தனியார் துறை வேலைவாய்ப்புகளுக்கு இலவசப் பயிற்சி!



பயிற்சி

சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் எம்.சி.சி.(Model Career Centre) எனும் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மையம் இயங்கி வருகிறது.
இப்பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு வேலைகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தில் வேலைகளுக்கான இலவச பயிற்சியோடு தனியார் துறை வேலைவாய்ப்புகளுக்கும் இலவசமாக ஏற்பாடு செய்யப்படுகிறது.

வேலைகளுக்கான பயிற்சியையும் வேலைவாய்ப்பையும் பெறுவதற்கான வழிமுறையை இம்மையத்தின் தலைமை அதிகாரி எஸ்.பரமேஸ்வர் கூறுகையில், ‘‘காதி கே.டபிள்யூ.இ (GATI KWE), புளூ டார்ட் (BLUE DART ), ஃப்ளிப்கார்ட் (Flipkart), அமேசான் ( amazon), இகார்ட் (ekart ), டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் (TVS Logistics), வி.ஆர்.எல். லாஜிஸ்டிக்ஸ் (VRL Logistics), ஓ.எம். லாஜிஸ்டிக்ஸ் (OM Logistics) உள்ளிட்ட நிறுவனங்களில் பேக்கர்ஸ் வேலைக்கு ஏராளமான நபர்கள் தேவைப்படுகிறார்கள்.

இப்பணிகளில் சேர பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். பணியில் சேர விரும்புபவர்களுக்கு இம்மையத்தில் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தவுடன் 100 சதவிகிதம் உறுதிசெய்யப்பட்ட வேலை வழங்கப்படும்’’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.  

 வேலை தேடுபவர்கள் அனைவரும் www.mcc-centre.com-ல் பதிவு செய்து, பல்வேறு வேலைவாய்ப்புகளைப் பெறலாம். வேலை தேடுபவர்கள் இதில் பதிவு செய்தபின், அவர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மையத்தில் இலவச தொழில்நெறி ஆலோசனைகள், திறன் மதிப்பீடு, வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள், திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி வகுப்புகள், மென்திறன் பயிற்சிகள் மற்றும் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

நேர்முகத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் மையத்தில் நடத்தப்படுகின்றன. எங்களது www.mcc-centre.com வலைத்தளத்தில் பதிவு செய்து இலவசமாக பயன்பெறலாம். 044 - 22500540 என்ற தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்’’ என்கிறார் பரமேஸ்வர்.

- தோ.திருத்துவராஜ்