குறைந்துபோன அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர் எண்ணிக்கை!வெளிநாட்டு படிப்பு

சர்வதேச தரத்திலான கல்வியை வழங்கும் பொருட்டு ஒவ்வொரு நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களிலும் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நம் நாட்டு மாணவர்கள் வெளிநாட்டிலும் வெளிநாட்டு மாணவர்கள் நம் நாட்டிலும் உயர்கல்வி கற்கின்றனர்.
அதன்படி வெளிநாட்டு மாணவர்கள் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களிலும், இந்திய மாணவர்கள் இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் போன்ற உலக பிரசித்தி பெற்ற கல்விநிறுவனங்களிலும் படித்துவருகின்றனர்.

இப்படி வெளிநாட்டுக் கல்விநிறுவனங்களில் உயர்கல்வி படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட இவ்வருடம் குறைந்துவிட்டதாக கூறுகிறது, ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையை ஆய்வு செய்யும் ‘ஓபன் டோர்ஸ்’ என்ற அமைப்பின் புள்ளிவிவரம்.

இந்தப் புள்ளிவிவரம் 2014-15 ஆண்டுகளில் 1,02,673 லிருந்து 1,32,888(29.4%) என்ற அளவிலும் 2016ம் ஆண்டில் 1,65,918 (24.85%) என்ற அளவிலும் அதிகரித்த அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை டிரம்ப் அதிபர் ஆன 2017ம் ஆண்டில் 12.26% என்ற அளவில் குறைந்துள்ளதாகக் கூறுகிறது. மேலும் 2017-18ம் ஆண்டுகளில் 10,004 (5.4%) மற்றும் இவ்வாண்டில் 8.8% என்ற அளவிலேயே இந்திய மாணவர்கள் படிப்பதாகக் கூறுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைவான வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு  டிரம்ப் அதிபர் ஆன பின்பு போடப்பட்ட கட்டுப்பாடுகள் மட்டுமே காரணமில்லை என்கிறார் இந்தியாவின் அமெரிக்க தூதரத் தலைவர் ராபர்ட் பர்கஸ். உலக அளவில் உள்ள சிறந்த மாணவர்களைக் கவர்வதற்கு உலக நாடுகளின் தரமான பல்கலை மற்றும் கல்விநிறுவனங்களுக்கிடையே போட்டிகள் அதிகரித்துள்ளது.

ஆகையால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், மாணவர்களின் ஆர்வம்,  ஒதுக்கப்படும் சீட்கள் மற்றும் உள்நாட்டிலேயே கிடைக்கும் தரமான கல்வி போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர் சேர்க்கை வளர்ச்சி விகிதம்  தடைப்படுகிறது என்கிறார் ராபர்ட் பர்கஸ்.

மேலும் ஆய்வில் கூறப்பட்டுள்ள, படிப்பு முடிந்த பிறகு உத்தரவாதமில்லாத வேலைவாய்ப்பு... மற்றும் கலைப் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது அமெரிக்காவில் கேள்விக்குறியாக உள்ளது என்பதற்கு விளக்கம் அளித்த பர்கஸ், அமெரிக்க கல்விநிறுவனங்கள் வேலைவாய்ப்பைகாட்டிலும் வழங்கப்படும் கல்வியின் தரத்தில்தான் அதிக முக்கியத்துவம் செலுத்துகின்றன.

ஏனெனில் சுயமாக சிந்தித்தல், நவீன அறிவு, பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் என ஒரு மாணவனின் தனித்த ஆளுமையை வளர்ப்பதும், மேம்படுத்துவதுமே எங்கள் கல்விக் கொள்கைகளாக இருக்கும்போது வேலைவாய்ப்பு என்பது அடுத்தபட்சம்தான். ஒரு மாணவனுக்கு அத்தியாவசிய தேவையும் அதுதான். அதையே எங்கள் தரமான கல்வியினால் வழங்க விழைகிறோம். இருப்பினும் எச்1 விசாக்கள் வழங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. வெளிநாட்டு மக்கள் அமெரிக்காவிற்கு வந்துகொண்டுதான் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

ஆயிரம்தான் காரணங்கள் சொன்னாலும் டிரம்ப்-ன் கெடுபிடிகளால் ஐடி துறையில் உள்ள இந்தியர்களுக்குத்தான் பிரச்னை என்று பார்த்தால் அங்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கும் சிக்கல்தான் போலிருக்கிறது. இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளை விட குறைந்துள்ளதாக காட்டும் ‘ஓப்பன் ரடோர்ஸின்’ புள்ளிவிவரம் அதை நிரூபிக்கும் விதமாக உள்ளது.

  - வெங்கட்