பவர் லூம் நெசவாளர்களுக்கான கடன் திட்டங்கள்!நிதி வழிகாட்டல்

மத்திய மாநில அரசுகள் தொழில் நிறுவனங்களுக்கும் சிறு, குறு தொழில்முனைவோருக்கும் பல்வேறு திட்டங்கள் மூலம் கடன் வசதி செய்து தருகின்றன. உடல் உழைப்பும், தெளிவான திட்டமும், முழு முயற்சியும் இருந்தால் சுலாபமாக சுயமாகத் தொழில் தொடங்கி தொழில்முனைவோர் ஆகலாம்.

 பாரதப் பிரதமரின் முத்ரா வங்கி திட்டம்பவர் லூம் தொழில் விரிவுபடுத்த, புதியதாக அமைக்க அனைத்துத் தரப்பினருக்கும் தொழில் தொடங்க 20% மானியத்துடன் (அதிகபட்சம் 1 லட்சம்) பத்து லட்சம் வரை முத்ரா வங்கி திட்டத்தில் சொத்து பிணையம் இல்லாமல் கடன் பெறும் திட்டம்.

மத்திய அரசின் ஜவுளித் துறையானது ஜவுளி மேம்பாட்டிற்காக பவர் லூம் நெசவு தொழில்முனைவோருக்கும் நெசவுத் தொழில் செய்து வருபவருக்கும் பல வளர்ச்சி திட்டங்களைக் கொடுத்துள்ளது.

இதில் பாரதப் பிரதமரின் பவர் லூம் நெசவாளர் கடன் திட்டம் புதியதாக கொடுக்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோர்களும், சொந்தமாகத் தொழில், வியாபாரம் செய்பவர்களும் தொழிலை மேம்படுத்த பாரதப் பிரதமரின் முத்ரா வங்கி திட்டம் 2015-16 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதில் இதுவரை 7 கோடி பேருக்கும் மேல் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டம் இப்போது நெசவுத் தொழில் செய்பவர்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக பவர் லூம் போடுபவர்களுக்கும், ஏற்கனவே பவர் லூம் வைத்து விரிவுபடுத்துபவர்களுக்கும் PMMY  முத்ரா வங்கி மூலம் கடன் பெறலாம். மேலும் இவர்களுக்கு மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் 20% பயனாளியின் மூலதன பங்காக மானியமாக வழங்கும். இந்த மானியம் அதிகபட்சம் ரூபாய் 1 லட்சம் வரை வழங்கும்.

முத்ரா கடனில் கடன் வழங்கும் பட்சத்தில் இந்தக் கடன் ரூ.10 லட்சம் வரை எந்தவித சொத்துப் பிணையமும் இல்லாமல் கிடைக்கும். இதன் வட்டி விகிதம் வருடத்திற்கு 6% மட்டுமே இருக்கும். மீதமுள்ள வட்டியை ஜவுளித்துறை அமைச்சகம் வழங்கும். இந்த வட்டியானது 5 ஆண்டுகளுக்கு மட்டும் வழங்கப்படும்.

பயனாளிகள் யார் யார்..?
ஏற்கனவே பவர் லூம் தொழில் நடத்துபவர்கள், புதியதாக பவர் லூம் போடும் தொழில்முனைவோர், தொழில்முனைவோர் குழுவாக போடுபவர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள். மேற்கொண்டு முத்ரா வங்கியின் அனைத்து விவரங்களையும் அதற்கான தேவைகளையும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட எங்களது இணையப் பக்கத்தில் காணலாம்.

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்

பெண் தொழில்முனைவோர், SC/ST மற்றும் தொழில்முனைவோர் பவர் லூம் தொழில் தொடங்க சொத்துப் பிணையம் இல்லாமல் 25% மானியத்துடன் 1 கோடி வரை கடன் பெறும் திட்டம்.

