிற பொருட்களை வாங்கு, அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்து என்பதே அவரது மந்திரச் சொல்லாக இருந்தது. இதை வைத்து வெற்றியும் பெற்றார். அமெரிக்காவுக்கு வேலைக்கு போவது என்பது இரண்டு வகை. ஒன்று படித்து அதற்கான திறமையோடு செல்வது. இரண்டாவது கம்பெனி மூலமாக எச்-1பி விசாவில் வேலைக்கு செல்வது.

இப்படி எச்-1பி விசாவில் செல்பவர்கள் அங்கு சென்றதும் கிரீன் கார்டுக்கு (குடியுரிமை - இதற்கு இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும்) விண்ணப்பிப்பார்கள். அது வருவதற்கு தாமதம் ஆனாலும், முந்தைய டாக்குமென்டுகளைக்கொண்டு எச்-1பி விசாவை புதுப்பித்துக்கொள்வார்கள்.

ஆனால், டிரம்ப் என்ன சொல்கிறார் என்றால், எச்-1பி விசா என்பது மூன்று ஆண்டுகளுக்கானது, அது முடிந்ததும் அவரவர் நாடுகளுக்குச் சென்றுவிட வேண்டும். பின்னர் எச்-1பி விசாவுக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். கிடைக்கவில்லையென்றால், அவரவர் நாடுகளுக்குச் சென்றுவிட வேண்டும்.

அதேபோல், எச்-1பி விசாவில் வருபவர்களின் துணைவர்களுக்கு, அதாவது கணவரோ, மனைவியோ எச்4 என ஒரு விசாவை எடுத்து அதன் மூலம் அந்நாட்டில் முன்பு வேலை பார்க்கலாம். ஆனால், இப்போது அப்படி கூடாது. யார் எச்-1பி விசாவில் வருகிறார்களோ அவர்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும்.

இதனால் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்பவர்களில் கடந்த ஆண்டுக்கு இந்த ஆண்டு 57 சதவிகிதம் எச்-1பி விசா குறைந்துள்ளது. இது எதனால் என்று பார்த்தால், டிஜிட்டல் எஞ்சினியரிங், ஐ.ஓ.டி, டேட்டா அனாலிசிஸ் இதுபோன்று அடுத்த தலைமுறைக்கான டெக்னாலஜிக்கான ஸ்கில் நிறைய கம்பெனிகளிலிருந்து வருவதில்லை. அதனால்

எச்-1பி விசாவை நிறுத்தியுள்ளனர். இந்தியாவிலிருந்து செல்லக்கூடிய இன்ஃபோசிஸ், டிசிஎஸ் போன்ற கம்பெனிகள் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால், இங்கிருந்து சென்ற டெக் மஹிந்திரா என்ற ஐடி கம்பெனிக்கு மட்டும் 61 சதவிகிதம் வாய்ப்பு அதிகரித்துள்ளது. காரணம், இந்த கம்பெனியிலிருந்து செல்பவர்கள் எல்லாருமே டேட்டா அனாலிசிஸ், டிஜிட்டல் எஞ்சினியரிங், என இப்போதைக்கு அந்த நாட்டில் என்ன ஸ்கில் தேவைப்படுகிறதோ அதுமாதிரியானவர்களை மட்டும்தான் அந்த கம்பெனி அனுப்புகிறது.

அதனால், அவர்களுக்கு பிரச்னை இல்லை. லேட்டஸ்ட் டெக்னாலஜி எந்த கம்பெனி வளர்த்துக்கொள்கிறதோ அவர்களால்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த லேட்டஸ்ட் டெக்னாலஜி முறையில் நாம் பின்தங்கியே இருக்கிறோம். இப்போதைய தொழில்துறைக்கு எது எது தேவை என்பதை அறிந்து படிக்க வேண்டும். டெக்னாலஜியில் இந்தியா 5 ஆண்டுகள் பின்தங்கியே இருக்கிறது. உதாரணத்துக்கு பெல்ஜியத்தை எடுத்துக்கொள்வோம். நான் அங்க சென்றிருந்தபோது கிடைத்த தகவலை சொல்கிறேன்.

பெல்ஜியத்தில் உள்ள ஒரு நகரத்தில் ஐடி அண்ட் டிஜிட்டல்ஆகியவற்றுக்கு மட்டுமே 25,000 பேர் தேவைப்படுகிறார்கள். ஆனால், அந்த 25,000 பேரையும் அந்த நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் கொடுக்கவில்லை.

