கபடி விளையாட்டில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி!சாதனை

கோயம்புத்தூரைச் சேர்ந்த காது கேட்காத, வாய்பேச வராத மாற்றுத்திறனாளியான கல்லூரி மாணவி தர்ஷினி கபாடி விளையாட்டில் தங்கப்பதக்கம் முதல் பல விருதுகளைப் பெற்று சிறந்து விளங்கி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். இவரின் சாதனைகளுக்கு பின்புலமாக இருந்துவரும் மதர்லேண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடெமி நிறுவனத்தின் செயலர் மற்றும் கபாடி பயிற்சியாளர் விஸ்வநாதன் கூறும் தகவல்களைப் பார்ப்போம்…

‘‘திறமையுள்ள ஏழை குழந்தைகளுக்கு வழிகாட்டவே இந்த அமைப்பு 6.6.2010ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் நோக்கமே, வசதியற்ற ஏழை குழந்தைகள் மற்றும் பெற்றோர் இல்லாத குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தேர்வு செய்து கல்விக்கு உதவ வேண்டும் என்பதுதான்.

தொடங்கிய இரண்டு மாத காலத்திலேயே கல்வியில் மட்டுமில்லாது விளையாட்டுத துறையிலும் இவர்கள் சாதிக்க வேண்டுமென்று விரும்பினேன். இதற்கு காரணம் நான் ஒரு முன்னாள் கபாடி வீரன் மற்றும் பயிற்சியாளராக இருந்ததுதான்’’ என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.
 
‘‘தேசிய, மாநில மாவட்ட, அளவிலான விளையாட்டு வீரர்கள் பலர் என் பயிற்சி மூலம் உருவாகியுள்ளனர். ஆகவே, ஓரளவு படிக்கும் மாணவர்கள் விளையாட்டில் சாதனைபுரிந்தால் கல்லூரிப் படிப்பிற்கு இலவசக் கல்வி பயில்வதற்கு உறுதுணையாக இருக்கும் என்ற நோக்கத்தில் விளையாட்டு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தினேன்.

எனது முயற்சிக்கு ஓரளவு வெற்றியும் கிடைத்தது. மாணவிகள் தரப்பில் அனைத்து மாணவிகளும் கல்லூரியில் இலவசக் கல்வி பயில இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி உதவியது. எங்கள் அமைப்பில் விளையாடும் மாணவிகளில் 7 மாணவிகள் தேசிய போட்டியில் பங்குபெற்று விளையாடினர். மாணவர்கள் தரப்பில் மூன்று மாணவர்கள் தேசிய போட்டியில் பங்குபெற்று விளையாடினர்.’’ என்று மனம் மகிழ்ந்து பேசிய விஸ்வநாதன் தர்ஷினி பற்றி விவரிக்க தொடங்கினார்.

‘‘என்னிடம் பயிற்சி பெற்று சாதிக்கும் மாணவிகள் 7 பேரில் 3 பேர் அப்பா இல்லாத குழந்தைகள், ஒருவர் மாற்றுத்திறனாளி. அவர்தான் எங்கள் கபாடி அணியின் சிறந்த வீரராக உள்ளார். அவர் பெயர் தர்ஷினி. அவருக்கு 100 சதவீதம் காது கேட்காது, வாய் பேச வராது. இவருக்கு கபாடி என்ற வார்த்தையைச் சொல்லித்தர 3 மாத காலம் தேவைப்பட்டது.

மற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பயிற்சியை வார்த்தை உச்சரிப்பால் சொல்லித் தருவேன். ஆனால், தர்ஷினிக்கு மட்டும் 6 கட்டங்களைப் போட்டு அதன் அடிப்படையில் 1. 2. 3 என்ற முறையில் சொல்லி பயிற்சியை ஆரம்பித்தேன். உதாரணமாக, 1ஆம் இடத்தில் இருந்து 3ஆம் இடத்தைத் தொடு என்ற முறையில் பயிற்சி அளித்தேன். மற்றவர்களைவிட மாற்றுத்திறனாளியான தர்ஷினி எளிதில் புரிந்துகொண்டு விளையாட ஆரம்பித்தாள்.

