செய்தித் தொகுப்புகேம்பஸ் நியூஸ்

தமிழகம் முழுவதும் விளையாட்டு மேம்பாட்டுப் பள்ளிகள்!

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக விளையாட்டு மேம்பாட்டுப் பள்ளிகள் அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் விளையாட்டு மைதானம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ள பள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அடுத்த லத்தேரி, ஆற்காடு அடுத்த திமிரி ஆகிய பகுதிகளிலுள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலிலிருந்து, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ஒரு பள்ளி தேர்வு செய்யப்பட்டு, விளையாட்டு மேம்பாட்டு பள்ளிகளாக மாற்றப்படும். இதற்காக முதல்கட்டமாக ரூ.96 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையில் விளையாட்டில் ஆர்வமுள்ள, தகுதியான 50 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு உணவு, தங்கும் வசதியுடன் விளையாட்டுப் பயிற்சியுடன் கூடிய கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து இதற்கான நிதியை அதிகரிக்க பரிசீலிக்கப்படும் என மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவர்களுக்கு கைகொடுக்கும் ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷன்!

தமிழகத்தின் ஏழு மாவட்டங்களை சூரையாடிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக சேவை அமைப்புகளும் செய்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் இயங்கி வரும் ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷனும் கல்லூரி மாணவர்களுக்கு கைகொடுக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் புத்தகங்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் உள்ள புத்தகங்களை வழங்கி உதவுகிறது.

உங்களுக்கு தெரிந்த கல்லூரி மாணவர்கள் யாரேனும் கஜா புயலினால் பாடப்புத்தகங்களை இழந்திருக்கிறார்களா? அவர்களுக்குப் புதிய புத்தகங்கள் வழங்க சென்னை ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷன் தயாராக இருக்கிறது.பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்களின் Course, College, Address Proof ஆகிய தகவல்களுடன் புயலில்  இழந்த புத்தகங்களின் விவரங்களை ஆனந்தம் அமைப்புக்கு E-mail, Whatsapp அல்லது கடிதம் வழியாக அனுப்புங்கள்.
E-mail :anandhamfoundation@gmail.com, Mobile: 95519 39551.

உதவி செய்த மாணவர்களுக்கு இளநீர் அனுப்பிய டெல்டா விவசாயிகள்!

தமிழகத்தின் 7 மாவட்டங்களை ‘கஜா’ புயல் புரட்டிப்போட்டு வாழ்வாதாரத்தையே நாசமாக்கிவிட்டது. அதிலும் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதாக விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட ஏராளமான கால்நடைகளும் இறந்துள்ளன.

ஒட்டுமொத்த தமிழகத்துக்கே உணவு ஆதாரமாக விளங்கும் டெல்டா பகுதி இப்படி உருக்குலைந்துள்ள வேளையிலும், டெல்டா விவசாயிகள் தங்களுடைய அன்பையும், ஈகைக் குணத்தையும் வெளிப்படுத்தி நெகிழ வைத்துள்ளனர்.‘கஜா’ புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி திருச்சி நேஷனல் கல்லூரி மாணவ, மாணவிகள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்ட வாகனத்தை வெறும் வண்டியாக அனுப்ப மனமில்லாத டெல்டா விவசாயிகள், அந்த வாகனம் முழுக்க இளநீர் நிரப்பி மீண்டும் அனுப்பிவைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம் நாடியம் கிராமத்தில் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையிலும், டெல்டா விவசாயிகள் உணவளிப்பவர்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணம் இச்சம்பவம் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் பல்வேறு வகைகளில் உதவிவருவது குறிப்பிடத்தக்கது.  

ஹார்வர்டு பல்கலையின் தலைவி இந்திய வம்சாவளி மாணவி!

அமெரிக்காவில் உள்ள, ஹார்வர்டு பல்கலை மாணவர் சங்கத் தலைவராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த, ஸ்ருதி பழனியப்பன், தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஜூலியா ஹியூஸா, 20, துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில், மதிப்புமிக்க கல்வி நிறுவனமான, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் இளங்கலைப் பிரிவு மாணவர் சங்க தேர்தல், சமீபத்தில் நடந்தது. இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, இருபது வயதான ஸ்ருதி பழனியப்பன், தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவர், 42 சதவீத ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். இவரது பெற்றோர், தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஸ்ருதியின் பெற்றோர்,
1992 முதல், அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.