டாடா உயர்கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!அட்மிஷன்

இந்தியாவின் மிக முக்கியமான உயர்கல்வி நிறுவனங்களில் முதன்மையானது Tata Institute of Social Sciences (TISS) கல்வி நிறுவனம். இது 1936 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்டது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இக்கல்வி நிறுவனம் துல்ஜாபூர், கவுஹாத்தி, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் கிளை நிறுவனங்களை நிறுவி சோஷியல் சயின்ஸ் சார்ந்த சான்றிதழ் படிப்புகள், B.A போன்ற இளங்கலை மற்றும் M.A, M.Phil உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட முதுகலைப் படிப்புகளையும் மற்றும் பிஎச்.டி ஆராய்ச்சிப் படிப்புகளையும் வழங்கி சர்வதேச தரத்திலான மாணவர்களை உருவாக்கிவருகிறது. இக்கல்வி நிறுவனத்தில் 2019-20 கல்வி ஆண்டுக்கான இளங்கலை, முதுகலை மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

படிப்புகள்

மூன்று வருட இளங்கலை படிப்புகளான B.A (Hons) in Social Work (TISS Tuljapur campus), B.A in Social Sciences (TISS- Gauhati and Tuljapur campuses) மற்றும் Master of Arts in Education (Elementary), Master of Arts (Development Studies),Master of Arts / Master of Sciences (Climate Change and Sustainability Studies) போன்ற இரண்டு வருட கால அளவிலான படிப்புகள்.

கல்வித் தகுதி

பி.ஏ. இளங்கலைப் பட்டம் படிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருத்தலோ அல்லது அதற்கு இணையான கல்விப் பின்புலம் கொண்டிருத்தல் அவசியம். வயது வரம்பு 10 மே 2019 அன்றின்படி 23 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். எம்.ஏ. முதுகலைப் பட்டம் படிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் துறைகளுக்கு ஏற்ப  தகுதிகளைக் கொண்டிருத்தல் அவசியம்.

நுழைவுத் தேர்வு

மூன்று வருட பி.ஏ. படிப்புகளுக்கு 11.5.2019 அன்று Bachelor’s Admission Test (TISS - BAT) மற்றும் இரண்டு வருட எம்.ஏ படிப்புகளுக்கு 13.1. 2019 அன்று TISS National Entrence Test (TISS - NET) போன்ற தேசிய நுழைவுத்தேர்வுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பி.ஏ. படிப்புகளுக்கு புதுடெல்லி, கொல்கத்தா, திருவனந்தபுரம், அகமதாபாத், சென்னை உள்ளிட்ட 22 இடங்களிலும், எம்.ஏ படிப்புகளுக்கு இந்தியாவின் 39 இடங்களிலும் நுழைவுத்தேர்வு நடத்தப்படவிருக்கின்றன.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.admissions.tiss.edu என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இளங்கலைப் பட்டம் படிக்க பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.1025 மற்றும் எஸ்.சி/எஸ்.டி மாணவர்கள் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 20.3.2019.

முதுகலைப் பட்டம் படிக்க விரும்ப்பமுள்ள பொதுப் பிரிவு மாணவர்கள் ரூ.1030 மற்றும் எஸ்.சி /எஸ்.டி மாணவர்கள் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 10.12.2018. மேலும் முழு விவரங்களை அறிய www.admissions.tiss.edu என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- வெங்கட்.