தற்போது எங்கள் அணியில் முதன்மையான வீராங்கனையாக திகழ்கிறார் தர்ஷினி. பாடிச் செல்வதிலும், பாய்ந்து ஆடுவதிலும் சிறந்து விளங்குகிறாள். தேசிய அளவிலான போட்டியில் பங்குபெற்று பதக்கமும் பெற்றுள்ளார்.

அனைத்துப் பிரிவுகளிலும் தேர்வாகி விளையாடி உள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தில் ஒட்டுமொத்த சிறந்த வீராங்கனையாக தேர்வு பெற்று தங்க நாணயம் முதல் பரிசாக பெற்றுள்ளார். இவர் விளையாடும் பல போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக தேர்வு பெற்றுள்ளார்.

அவரது குடும்பப் பின்னணியைப் பார்த்தோமானால் தாய் தந்தை இருவரும் கூலித்தொழிலாளிகள். தர்ஷினியைப் போன்று இலவச கல்வி பயின்று வரும் மாணவிகள் பயிற்சி செய்வதற்கு விளையாட்டு மைதானம் மற்றும் உணவு வசதியும் இல்லை. இது தொடர்ந்து கிடைத்தால் கண்டிப்பாக தர்ஷினி உள்பட பல மாணவிகள் இந்திய அளவில் தேர்வு பெற்று சாதிப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை அணுகும்போது, நீங்கள் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக இருந்து இந்த நல்ல காரியத்தைச் செய்துவருகிறீர்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் என்கிறார்களே தவிர இதுவரை போதுமான உதவி கிடைக்கவில்லை.’’ என்று ஆதங்கத்தை தெரிவித்தார் விஸ்வநாதன்.

‘‘தமிழக அரசு அடிமட்டத்திலுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து எந்த விளையாட்டில் அவர்களுக்கு ஆர்வம் உள்ளதோ அதில் சிறந்த பயிற்சியாளர்களைக்கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும்.

அமெரிக்கா, ஜெர்மனி, கொரியா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, இத்தாலி போன்ற மேலைநாடுகள் விளையாட்டுத்துறைக்கும் விஞ்ஞானத்துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்ததால் முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. அதனால் அந்த நாடுகள் பொருளாதாரத்திலும் வளர்ச்சிப் பெற்றுள்ளன.

பெற்றோர்களும், ஆசிரியர்களும் படி படி என்று மாணவர்களை வற்புறுத்துவதை விட்டுவிட்டு அவர்களுக்குள் இருக்கும் விளையாட்டுத் திறமைகளையும், பிற திறமைகளையும் அறிந்து வளர்க்க வேண்டும்.

இதில் அரசும் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். இது அரசின் கடமை. வெளிநாடுகளில் இவற்றை சரியாகச் செய்கிறார்கள். நாமும் விளையாட்டுத்துறையில் வெற்றியாளர்களை உருவாக்க கவனம் செலுத்தினால் பதக்கங்களை அள்ளலாம்... விளையாட்டிலும் வல்லரசாகலாம்.’’ என்று அறிவுரைகளோடு தன்னம்பிக்கையையும் விதைக்கிறார்.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக கபாடி வீராங்கனைகளுக்கு எந்தவித வேலைவாய்ப்பும் கொடுத்து உதவவில்லை. அரசு தாராளமாக கார்ப்பரேட் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டுவிளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குமாறு அவர்களை அறிவுறுத்த வேண்டும்.

ஏனென்றால், நமது உழைப்பில் வரும் பொருளாதாரம் வெளிநாட்டிற்குச் செல்கிறது. ஆதலால், ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனங்களும் விளையாட்டுத்துறைக்கும் கல்வித்துறைக்கும் உதவி செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்ய வேண்டும்.