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் மத்திய அரசால் பெண் தொழில்முனைவோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மலைவாழ் தொழில்முனைவோருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் பெறும் திட்டம். பெண் தொழில்முனைவோர் மற்றும் SC/ST தொழில்முனைவோரின் பங்கு 51%-க்கு மேல் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.

இத்திட்டத்தில் பயனாளிகள் 25% பங்கு கொண்டுவர வேண்டும். மத்திய அரசின் ஜவுளித்துறை பவர் லூம் தொழில்முனைவோரான பயனாளிகளுக்கு பங்கை மானியமாக அளிக்க புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். ஸ்டாண்ட் அப் திட்டத்தில் மானியமாக திட்ட மதிப்பில் 25% மற்றும் ரூபாய் 25 லட்சம் வரை மானியமாக பெறலாம்.

பயனாளிகளின் குறைந்தபட்ச பங்காக 10% இருந்தால் போதும். இந்தியாவில் இத்திட்டம் புதியது.
பயனாளிகள் யார் யார்..?

*புதியதாக தொழில் தொடங்குபவர்கள் மட்டும் இத்திட்டத்தில் கடன் பெறலாம்.
*பயனாளிகளின் குறைந்தபட்ச பங்காக 10% திட்ட மதிப்பில் கொண்டுவர வேண்டும்.
*இத்திட்டத்தில் திட்ட மதிப்பு ரூ. 1 கோடி வரை கடன் பெறலாம்.
*இதன் மானியமாக திட்ட மதிப்பில் 25% மற்றும் ரூபாய் 25 லட்சம் வரை மானியமாகப் பெறலாம்.
*பெண்களுக்கு ஜாதி அடிப்படை கிடையாது.

மேற்கண்ட இந்த இரண்டு திட்டங்களுக்கும் எந்தவித சொத்துப் பிணையமும் கொடுக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு வங்கியும் ஒரு பெண் தொழில்முனைவோருக்கும் ஒரு தாழ்த்தப்பட்ட மலைவாழ் தொழில் முனைவோருக்கும் கண்டிப்பாக கடன் கொடுக்க வேண்டும். மானியத்துடன் கடன்பெற பவர் லூம் தொழிலுக்கு மட்டும் பொருந்தும்.

மற்ற திட்டங்கள்

*சாதாரண பவர் லூம் தொழிலை மேம்படுத்த மானியத்துடன் கடன் திட்டம். (In-Situ Up gradation of Power Looms)
*4 பேருக்கு மேல் குழுவாக இணைந்து ஒர்க் செட் அமைக்கும் திட்டம் (Group Work Shed Scheme - GWS).
*நூல் வங்கித் திட்டம் (Yarn Bank Scheme).
*காமன் பெசிலிட்டி மையம் அமைக்கும் திட்டம் (Common Facility Centre - CFC)
*பவர் லூம் சூரிய ஒளி மின்சாரம் அமைக்கும் திட்டம் (Solar Energy Scheme for Power Looms).
*டெக்ஸ் வென்சர் கேபிட்டல் ஃபண்ட் திட்டம் (Tex Venture Capital Fund)
இந்தத் திட்டத்தில் புதிய கண்டுபிடிப்பு உள்ள குறு, சிறு தொழில்களுக்கு 50% வரை தொழில் முதலீட்டுக் கடன் அதிகபட்சம் ரூ.3 கோடி வரை பெறலாம்.
*சந்தை மேம்படுத்துதல் மற்றும் விளம்பரங்கள் செய்ய திட்டம் (Facilitation, IT, Awareness, Market Development and Publicity for Power Loom Schemes).
*பவர் லூம் மேம்படுத்துதல், இன்சூரன்ஸ் மற்றும் திறன் பயிற்சி அளிக்கவும் பல திட்டங்கள் வழங்கியுள்ளனர் (Grand-in-Aid and Modernization & Up gradation of Power Loom Service Centres PSCs ).திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும்படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பார்கள்.

-தோ.திருவரசு