ஏனென்றால், இந்தியாவைப் போன்றே அங்கும் அந்தப் பல்கலைக்கழகங்கள் தங்களை அப்டேட் செய்வதற்கு ஏராளமான நடைமுறைகள் இருக்கின்றன. இந்த நடைமுறைகள் கஷ்டமாக உள்ளதால் வேலைக்கு ஆட்களை வெளிநாடுகளில் இருந்துதான் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

வெளிநாடுகளிலிருந்து ஆட்களை எடுக்கும்போது வெளிநாட்டுக்காரன் நம் வேலையை எடுத்துக்கொள்கிறான் என்ற பிரச்னை வரும். இந்த விஷயத்தை கையாள்வதில் பிரான்ஸ் மிகவும் நேர்த்தியாக செயல்படுகிறது. எப்படியென்றால், அந்த நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் காலத்துக்கேற்ற தேவைக்கேற்ற பாடத்திட்டங்களை உடனே மாற்றிக்கொள்ளும்.

ஏனென்றால், அங்கு போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் 50 சதவிகிதம் பேர் இண்டஸ்ட்ரியில் உள்ளவர்கள். இண்டஸ்ட்ரியிலிருந்து வருபவர்கள் இந்த சாதாரண சாஃப்ட்வேர் கோர்ஸ் எனக்கு வேண்டாம், ஐ.ஓ.டி. வேண்டும், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் வேண்டும், அதை அவர்கள் படிக்க வேண்டும் டேட்டா அனாலிசிஸ், டேட்டா சயின்ஸ் பற்றி படிக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னால் உடனடியாக பழைய பாடத்திட்டங்களை எடுத்துவிட்டு எது தேவையோ அதை மாற்றிக்கொள்வார்கள். நம் நாட்டில் அது இல்லை. ஏனெனில், நம் நாட்டில் உடனடியாக எதையும் மாற்றிவிட முடியாது. காரணம், அந்த அளவுக்கு இங்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.

ஒரு மாணவன் எஞ்சினியரிங் 4 ஆண்டுகள் பழைய பாடத்திட்டத்தில் உள்ளதை படித்துவிட்டு வெளியே வரும்போது டெக்னாலஜி மாறியிருக்கிறது. தேவைக்கு தகுந்த கல்வியைக் கொடுக்க வேண்டுமானால் ஆண்டுதோறும் பாடத்திட்டங்களை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும். அதற்கு அண்ணா பல்கலை ஒரு 500 கம்பெனிகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும். அந்தக் கம்பெனியின் உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி எதற்கு தேவை இருக்கிறது என தெரிந்துகொண்டு அந்தக் கல்வியைக் கொடுக்க வேண்டும்.

இண்டஸ்ட்ரி கொடுக்கிற அறிவுரைகளை எடுத்துக்கொண்டு அண்ணா பல்கலைப்பாடத்திட்டத்தை மாற்றவேண்டும். இங்கே யார் பாடத்திட்டத்தை மாற்றுகிறார்கள் என்று பார்த்தோமானால், கல்வியாளர்கள் மட்டும்தான். இதில், இண்டஸ்ட்ரியில் உள்ளவர்களும் கலந்துகொள்ள வேண்டும். அப்படியென்றால்தான் என்ன தேவை இருக்கிறது எனத் தெரியவரும்.

இந்தியாவில் ஐஐடி-க்கு மட்டுமே பாடத்திட்டங்களை மாற்றிக்கொள்ளும் அதிகாரம் இருக்கிறது. இந்தியா முழுவதிலுமிருந்து 3 சதவிகிதம் பேர்தான் ஐஐடியில் நுழைகிறார்கள். அதனால் அங்கு படிப்பவர்கள் எளிதாக வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்கிறார்கள். பல்கலைக்கழகங்கள் மூலம் எஞ்சினியரிங் படிக்கும் 97 சதவிகிதம் பேரின் நிைலமை இன்னமும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இந்த நிலையை மாற்ற உயர்கல்வி குறித்த மத்திய மாநில அரசுகளின் பார்வை மாற வேண்டும்.
                   
ஸ்ரீநிவாஸ் சம்பந்தம்