உதாரணமாக, மாற்றுத்திறனாளியான தர்ஷினிக்கு அவளது விளையாட்டுத்திறன் மேம்படவும், வாழ்க்கைக்கு ஊன்றுகோலாகவும் ஒரு வேலை அவசியம் தேவைப்படுகிறது. திறமை படைத்திருந்தும் பொருளாதாரத்தால் பின்தங்கியவர்களை முன்னுக்கு கொண்டுவருவதில் தயக்கம் காட்டுவது நியாயமல்ல’’ என்று மனதில் பட்ட அத்தனை தகவல்களையும் கொட்டித் தீர்த்தார் மதர்லேண்ட்ஸ்போர்ட்ஸ் அகாடெமியின் பயிற்சியாளர் விஸ்வநாதன்.
   
மதர் லேண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடெமியின் கபாடி சாதனையாளர்கள்

* சி.மேகலா - தேசிய வீராங்கனை, பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் (அப்பா இல்லை)
*ம.வளர்மதி - மூன்றுமுறை தேசிய வீராங்கனை, பி.காம் (சி.ஏ) (பெற்றோர் கூலித்தொழிலாளி)
*பி.தர்ஷினி - மூன்றுமுறை தேசிய வீராங்கனை, பி.காம் (சி.ஏ), (பெற்றோர் கூலித்தொழிலாளி)
*ரம்யா - மூன்றுமுறை தேசிய வீராங்கனை, பி.காம் (சி.ஏ) (அப்பா இல்லை)
*சந்தியா - இரண்டுமுறை தேசிய வீராங்கனை, பி.காம் (அப்பா இல்லை)
*யாழினி  மாநில அளவிலான வீராங்கனை, பி.ஏ. ஆங்கிலம், (பெற்றோர் கூலி தொழிலாளி)
*சுருதி - மாநில அளவிலான வீராங்கனை, 12ம் வகுப்பு, (அப்பா இல்லை)
*குஷ்மா - பி.காம் (சி.ஏ), (பயிற்சி) (அப்பா இல்லை)
*கவுதமி - பி.பி.ஏ (சி.எ) (பயிற்சி) (பெற்றோர் கூலித்தொழிலாளி)
*சரண்ராஜ்  மாநில அளவிலான வீரர், (அப்பா இல்லை)
*சம்பத் - (மாற்றுத்திறனாளி) தேசிய அளவிலான வீரர்
*செல்வமணி - மூன்றுமுறை தேசிய அளவிலான வீரர்
*விஷ்ணு - தேசிய அளவிலான வீரர்
*உமாபதி - மாநில அளவிலான வீரர்  

கடற்படை கப்பல் பணிமனையில் பயிற்சிப் பணி!

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் பணிமனை ஒன்று விசாகப்பட்டினத்தில் செயல்படுகிறது. இந்தப் பணிமனைக்கான பயிற்சி மையமும் அங்கு இயங்குகிறது. நேவல் டாக்யார்டு அப்ரண்டிஸ் ஸ்கூல் எனப்படும் அந்தப் பணிமனையில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் பயிற்சிக்கு சேர்க்கப்பட்டுவருகிறார்கள். தற்போது 2019-20 மற்றும் 2020-21 ஆண்டுகளுக்கான பயிற்சி சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 275 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

எலக்ட்ரீசியன், எலக்ட்ரோபிளேட்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட், டூல் மெயின்டனன்ஸ், பெயின்டர், பேட்டன் மேக்கர், ஆர் அண்ட் ஏ.சி. மெக்கானிக், வெல்டர், கார்பென்டர், ஃபவுண்டரிமேன், போர்ஜர், ஹீட் டிரீட்டர், மெக்கானிக், ஷீட் மெட்டல் ஒர்க்கர், பைப் பிட்டர் போன்ற பிரிவில் ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஒவ்வொரு பிரிவுக்குமான பணியிட எண்ணிக்கை விவரத்தை இணையதள அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்தப் பயிற்சிப்பணியில் சேர விரும்புபவர்கள் 1.4.1998 மற்றும் 1.4.2005 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 1.4.1993-க்கு பின்னர் பிறந்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்துவிட்டு அதன் நகலுடன், குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பப் படிவத்தை கப்பல்தள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 5.12.2018. நகல் விண்ணப்பம் 12.12.2018-ம் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.
இது பற்றிய விரிவான விவரங்களை https://www.indiannavy.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

- தோ.திருத்துவராஜ்